YouVersion Logo
Search Icon

அப் 4

4
அத்தியாயம் 4
யூத ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக பேதுருவும், யோவானும்
1பேதுருவும் யோவானும் மக்களுடனே பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியர்களும் தேவாலயத்துப் படைத்தலைவனும் சதுசேயர்களும் அவர்களிடத்தில் வந்து, 2அவர்கள் மக்களுக்கு போதிக்கிறதினாலும், இயேசுவை முன்வைத்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், கோபமடைந்து, 3அவர்களைப் பிடித்து, மாலைநேரமாக இருந்தபடியினால், மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். 4வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்களுடைய தொகை ஏறக்குறைய ஐயாயிரமாக இருந்தது. 5மறுநாளிலே மக்களுடைய அதிகாரிகளும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும், 6பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் அனைவரும் எருசலேமிலே கூடிவந்து, 7அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள். 8அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்து, அவர்களை நோக்கி: மக்களின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே, 9வியாதியாக இருந்த இந்த மனிதனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் சுகமானான் என்று நீங்கள் இன்று எங்களிடம் விசாரித்துக்கேட்டால், 10உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவருமாக இருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சுகமாக்கப்பட்டவனாக நிற்கிறானென்று உங்களெல்லோருக்கும், இஸ்ரவேல் மக்களெல்லோருக்கும் தெரிந்திருக்கக்கடவது. 11வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாக நினைக்கப்பட்ட அவரே அஸ்திபாரத்திற்கு முதற்கல்லானவர். 12அவரைத்தவிர வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமம்தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவுமில்லை என்றான். 13பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள். 14சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமற்போனது. 15அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: 16இந்த மனிதர்களை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. 17ஆனாலும் இது அதிகமாக மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாக எச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு, 18அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எதையும் பேசவும், போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். 19பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைவிட உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்குமுன்பாக நியாயமாக இருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். 20நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். 21நடந்த சம்பவங்களைக்குறித்து எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், மக்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வழியொன்றும் இல்லாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். 22அற்புதமாகச் சுகமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாக இருந்தான்.
விசுவாசிகளின் ஜெபம்
23அவர்கள் விடுதலையாக்கப்பட்டப்பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அறிவித்தார்கள். 24அவர்கள் அதைக்கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனாக இருக்கிறீர்.
25யூதரல்லாதோர் கோபமடைந்து,
மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும்,
26கர்த்தருக்கு விரோதமாகவும்
அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று,
அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள் என்றும்
தேவரீர் உம்முடைய அடியானாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
27அந்தப்படி உம்முடைய கரமும்
உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
28ஏரோதும் பொந்தியுபிலாத்தும்,
யூதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுகூட,
நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவிற்கு விரோதமாக,
மெய்யாகவே கூட்டம் கூடினார்கள்.
29இப்பொழுதும், கர்த்தாவே,
அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,
30உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கும்படிச் செய்து,
நோயாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி,
உம்முடைய ஊழியக்காரர்கள் உம்முடைய வசனத்தை
முழு தைரியத்தோடு சொல்லும்படி அவர்களுக்கு உதவி செய்தருளும்” என்றார்கள்.
31அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள்.
விசுவாசிகளின் ஐக்கியம்
32திரளான விசுவாசக் கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; அனைத்தும் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது. 33கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த உறுதியாக சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லோர்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது. 34நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் தொகையைக் கொண்டுவந்து, 35அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவைக்குத்தக்கதாகப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாக இருந்ததில்லை. 36சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலர்களாலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபெயர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், 37தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.

Currently Selected:

அப் 4: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in