YouVersion Logo
Search Icon

எபி 11

11
அத்தியாயம் 11
விசுவாசம்
1விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது. 2அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். 3விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். 4விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைவிட மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைப்பற்றி தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். 5விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டதினால், அவன் காணப்படாமல் போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே சாட்சிபெற்றான். 6விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும். 7விசுவாசத்தினாலே நோவா அவனுடைய நாட்களிலே பார்க்காதவைகளைப்பற்றி தேவ எச்சரிப்பைப் பெற்று, பயபக்தியுள்ளவனாக, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குக் கப்பலை உண்டாக்கினான்; அதினாலே அவன் உலகம் தண்டனைக்குரியது என்று முடிவுசெய்து, விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு வாரிசானான். 8விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான். 9விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; 10ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான். 11விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள். 12எனவே, சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே, வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள். 13இவர்கள் எல்லோரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல், தூரத்திலே அவைகளைப் பார்த்து, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள். 14இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். 15தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்கள் என்றால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்குமே. 16அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே. 17மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். 18ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து, 19தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். 20விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான். 21விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான். 22விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான். 23மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள். 24விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து, 25நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு, 26இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான். 27விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். 28விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். 29விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள். 30விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. 31விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அழிந்துபோகாமல் இருந்தாள். 32பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையும்குறித்து நான் விபரம் சொல்லவேண்டுமென்றால் காலம்போதாது. 33விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், 34அக்கினியின் கோபத்தை அணைத்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியர்களுடைய படைகளை முறியடித்தார்கள். 35பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்; 36வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்; 37கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்; 38உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள். 39இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள். 40நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார்.

Currently Selected:

எபி 11: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for எபி 11