ஆதி 7

7
அத்தியாயம் 7
பெருவெள்ளம்
1யெகோவா நோவாவை நோக்கி: “நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் கப்பலுக்குள் செல்லுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். 2பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடு காக்கும்பொருட்டு, நீ சுத்தமான அனைத்து மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடியும், 3ஆகாயத்துப் பறவைகளிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள். 4இன்னும் ஏழுநாட்கள் சென்றபின்பு, 40 நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையைப் பெய்யச்செய்து, நான் உண்டாக்கின உயிரினங்கள் அனைத்தையும் பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்” என்றார். 5நோவா தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.
6வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா 600 வயதுள்ளவனாயிருந்தான். 7வெள்ளப்பெருக்கிற்குத் தப்பும்படி நோவாவும் அவனோடு அவனுடைய மகன்களும், அவனுடைய மனைவியும், அவனுடைய மகன்களின் மனைவிகளும் கப்பலுக்குள் சென்றார்கள். 8தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், 9ஆணும் பெண்ணும் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து, கப்பலுக்குள் சென்றன. 10ஏழுநாட்கள் சென்றபின்பு பூமியின்மேல் வெள்ளப்பெருக்கு உண்டானது. 11நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்த நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறந்தன. 12நாற்பது நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. 13அன்றையத்தினமே நோவாவும், நோவாவின் மகன்களாகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவனுடைய மகன்களின் மூன்று மனைவிகளும், கப்பலுக்குள் சென்றார்கள். 14அவர்களோடு வகைவகையான அனைத்துவிதக் காட்டுமிருகங்களும், வகைவகையான அனைத்துவித நாட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற வகைவகையான அனைத்துவித ஊரும் பிராணிகளும், வகைவகையான அனைத்துவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள அனைத்துவிதப் பறவைகளும் சென்றன. 15இப்படியே ஜீவசுவாசமுள்ள உயிரினங்களெல்லாம் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து கப்பலுக்குள் சென்றன. 16தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக அனைத்துவித உயிரினங்களும் உள்ளே சென்றன; அப்பொழுது யெகோவா அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார். 17வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது. 18தண்ணீர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது. 19தண்ணீர் பூமியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகியதால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. 20மூடப்பட்ட மலைகளுக்கு மேலாகப் 22 அடி உயரத்திற்குத் தண்ணீர் பெருகியது. 21அப்பொழுது உயிரினங்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் அனைத்தும், எல்லா மனிதர்களும், பூமியின்மேல் வாழ்கிறவைகள் அனைத்தும் இறந்தன. 22நிலப்பரப்பு எல்லாவற்றிலும் இருந்த உயிருள்ள அனைத்தும் இறந்துபோயின. 23மனிதர்கள்முதல் மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை, பூமியின்மீது இருந்த உயிருள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு, அவைகள் பூமியில் இல்லாமல் ஒழிந்தன; நோவாவும் அவனோடு கப்பலிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. 24தண்ணீர் பூமியை 150 நாட்கள் மூடிக்கொண்டிருந்தது.

Цяпер абрана:

ஆதி 7: IRVTam

Пазнака

Падзяліцца

Капіяваць

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце