YouVersion Logo
Search Icon

1 இராஜா 1

1
அத்தியாயம் 1
அதோனியா தன்னை இராஜாவாக ஏற்படுத்துதல்
1தாவீது ராஜா வயது முதிர்ந்தவனானபோது, துணிகளால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை. 2அப்பொழுது அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: ராஜாவிற்கு முன்பாக நின்று, அவருக்குப் பணிவிடை செய்யவும், ராஜாவாகிய எங்களுடைய எஜமானுக்கு சூடு உண்டாக உம்முடைய மடியிலே படுத்துக்கொள்ளவும் கன்னியாகிய ஒரு இளம்பெண்ணை ராஜாவாகிய எங்கள் எஜமானுக்குத் தேடுவோம் என்று சொல்லி, 3இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவிடம் கொண்டுவந்தார்கள். 4அந்தப் பெண் மிகவும் அழகாக இருந்தாள்; அவள் ராஜாவிற்கு உதவியாக இருந்து அவனுக்குப் பணிவிடை செய்தாள்; ஆனாலும் ராஜா அவளுடன் உறவுகொள்ளவில்லை. 5ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரை வீரர்களையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது வீரர்களையும் சம்பாதித்தான். 6அவனுடைய தகப்பன்: நீ ஏன் இப்படிச் செய்கிறாய் என்று அவனை ஒருபோதும் கண்டிக்கவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாக இருந்தான்; அப்சலோமுக்குப்பின்பு அவனுடைய தாய் அவனைப் பெற்றாள். 7அவன் செருயாவின் மகனாகிய யோவாபோடும், ஆசாரியனாகிய அபியத்தாரோடும் ஆலோசனை செய்துவந்தான்; அவர்கள் அவனோடு இருந்து அவனுக்கு உதவி செய்துவந்தார்கள். 8ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் மகனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதுடன் இருக்கிற பலசாலிகளும், அதோனியாவுக்கு துணைபோகவில்லை. 9அதோனியா என்ரோகேலுக்கு அருகிலுள்ள சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்து, ராஜாவின் மகன்களாகிய தன்னுடைய சகோதரர்கள் எல்லோரையும், ராஜாவின் வேலைக்காரர்களான யூதாவின் மனிதர்கள் அனைவரையும் அழைத்தான். 10தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், பெனாயாவையும், பலசாலிகளையும், தன்னுடைய சகோதரனாகிய சாலொமோனையும் அழைக்கவில்லை. 11அப்பொழுது நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய எஜமானாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் மகனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா? 12இப்போதும் உன்னுடைய உயிரையும் உன் மகனாகிய சாலொமோனின் உயிரையும் காப்பாற்றும்படி நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன். 13நீ தாவீது ராஜாவிடம் போய்: ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, எனக்குப்பின்பு உன்னுடைய மகனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று அவரிடத்தில் கேள். 14நீ அங்கே ராஜாவோடு பேசிக்கொண்டிருக்கும்போது, நானும் உனக்குப் பின்வந்து, உன்னுடைய வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான். 15அப்படியே பத்சேபாள் ராஜாவின் அறைக்குள் சென்றாள்; ராஜா மிகவும் வயதானவனாக இருந்தான்; சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாக் ராஜாவிற்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். 16பத்சேபாள் குனிந்து, ராஜாவை வணங்கினாள்; அப்பொழுது ராஜா: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். 17அதற்கு அவள்: என்னுடைய எஜமானே, எனக்குப்பின்பு உன்னுடைய மகனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய யெகோவாவைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே. 18இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என்னுடைய எஜமானாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை. 19அவன் மாடுகளையும் கொழுத்தக் கன்றுகளையும் ஆடுகளையும் மிகுதியாக அடித்து, ராஜாவின் மகன்கள் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும், யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான்; ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை. 20ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, ராஜாவாகிய என்னுடைய எஜமானுக்குப் பிறகு அவருடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பவன் யார் என்று தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரவேலர்கள் அனைவரின் கண்களும் உம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது. 21அறிவிக்காமற்போனால் ராஜாவாகிய என்னுடைய எஜமான் மரித்து முற்பிதாக்ககளைப் போல உலகத்தை விட்டு போனப் பின்பு, நானும் என்னுடைய மகனாகிய சாலொமோனும் குற்றவாளிகளாகக் கருதப்படுவோம் என்றாள். 22அவள் ராஜாவோடு பேசிக்கொண்டிருக்கும்போது, தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்தான். 23தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவிற்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவிற்கு முன்பாக வந்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான். 24நாத்தான்: ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, அதோனியா எனக்குப்பின்பு ராஜாவாகி, அவனே என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நீர் சொன்னது உண்டோ? 25அவன் இன்றையதினம் போய், மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும், ஆடுகளையும் மிகுதியாக அடித்து, ராஜாவின் மகன்கள் அனைவரையும் இராணுவத்தலைவர்களையும், ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான்; அவர்கள் அவனுக்கு முன்பாக சாப்பிட்டுக் குடித்து, ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள். 26ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் மகனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை. 27ராஜாவாகிய என்னுடைய எஜமானனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவன் இவன்தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காமலிருக்கும்போது, இந்தக் காரியம் ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்.
