YouVersion Logo
Search Icon

பிரச 3

3
அத்தியாயம் 3
எல்லாவற்றிற்கும் காலம்
1ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலம் உண்டு; வானத்தின் கீழ் இருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரம் உண்டு.
2பிறக்க ஒரு காலம் உண்டு, இறக்க ஒரு காலம் உண்டு;
நட ஒரு காலம் உண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலம் உண்டு;
3கொல்ல ஒரு காலம் உண்டு, குணமாக்க ஒரு காலம் உண்டு;
இடிக்க ஒரு காலம் உண்டு, கட்ட ஒரு காலம் உண்டு;
4அழ ஒரு காலம் உண்டு, சிரிக்க ஒரு காலம் உண்டு;
புலம்ப ஒரு காலம் உண்டு, நடனமாட ஒரு காலம் உண்டு;
5கற்களை எறிந்துவிட ஒரு காலம் உண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலம் உண்டு;
தழுவ ஒரு காலம் உண்டு, தழுவாமல் இருக்க ஒரு காலம் உண்டு;
6தேட ஒரு காலம் உண்டு, இழக்க ஒரு காலம் உண்டு;
காப்பாற்ற ஒரு காலம் உண்டு, எறிந்துவிட ஒரு காலம் உண்டு;
7கிழிக்க ஒரு காலம் உண்டு, தைக்க ஒரு காலம் உண்டு;
மவுனமாக இருக்க ஒரு காலம் உண்டு, பேச ஒரு காலம் உண்டு;
8நேசிக்க ஒரு காலம் உண்டு, பகைக்க ஒரு காலம் உண்டு;
யுத்தம்செய்ய ஒரு காலம் உண்டு, சமாதானப்படுத்த ஒரு காலம் உண்டு.
9வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு
அதினால் பலன் என்ன? 10மனிதர்கள் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.
11அவர் அனைத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்களுடைய உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆரம்பம்முதல் முடிவுவரை செய்துவரும் செயல்களை மனிதன் கண்டுபிடிக்கமாட்டான். 12மகிழ்ச்சியாக இருப்பதும் உயிரோடிருக்கும்போது நன்மைசெய்வதையும்தவிர, வேறொரு நன்மையும் மனிதனுக்கு இல்லையென்று அறிந்தேன். 13அன்றியும் மனிதர்கள் எல்லோரும் சாப்பிட்டுக் குடித்து தங்களுடைய எல்லா பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது தேவனுடைய வெகுமதி. 14தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடு ஒன்றும் கூட்டவும் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவும் கூடாது; மனிதர்கள் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார். 15முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்பே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார். 16பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நீதிமன்றத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது, நீதிமன்றத்தையும் கண்டேன். அங்கே அநீதி இருந்தது; 17எல்லா எண்ணங்களையும் எல்லா செயல்களையும் நியாயந்தீர்க்கும்காலம் இனி இருக்கிறபடியால் நீதிமானையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன். 18மனிதர்கள் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படி தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனிதர்களுடைய நிலைமையைக்குறித்து என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன். 19மனிதர்களுக்கு சம்பவிப்பது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஒரே மாதிரி நடக்கும்; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; உயிர்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைவிட மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. 20எல்லாம் ஒரே இடத்திற்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணிற்குத் திரும்புகிறது. 21உயர ஏறும் மனிதனுடைய ஆவியையும், தாழ பூமியில் இறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? 22இப்படியிருக்கிறபடியால், மனிதன் தன்னுடைய செயல்களில் மகிழ்ச்சியாக இருக்கும் நன்மையைத்தவிர, வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவனுடைய பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படி அவனைத் திரும்பிவரச்செய்கிறவன் யார்?

Currently Selected:

பிரச 3: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in