YouVersion Logo
Search Icon

2 நாளா 18

18
அத்தியாயம் 18
ஆகாபுக்கு எதிராகச் சொல்லப்பட்ட மிகாயாவின் தீர்க்கதரிசனங்கள்
1யோசபாத்திற்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் இருந்தது; அவன் ஆகாபோடு சம்பந்தம் கலந்து, 2சில வருடங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடம் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற மக்களுக்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை இணங்கச் செய்தான். 3எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு என்னோடு வருகிறீரா என்று கேட்டதற்கு அவன்: நான் தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், உம்மோடுகூட போருக்கு வருகிறேன் என்றான். 4மேலும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்துத் தெரிந்துகொள்ளும் என்றான். 5அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் போர்செய்யப் போகலாமா, போகக்கூடாதா என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்: போங்கள், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். 6பின்பு யோசபாத்: நாம் விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கு இவர்களைத்தவிர யெகோவாவுடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான். 7அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: யெகோவாவிடத்தில் விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கு இம்லாவின் மகனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான். 8அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, மந்திரிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் மகனாகிய மிகாயாவைச் சீக்கிரமாக அழைத்துவா என்றான். 9இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் நுழைவாயிலுக்கு முன்னிருக்கும் விசாலமான இடத்திலே ராஜஉடை அணிந்துகொண்டவர்களாக, அவரவர் தம்தம் சிங்காசனத்திலே உட்கார்ந்திருந்தார்கள்; அனைத்து தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 10கேனானாவின் மகனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியர்களை முட்டி அழித்துப்போடுவீர் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். 11அனைத்து தீர்க்கதரிசிகளும் அதற்கு ஏற்றவாறு தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போங்கள், உங்களுக்கு வாய்க்கும், யெகோவா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். 12மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடனே பேசி: இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஒன்றுபோலவே ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவருடைய வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான். 13அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 14அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் போர்செய்யப் போகலாமா, போகக்கூடாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; அவர்கள் உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றான். 15ராஜா அவனைப் பார்த்து: நீ யெகோவாவுடைய நாமத்திலே உண்மையைத் தவிர வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடி, நான் எத்தனைமுறை உனக்கு ஆணையிடவேண்டும் என்று சொன்னான். 16அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லோரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது யெகோவா: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்கு சமாதானத்தோடு திரும்பிப் போகட்டும் என்றார் என்று சொன்னான். 17அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடு சொல்லவில்லையா என்றான். 18அப்பொழுது மிகாயா சொன்னது: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; யெகோவா தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவருடைய வலதுபக்கத்திலும் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். 19அப்பொழுது யெகோவா: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்கு போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். 20அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று: நான் அவனுக்கு போதனைசெய்வேன் என்றது; எதனால் என்று யெகோவா அதைக் கேட்டார். 21அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச் செய்வாய்; போய் அப்படியே செய் என்றார். 22ஆகவே யெகோவா பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; யெகோவா உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான். 23அப்பொழுது கேனானாவின் மகனாகிய சிதேக்கியா அருகில் வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, யெகோவாவுடைய ஆவி எந்த வழியாக என்னைவிட்டு உன்னோடு பேசும்படி வந்தது என்றான். 24அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான். 25அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடமும், இளவரசனாகிய யோவாசிடமும் திரும்பக் கொண்டுபோய், 26அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடு திரும்பிவரும்வரை, அவனுக்குக் குறைந்த அளவு அப்பத்தையும், தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான். 27அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடு திரும்பிவந்தால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை என்று சொல்லி; மக்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள் என்றான்.
ராமோத் கீலேயாத்திலே ஆகாப் கொல்லப்படுதல்
28பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனார்கள். 29இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து: நான் மாறுவேடத்தில் போருக்குப் போவேன்; நீரோ ராஜஉடை அணிந்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா மாறுவேடத்தில் போருக்குப் போனான். 30சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் போர்செய்யாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடுமாத்திரம் போர்செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான். 31ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் கண்டபோது, இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று நினைத்துப் போர்செய்ய அவனை சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்; யெகோவா அவனுக்கு உதவி செய்தார்; அவர்கள் அவனைவிட்டு விலகும்படி தேவன் செய்தார். 32இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர்கள் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள். 33ஒருவன் தற்செயலாக வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலேபட்டது; அப்பொழுது அவன் தன் இரத ஓட்டியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்திற்கு வெளியே கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான். 34அன்றையதினம் போர் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியர்களுக்கு எதிராக இரதத்தில் மாலைவரை இருந்து, சூரியன் மறையும்போது இறந்துபோனான்.

Currently Selected:

2 நாளா 18: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 2 நாளா 18