YouVersion Logo
Search Icon

அப் 5

5
அத்தியாயம் 5
அனனியாவும், சப்பீராளும்
1அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்களுடைய சொத்துக்களை விற்றார்கள். 2தன் மனைவியின் சம்மதத்தோடு அவன் விற்ற பணத்திலே ஒரு பங்கை மறைத்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான். 3பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, சொத்தை விற்றதில் ஒரு பங்கை மறைத்துவைத்து, பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? 4அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றப்பின்பும் அதின் கிரயப்பணம் உன்னிடத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணம் கொண்டதென்ன? நீ மனிதனிடத்தில் இல்லை, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். 5அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே, கீழே விழுந்து மரித்துப்போனான். இவைகளைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகுந்த பயமுண்டானது. 6வாலிபர்கள் எழுந்து, அவனைத் துணியில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள். 7ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். 8பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவிற்குத்தான் விற்றீர்களா என்று எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவிற்குத்தான் என்றாள். 9பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் கணவனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான். 10உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து மரித்துப்போனாள். வாலிபர்கள் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய கணவனருகே அடக்கம்பண்ணினார்கள். 11சபையாரெல்லோருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற எல்லோருக்கும், மிகுந்த பயமுண்டானது.
அப்போஸ்தலர்கள் அநேகரைக் குணமாக்குதல்
12அப்போஸ்தலர்களுடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் மக்களுக்குள்ளே செய்யப்பட்டது. சபையாரெல்லோரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் கூடியிருந்தார்கள். 13மற்றவர்களில் ஒருவரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. ஆனாலும் மக்கள் அவர்களைப் புகழ்ந்தார்கள். 14அநேக ஆண்களும், பெண்களும் விசுவாசமுள்ளவர்களாகி கர்த்தரிடத்தில் அதிகமதிகமாகச் சேர்க்கப்பட்டார்கள். 15சுகவீனமானவர்களைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகும்போது அவனுடைய நிழலாவது அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். 16சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் சுகவீனமானவர்களையும் அசுத்தஆவிகளால் துன்புறுத்தப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லோரும் குணமாக்கப்பட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் துன்பப்படுத்தப்படுதல்
17அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்த சதுசேய சமயத்தினர் அனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, 18அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். 19கர்த்தருடைய தூதன் இரவிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து: 20நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவனுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள் என்றான். 21அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்து போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தினரையும் இஸ்ரவேல் கோத்திரத்தின் மூப்பர்களெல்லோரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களை அழைத்துவரும்படி சிறைச்சாலைக்கு அதிகாரிகளை அனுப்பினார்கள். 22அதிகாரிகள் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து: 23சிறைச்சாலை மிகுந்த பத்திரமாகப் பூட்டப்பட்டிருக்கவும், காவல்காரர்கள் வெளியே கதவுகளுக்கு முன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள். 24இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற படைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இது என்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள். 25அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனிதர்கள் தேவாலயத்திலே நின்று மக்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான். 26உடனே படைத்தலைவன் அதிகாரிகளோடுகூடப்போய், மக்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான். 27அப்படி அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: 28நீங்கள் இயேசுவின் நாமத்தைக்குறித்து போதகம்பண்ணக்கூடாது என்று நாங்கள் உங்களுக்கு உறுதியாகக் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்களுடைய போதகத்தினாலே நிரப்பி, அந்த மனிதனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். 29அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும்: மனிதர்களுக்குக் கீழ்ப்படிகிறதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாக இருக்கிறது. 30நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த இயேசுவை நம்முடைய முற்பிதாக்களின் தேவன் எழுப்பி, 31இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார். 32இந்தச் செய்திகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவரும் சாட்சி என்றார்கள். 33அதை அவர்கள் கேட்டபொழுது, மிகுந்த கோபமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணினார்கள். 34அப்பொழுது அனைத்து மக்களாலும் கனம்பெற்ற வேதபண்டிதர் கமாலியேல் என்னும் பெயர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலர்களைக் கொஞ்சநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி, 35சங்கத்தினரை நோக்கி: இஸ்ரவேலர்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். 36ஏனென்றால், இந்த நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அவன் மரித்துப்போனான்; அவனை நம்பின அனைவரும் சிதறிப்போனார்கள். 37அவனுக்குப்பின்பு, மக்களைக் கணக்கெடுக்கும் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக மக்களை இழுத்தான்; அவனும் மரித்துப்போனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறிப்போனார்கள். 38இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறது என்னவென்றால் இந்த மனிதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தச் செயல்களும் மனிதர்களால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோகும்; 39தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் முடியாது; தேவனோடு போர் செய்யாதவர்களாக இருக்கும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். 40அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலர்களை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். 41அவருடைய நாமத்துக்காக தாங்கள் அவமானமடைவதற்குத் தகுதியானவர்களாக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாக ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், 42தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள்.

Currently Selected:

அப் 5: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for அப் 5