யோவா 3

3
அத்தியாயம் 3
நிக்கொதேமுக்குப் போதனை
1யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். 2அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். 3இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 4அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான். 5இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன். 6சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும். 7நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்; 8காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். 9அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். 10இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா? 11உண்மையாகவே உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் பார்த்ததைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுகொள்ளுகிறது இல்லை. 12பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்? 13பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை. 14பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும், 15தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும்.
தேவனின் அன்பு
16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். 17உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான். 19ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது. 20தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
இயேசுவைக்குறித்து யோவான்ஸ்நானனின் சாட்சி
22இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார். 23சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். 24அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை. 25அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது. 26அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். 27யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான். 28நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். 29மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது. 30அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். 31உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர். 32தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை. 33அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான். 34தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். 35பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். 36குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

Цяпер абрана:

யோவா 3: IRVTam

Пазнака

Падзяліцца

Капіяваць

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце