YouVersion Logo
Search Icon

1 கொரி 12

12
அத்தியாயம் 12
பரிசுத்த ஆவியானவரின் வரங்கள்
1அன்றியும், சகோதரர்களே, ஆவியானவருக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாமலிருக்க எனக்கு மனதில்லை. 2நீங்கள் தேவனை அறியாதவர்களாக இருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. 3ஆதலால், தேவனுடைய ஆவியானவராலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவன் என்று சொல்லமாட்டான் என்றும், பரிசுத்த ஆவியானவரைத்தவிர வேறு ஒருவனும் இயேசுவைக் கர்த்தரென்று சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 4வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. 5ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. 6கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லோருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. 7ஒவ்வொருவனுக்கும் அருளப்பட்ட ஆவியானவரின் வரங்கள் அனைவருடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. 8எப்படியென்றால், ஒருவனுக்கு ஆவியானவராலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே அறிவை உணர்த்தும் வசனமும், 9வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே குணமாக்கும் வரங்களும், 10வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல மொழிகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு மொழிகளை வியாக்கியானம் செய்தலும் அளிக்கப்படுகிறது. 11இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது விருப்பத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.
கிறிஸ்துவின் சரீரம்
12எப்படியென்றால், சரீரம் ஒன்று, அதற்கு உறுப்புகள் அநேகம்; ஒரே சரீரத்தின் உறுப்புகளெல்லாம் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றாகவே இருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். 13நாம் யூதர்களானாலும், கிரேக்கர்களானாலும், அடிமைகளானாலும், சுயாதீனர்களானாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் செய்யப்பட்டு, எல்லோரும் ஒரே ஆவியானவருக்குள்ளாகவே தாகம் தீர்க்கப்பட்டோம். 14சரீரமும் ஒரே உறுப்பாக இல்லாமல் அநேக உறுப்புகளாக இருக்கிறது. 15காலானது நான் கையாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ? 16காதானது நான் கண்ணாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ? 17சரீரம் முழுவதும் கண்ணாக இருந்தால், கேட்கும் திறன் எங்கே? அது முழுவதும் காதாக இருந்தால், மோப்பம் செய்யும் திறன் எங்கே? 18தேவன் தமது விருப்பத்தின்படி உறுப்புகள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். 19அவையெல்லாம் ஒரே உறுப்பாக இருந்தால், சரீரம் எங்கே? 20உறுப்புகள் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றே. 21கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு தேவையில்லையென்றும்; தலையானது கால்களைப் பார்த்து: நீங்கள் எனக்குத் தேவையில்லையென்றும் சொல்லமுடியாது. 22சரீர உறுப்புகளில் பலவீனமுள்ளவைகளாகக் காணப்படுகிறவைகளே மிகவும் தேவையானவைகளாக இருக்கிறது. 23மேலும், சரீர உறுப்புகளில் கனவீனமாகக் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்; 24நம்மில் இலட்சணமானவைகளுக்கு அலங்கரிப்பு தேவையில்லை. 25சரீரத்திலே பிரிவினை உண்டாகாமல், உறுப்புகள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாக இருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். 26ஆதலால் ஒரு உறுப்பு பாடுபட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து பாடுபடும்; ஒரு உறுப்பு மகிமைப்பட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து சந்தோஷப்படும். 27நீங்களே கிறிஸ்துவின் சரீரமாகவும், தனித்தனியே உறுப்புகளாகவும் இருக்கிறீர்கள். 28தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், உதவி செய்யும் ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித அந்நிய மொழிகளையும் ஏற்படுத்தினார். 29எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் தீர்க்கதரிசிகளா? எல்லோரும் போதகர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? 30எல்லோரும் குணமாக்கும் வரங்களை உடையவர்களா? எல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் வியாக்கியானம் செய்கிறார்களா? 31இப்படியிருக்க, முக்கியமான வரங்களை விரும்புங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.

Currently Selected:

1 கொரி 12: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 1 கொரி 12