YouVersion Logo
Search Icon

1 நாளா 16

16
அத்தியாயம் 16
தாவீதின் நன்றிப்பாடல்
1அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள். 2தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தி முடிந்தபின்பு, அவன் மக்களைக் யெகோவாவுடைய நாமத்திலே ஆசீர்வதித்து, 3ஆண்கள்துவங்கி பெண்கள்வரை, இஸ்ரவேலர்களாகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சைரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.
4இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கொண்டாடித் துதித்துப் புகழுவதற்குக் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகப் பணிவிடை செய்யும்படி லேவியர்களில் சிலரை நியமித்தான். 5அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாக இருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களை தட்டவும், 6பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர்கள் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.
7அப்படி ஆரம்பித்த அந்த நாளிலே யெகோவாவுக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடமும் அவனுடைய சகோதரர்களிடமும் கொடுத்த சங்கீதமாவது.
8யெகோவாவை துதித்து,
அவருடைய நாமத்தைத் தெரியப்படுத்துங்கள்;
அவருடைய செயல்களை மக்களுக்குள்ளே பிரபலப்படுத்துங்கள்.
9அவரைப் பாடி, அவரைத் துதித்து,
அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
10அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்;
யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
11யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்;
அவருடைய சமுகத்தை அனுதினமும் தேடுங்கள்.
12அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின்#16:12 ஆபிரகாமின் சந்ததியே!
அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!
13அவர் செய்த அதிசயங்களையும்
அவருடைய அற்புதங்களையும்
அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்புகளையும் நினைத்துப்பாருங்கள்.
14அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா;
அவருடைய நியாயத்தீர்ப்புகள்
பூமியெங்கும் விளங்கும்.
15ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையையும்,
ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,
16அவர் ஈசாக்குக்குக் கொடுத்த ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள்.
17அதை யாக்கோபுக்குக் கட்டளையாகவும்,
இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
18உங்கள் சுதந்திரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
19அந்தக் காலத்தில் அவர்கள் கொஞ்ச எண்ணிகையுள்ள மக்களும் பரதேசிகளுமாக இருந்தார்கள்.
20அவர்கள் ஒரு மக்களைவிட்டு மற்றொரு மக்களிடத்திற்கும்,
ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மற்றொரு தேசத்தார்களிடமும் போனார்கள்.
21அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல்,
அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு:
22நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும்,
என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.
23பூமியின் எல்லா குடிமக்களே, யெகோவாவைப் பாடி,
நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பை சுவிசேஷமாக அறிவியுங்கள்.
24தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும்,
எல்லா மக்களுக்குள்ளும்
அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
25யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்;
எல்லா தேவர்களைவிட பயப்படத்தக்கவர் அவரே.
26அனைத்து மக்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே;
யெகோவாவோ வானங்களை உண்டாக்கினவர்.
27மகிமையும் கனமும் அவருடைய சமூகத்தில் இருக்கிறது;
வல்லமையும் மகிழ்ச்சியும்
அவருடைய ஸ்தலத்தில் இருக்கிறது.
28மக்களின் வம்சங்களே,
யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;
கர்த்தருக்கே அதை செலுத்துங்கள்.
29யெகோவாவுக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி,
காணிக்கைகளைக் கொண்டுவந்து,
அவருடைய சந்நிதியில் நுழையுங்கள்;
பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.
30பூமியிலுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்;
அவர் உலகத்தை அசையாதபடி உறுதிப்படுத்துகிறவர்.
31வானங்கள் மகிழ்ந்து,
பூமி பூரிப்பதாக; யெகோவா ஆளுகைசெய்கிறார்
என்று தேசங்களுக்குள்ளே சொல்லப்படுவதாக.
32கடலும் அதின் நிறைவும் முழங்கி,
நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக.
33அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாகக்
காட்டுமரங்களும் முழக்கமிடும்;
அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.
34யெகோவாவை துதியுங்கள்,
அவர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது.
35எங்கள் இரட்சிப்பின் தேவனே,
நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி,
உம்மைத் துதிப்பதால் மேன்மைபாராட்டும்படி, எங்களை இரட்சித்து,
எங்களை சேர்த்துக்கொண்டு, மற்ற தேசங்களுக்கு எங்களை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லுங்கள்.
36இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு
சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக;”
அதற்கு மக்கள் எல்லோரும் ஆமென் என்று சொல்லிக் யெகோவாவை துதித்தார்கள்.”
37பின்பு பெட்டிக்கு முன்பாக என்றும் அன்றாட முறையாக பணிவிடை செய்யும்படி, அவன் அங்கே யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவனுடைய சகோதரர்களையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரர்களாகிய அறுபத்தெட்டுபேரையும் வைத்து, 38எதித்தூனின் மகனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான். 39கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகன பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனங்களை எப்பொழுதும், காலையிலும் மாலையிலும், யெகோவா இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் யெகோவாவுக்குச் செலுத்துவதற்காக, 40அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களையும் வைத்து, 41இவர்களோடு ஏமானையும், எதித்தூனையும், பெயர்பெயராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்ற சிலரையும்: யெகோவாவுடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும், 42பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் ஒலிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் மகன்களை வாசல் காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான். 43பின்பு மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன்னுடைய வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.

Currently Selected:

1 நாளா 16: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in