தாவீது சாலொமோனை இராஜாவாக்குதல்
28அப்பொழுது தாவீது ராஜா மறுமொழியாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜாவின் சமுகத்தில் வந்து ராஜாவிற்கு முன்பாக நின்றாள். 29அப்பொழுது ராஜா: உன்னுடைய மகனாகிய சாலொமோன் எனக்குப்பின்பு அரசாண்டு, அவனே என்னுடைய இடத்தில் என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை, 30என்னுடைய ஆத்துமாவை எல்லாப் பிரச்சனையிலிருந்தும் விலக்கி மீட்ட யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான். 31அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என்னுடைய எஜமானாகிய தாவீது ராஜா என்றைக்கும் வாழ்க என்றாள். 32பின்பு தாவீது ராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் மகன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான். 33அவர்கள் ராஜாவிற்கு முன்பாக வந்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய வேலைக்காரர்களைக் கூட்டிக்கொண்டு, என்னுடைய மகனாகிய சாலொமோனை என்னுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டுபோங்கள். 34அங்கே ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்யவேண்டும்; பின்பு எக்காளம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள். 35அதின் பின்பு அவன் நகர்வலம் வந்து, என்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என்னுடைய இடத்தில் ராஜாவாக இருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யெகோவா யூதாவின்மேலும் தலைவனாக இருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான். 36அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயா ராஜாவிற்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய தேவனாகிய யெகோவாவும் இப்படியே சொல்வாராக. 37ராஜாவாகிய என்னுடைய எஜமானோடு எப்படி இருந்தாரோ, அப்படியே அவர் சாலொமோனோடும் இருந்து, தாவீது ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய சிங்காசனத்தைவிட அவருடைய சிங்காசனத்தைப் பெரிதாக்குவாராக என்றான். 38அப்படியே ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், யோய்தாவின் மகன் பெனாயாவும், கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும் போய், சாலொமோனைத் தாவீது ராஜாவினுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு நடத்திக்கொண்டு போனார்கள். 39ஆசாரியனாகிய சாதோக்கு தைலக் கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்செய்தான்; அப்பொழுது எக்காளம் ஊதி, மக்களெல்லோரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள். 40பின்பு மக்களெல்லோரும் அவன் பின்னே போனார்கள்; மக்கள் நாதசுரங்களை ஊதி, பூமி அவர்கள் சத்தத்தினால் அதிரும்படி மிகவும் பூரிப்பாகச் சந்தோஷித்தார்கள். 41அதோனியாவும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் சாப்பிட்டு முடித்தபோது, அதைக் கேட்டார்கள்; யோவாப் எக்காள சத்தத்தைக் கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான். 42அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியனாகிய அபியத்தாரின் மகன் யோனத்தான் வந்தான்; அப்பொழுது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டுவருகிறவன் என்றான். 43யோனத்தான் அதோனியாவுக்கு மறுமொழியாக: ஏது, தாவீது ராஜாவாகிய நம்முடைய எஜமான் சாலொமோனை ராஜாவாக்கினாரே. 44ராஜா ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் மகன் பெனாயாவையும், கிரேத்தியர்களையும் பிலேத்தியர்களையும் அவனோடு அனுப்பினார்; அவர்கள் அவனை ராஜாவுடைய கோவேறு கழுதையின்மேல் ஏற்றினார்கள். 45ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனைக் கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள்; நகரமெல்லாம் அதிரத்தக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடு புறப்பட்டுப்போனார்கள்; நீங்கள் கேட்ட சத்தம் அதுதான். 46அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்திற்குரிய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறான். 47ராஜாவின் ஊழியக்காரர்களும் தாவீது ராஜாவாகிய நம்முடைய எஜமானனை வாழ்த்த வந்து: தேவன் சாலொமோனின் பெயரை உம்முடைய பெயரைவிட பிரபலப்படுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைவிட பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார். 48பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என்னுடைய சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச்செய்த இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான். 49அப்பொழுது அதோனியாவின் விருந்தாளிகளெல்லோரும் அதிர்ந்து எழுந்து, அவரவர் தங்கள் வழியே போய்விட்டார்கள். 50அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்#1:50 பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான் யாத்திராகமம் 21:1,314 படி பலிபீடத்தின் கொம்புகளை பிடித்து கொள்கிறவன் கொல்லப்படக்கூடாது. . 51இதோ, அதோனியா ராஜாவாகிய சாலொமோனுக்குப் பயப்படுகிறான் என்றும், இதோ, அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, ராஜாவாகிய சாலொமோன் தமது அடியானைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக என்கிறான் என்றும், சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது. 52அப்பொழுது சாலொமோன்: அவன் தன்னை யோக்கியன் என்று காண்பித்தால் அவன் தலைமுடியில் ஒன்றும் தரையிலே விழாது; அவனிடம் தீமை காணப்பட்டால், அவன் சாகவேண்டும் என்றான். 53அவனை பலிபீடத்திலிருந்து கொண்டுவர, ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து, ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்; சாலொமோன் அவனைப் பார்த்து: உன்னுடைய வீட்டிற்குப் போ என்றான்.

Currently Selected:

1 இராஜா 1: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 1 இராஜா 1