லூக் 21

21
அத்தியாயம் 21
விதவையின் காணிக்கை
1அவர் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, செல்வந்தர்கள் காணிக்கைப்பெட்டியிலே தங்களுடைய காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார். 2ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: 3இந்த ஏழை விதவை மற்றெல்லோரையும்விட அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 4அவர்களெல்லோரும் தங்களுடைய நிறைவிலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார்.
கடைசி காலத்திற்கான அடையாளங்கள்
5பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்து சிலர் சொன்னபோது, 6அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார். 7அவர்கள் அவரைப் பார்த்து: போதகரே, இவைகள் எப்பொழுது நடக்கும், இவைகள் நடக்கும் காலத்திற்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள். 8அதற்கு அவர்: நீங்கள் ஏமாற்றப்படாதபடிக்கு கவனமாக இருங்கள்; ஏனென்றால், அநேகர் வந்து என் நாமத்தை வைத்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் நெருங்கிவிட்டது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள். 9சண்டைகளையும் கலவரங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது பயப்படாமலிருங்கள்; இவைகள் முன்னதாக நடக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார். 10அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: மக்களுக்கு எதிராக மக்களும், தேசத்திற்கு எதிராக தேசமும் எழும்பும். 11பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். 12இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் ஆளுனர்கள் முன்பாகவும் உங்களைக் கொண்டுவந்து துன்பப்படுத்துவார்கள். 13ஆனாலும் அது நீங்கள் சாட்சி சொல்வதற்கு ஏதுவாக இருக்கும். 14ஆகவே, என்ன பதில் சொல்லுவோமென்று கவலைப்படாமலிருக்கும்படி உங்களுடைய மனதிலே தீர்மானம் செய்துகொள்ளுங்கள். 15உங்களுக்கு எதிராக இருக்கிறவர்கள் ஒருவரும் எதிர்த்துப் பேசவும் எதிர்த்து நிற்கவும் முடியாத வார்த்தையையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். 16பெற்றோராலும், சகோதரராலும், சொந்த மக்களாலும், நண்பர்களாலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். 17என் நாமத்தினாலே எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். 18ஆனாலும் உங்களுடைய தலைமுடியில் ஒன்றாவது அழியாது. 19உங்களுடைய பொறுமையினால் உங்களுடைய ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். 20எருசலேம் படைவீரர்களால் முற்றுகையிட்டிருப்பதை நீங்கள் பார்க்கும்போது, அதின் அழிவு நெருங்கிவிட்டதென்று தெரிந்துகொள்ளுங்கள். 21அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், கிராமத்திலிருக்கிறவர்கள் நகரத்தில் நுழையாமலிருக்கவும் வேண்டும். 22எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே. 23அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இக்கட்டும் இந்த மக்கள்மேல் தண்டனையும் உண்டாகும். 24வாளால் கொலை செய்யப்பட்டு விழுவார்கள், எல்லா நாடுகளுக்கும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவார்கள்; யூதரல்லாதவர்களின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் யூதரல்லாதவர்களால் மிதிக்கப்படும்.
கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளங்கள்
25 சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள மக்களுக்குத் தத்தளிப்பும் இக்கட்டும் உண்டாகும்; கடலும் அலைகளும் முழக்கமாக இருக்கும். 26வானத்தின் கோள்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனிதர்களுடைய இருதயம் சோர்ந்துபோகும். 27அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள். 28இவைகள் நடக்கத் தொடங்கும்போது, உங்களுடைய மீட்பு அருகிலிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள் என்றார். 29அன்றியும் அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். 30அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் பார்க்கும்போது வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிகிறீர்கள். 31அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, தேவனுடைய ராஜ்யம் நெருங்கிவிட்டதென்று அறியுங்கள். 32இவையெல்லாம் நடப்பதற்குமுன் இந்தச் சந்ததி அழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 33வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. 34உங்களுடைய இருதயங்கள் சாப்பாட்டு பிரியத்தினாலும் குடிவெறியினாலும் உலகக் கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினைக்காத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் கவனமாக இருங்கள். 35உலகமெங்கும் குடியிருக்கிற எல்லோர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். 36ஆகவே, இனி நடக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனிதகுமாரனுக்குமுன்பாக நிற்கத் தகுதியுள்ளவர்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்செய்து விழித்திருங்கள் என்றார். 37அவர் பகல் நேரங்களில் தேவாலயத்திலே போதகம் செய்துகொண்டும், இரவு நேரங்களில் வெளியேபோய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார். 38மக்களெல்லோரும் அவருடைய போதகத்தைக் கேட்பதற்காக அதிகாலமே தேவாலயத்திற்கு வருவார்கள்.

Цяпер абрана:

லூக் 21: IRVTam

Пазнака

Падзяліцца

Капіяваць

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце