YouVersion Logo
Search Icon

2 சாமு 17

17
அத்தியாயம் 17
தாவீது யோர்தானைக் கடந்து செல்லுதல்
1பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் 12,000 பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இரவு தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும். 2அவன் களைத்தவனும் கை வலிமையற்றவனுமாக இருக்கும்போது, நான் அவனிடம் போய், அவனைத் திடுக்கிடும்படிச் செய்வேன்; அப்பொழுது அவனோடு இருக்கும் மக்கள் எல்லோரும் பயந்து ஓடிப்போவதால், நான் ராஜாவைமட்டும் வெட்டி, 3மக்களை எல்லாம் உம்முடைய பக்கமாகத் திரும்பச்செய்வேன், இப்படிச் செய்ய நீர் முயற்சித்தால், எல்லோரும் திரும்பினபின்பு மக்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான். 4இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும், இஸ்ரவேலுடைய எல்லா மூப்பர்களின் பார்வைக்கும் நலமாகத் தோன்றியது. 5ஆனாலும் அப்சலோம்: அற்கியனான ஊசாயைக் கூப்பிட்டு, அவன் சொல்வதையும் கேட்போம் என்றான். 6ஊசாய் அப்சலோமிடம் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இப்படியாக அகித்தோப்பேல் சொன்னான்; அவனுடைய வார்த்தையின்படி செய்வோமா? அல்லது, நீ சொல் என்றான். 7அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்தமுறை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான். 8மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவனுடைய மனிதர்களும் பெலசாலிகள் என்றும், காட்டிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல கோபமுள்ளவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாக இருக்கிறார்; அவர் இரவில் மக்களோடு தங்கமாட்டார். 9இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறு எந்த இடத்திலாவது ஒளிந்திருப்பார்; ஆரம்பத்திலே நம்முடையவர்களில் சிலர் தாக்கப்பட்டார்கள் என்றால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமுக்குப் பின்செல்லுகிற வீரர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பார்கள். 10அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கு இணையான இருதயமுள்ள பலவானாக இருக்கிறவனும்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் வல்லமையுள்ளவன் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அறிவார்கள். 11ஆதலால் நான் சொல்லுகிற ஆலோசனை என்னவென்றால், தாண்முதல் பெயெர்செபாவரை இருக்கிற கடற்கரை மணலைப்போல திரளான இஸ்ரவேலர்கள் எல்லோரும் உம்முடைய அருகில் சேர்க்கப்பட்டு, நீரும் யுத்தத்திற்குப் போகவேண்டும். 12அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எந்த இடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம்; அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனிதர்களிலும் ஒருவனும் அவருக்கு மீதியாக இருப்பதில்லை. 13ஒரு பட்டணத்திற்குள் நுழைந்தால், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப் போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் இல்லாமற்போகும்வரை, அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான். 14அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைவிட அற்கியனான ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி யெகோவா அப்சலோமின்மேல் தீங்கு வரச்செய்வதற்காக, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அழிக்கிறதற்குக் யெகோவா கட்டளையிட்டார். 15பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இதன் இதன்படி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பர்களுக்கும் ஆலோசனை சொன்னான்; நானோ இதன் இதன்படி ஆலோசனை சொன்னேன். 16இப்பொழுதும் நீங்கள் சீக்கிரமாகத் தாவீதுக்கு அறிவிக்கும்படிச் செய்தி அனுப்பி; நீர் இன்று இரவு வனாந்திரத்தின் பள்ளத்தாக்கிலே தங்கவேண்டாம்; நீரும் உம்மோடிருக்கிற எல்லா மக்களும் ராஜாவால் விழுங்கப்படாதபடித் தாமதம் இல்லாமல் அக்கரைக்குப் போகவேண்டும் என்று சொல்லச்சொல்லுங்கள் என்றான். 17யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் நுழைவதை யாரும் காணாதபடி, என்ரோகேல் அருகில் நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீது ராஜாவுக்கு அதை அறிவிக்கப் போனார்கள். 18ஒரு வாலிபன் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால் அவர்கள் இருவரும் சீக்கிரமாகப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனிதனுடைய வீட்டிற்குள் நுழைந்தார்கள்; அவனுடைய முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள். 19வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றின்மேல் விரித்து, அவர்கள் உள்ளே இருக்கிறதைத் தெரியாதபடி, அதின்மேல் தானியத்தைப் பரப்பிவைத்தாள். 20அப்சலோமின் மனிதர்கள் அந்தப் பெண்ணிடம் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்தப் பெண்: வாய்க்காலுக்கு அந்தப் பக்கத்திற்கு போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடியும் காணாமல், எருசலேமுக்குத் திரும்பினார்கள். 21இவர்கள் போனபின்பு, அவர்கள் கிணற்றிலிருந்து ஏறிவந்து, தாவீது ராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி: சீக்கிரமாக எழுந்து ஆற்றைக் கடந்துபோங்கள்; இதன்படி அகித்தோப்பேல் உங்களுக்கு எதிராக ஆலோசனை சொன்னான் என்றார்கள். 22அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த எல்லா மக்களும் எழுந்து யோர்தான் நதியைக் கடந்துபோனார்கள்; பொழுதுவிடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடந்துபோகாதவன் ஒருவனும் இல்லை. 23அகித்தோப்பேல் தன்னுடைய யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன்னுடைய கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன்னுடைய ஊரிலிருக்கிற தன்னுடைய வீட்டுக்குப் போய், தன்னுடைய வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, தூக்குப்போட்டு இறந்தான்; அவன் தகப்பனுடைய கல்லறையில் அவனை அடக்கம்செய்தார்கள். 24தாவீது மகனாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் எல்லா இஸ்ரவேலர்களோடும் யோர்தானைக் கடந்தான். 25அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக ஆக்கினான்; இந்த அமாசா, நாகாசின் மகளும், செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமான அபிகாயிலை திருமணம் செய்த இஸ்ரவேலனான#17:25 இஸ்மாவேலுடைய எத்திரா என்னும் பெயருள்ள ஒருவனுடைய மகனாக இருந்தான். 26இஸ்ரவேல் மக்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே முகாமிட்டார்கள். 27தாவீது மகனாயீமை அடைந்தபோது, அம்மோனியர்கள் தேசத்து ரப்பா பட்டணத்தானான சோபி என்னும் நாகாசின் மகனும், லோதேபார் ஊரைச்சேர்ந்த அம்மியேலின் மகன் மாகீரும், ரோகிலிம் ஊரைச்சேர்ந்தவனும் கீலேயாத்தியனுமான பர்சிலாயியும், 28மெத்தைகளையும், போர்வைகளையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயிற்றையும், பெரும் பயிற்றையும், சிறு பயிற்றையும், வறுத்த சிறு பயிற்றையும், 29தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடு இருந்த மக்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தார்கள்; அந்த மக்கள் வனாந்திரத்திலே பசியும், களைப்பும், தாகமாகவும் இருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள்.

Currently Selected:

2 சாமு 17: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 2 சாமு 17