யோவா 7

7
அத்தியாயம் 7
கிறிஸ்து தம் சகோதரர்களைக் கடிந்துகொள்ளுதல்
1இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினதால், அவர் யூதேயாவிலே வசிப்பதற்கு விருப்பம் இல்லாமல் கலிலேயாவிலே வசித்து வந்தார். 2யூதர்களுடைய கூடாரப்பண்டிகை நெருங்கியிருந்தது. 3அப்பொழுது அவருடைய சகோதரர்கள் அவரைப் பார்த்து: நீர் செய்கிற செயல்களை உம்முடைய சீடர்களும் பார்க்கும்படி, இந்த இடத்தைவிட்டு யூதேயாவிற்கு செல்லும். 4பிரபலமாக இருக்கவிரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்வதால் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். 5அவருடைய சகோதரர்களும் அவரை விசுவாசிக்காததினால் இப்படிச் சொன்னார்கள். 6இயேசு அவர்களைப் பார்த்து: என் நேரம் இன்னும் வரவில்லை, உங்களுடைய நேரமோ எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது. 7உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் செயல்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது என்று நான் சாட்சி கொடுக்கிறதினாலே அது என்னைப் பகைக்கிறது. 8நீங்கள் இந்த பண்டிகைக்குப் போங்கள்; என் நேரம் இன்னும் வராததினால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார். 9இவைகளை அவர்களிடம் சொல்லி, கலிலேயாவிலே தங்கிவிட்டார். 10அவருடைய சகோதரர்கள் போனபின்பு, அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாக பண்டிகைக்குப் போனார். 11பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கே இருக்கிறார் என்றார்கள். 12மக்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டானது. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படி இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள். 13ஆனாலும் யூதர்களுக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்து வெளிப்படையாக பேசவில்லை.
தேவாலயத்தில் இயேசுவின் போதனை
14பண்டிகையின் பாதிநாட்கள் முடிந்தபோது, இயேசு தேவாலயத்திற்குச் சென்று, போதனை செய்தார். 15அப்பொழுது யூதர்கள்: இவர் படிக்காதவராக இருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். 16இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என் உபதேசம் என்னுடையதாக இல்லாமல், என்னை அனுப்பினவருடையதாக இருக்கிறது. 17அவருடைய விருப்பத்தின்படிசெய்ய மனதுள்ளவன் எவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சொந்தமாக பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். 18சொந்தமாக பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மை உள்ளவனாக இருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. 19மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார். 20மக்கள் அவருக்கு மறுமொழியாக: நீ பிசாசு பிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள். 21இயேசு அவர்களைப் பார்த்து: ஒரே செயலை செய்தேன், அதைக்குறித்து எல்லோரும் ஆச்சரியப்படுகிறீர்கள். 22விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், முன்னோர்களால் உண்டானது; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனிதனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள். 23மோசேயின் நியாயப்பிரமாணம் மீறாமல் இருக்கும்படி ஓய்வுநாளில் மனிதன் விருத்தசேதனம் பெறலாம் என்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனிதனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா? 24தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றார்.
இயேசுதான் கிறிஸ்துவா?
25அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனைத்தானே கொலைசெய்யத் தேடுகிறார்கள்? 26இதோ, இவன் வெளிப்படையாக பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, உண்மையாக இவன் கிறிஸ்து தான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ? 27இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவன் என்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவர் என்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள். 28அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கும்போது சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் அறிவீர்கள்; நான் நானாகவே வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியம் உள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். 29நான் அவரால் வந்திருக்கிறதினாலும், அவர் என்னை அனுப்பி இருக்கிறதினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார். 30அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய நேரம் இன்னும் வராததினால் ஒருவனும் அவரைத் தொடவில்லை. 31மக்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைவிட அதிகமாகச் செய்வாரோ என்றார்கள். 32மக்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர்கள் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் காவலர்களை அனுப்பினார்கள். 33அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடுகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன். 34நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவும் கூடாது என்றார். 35அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் பார்க்காதபடிக்கு எங்கே போவார், கிரேக்கர்களுக்குள்ளே சிதறியிருக்கிற நமது மக்களிடம் போய், கிரேக்கர்களுக்கு உபதேசம் செய்வாரோ? 36நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 37பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும். 38வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். 39தம்மை விசுவாசிக்கிறவர்கள் பெற்றுக்கொள்ளப்போகிற ஆவியானவரைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாமல் இருந்ததினால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை. 40மக்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: உண்மையாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். 41வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? 42தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள். 43இவ்விதமாக அவரைக்குறித்து மக்களுக்குள்ளே பிரிவினை உண்டானது. 44அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க விருப்பமாக இருந்தார்கள்; ஆனாலும் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
யூதத் தலைவர்களுடைய அவிசுவாசம்
45பின்பு அந்தக் காவலர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் பரிசேயர்களிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களைப் பார்த்து: நீங்கள் அவனை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள். 46காவலர்கள் மறுமொழியாக: அந்த மனிதன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருபோதும் பேசினது இல்லை என்றார்கள். 47அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா? 48அதிகாரிகளிலாவது பரிசேயர்களிலாவது யாரேனும் ஒருவர் அவனை விசுவாசித்ததுண்டா? 49வேதத்தை அறியாதவர்களாகிய இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். 50இரவிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களில் ஒருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களைப் பார்த்து: 51ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனைத் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். 52அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறது இல்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள். 53பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.

Цяпер абрана:

யோவா 7: IRVTam

Пазнака

Падзяліцца

Капіяваць

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце