YouVersion Logo
Search Icon

எபி 9

9
அத்தியாயம் 9
ஆசாரிப்புக்கூடாரத்தில் ஆராதனை
1அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்குரிய முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த இடமும் உடையதாக இருந்தது. 2எப்படியென்றால், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவ சமுகத்து அப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த இடம் எனப்படும். 3இரண்டாம் திரைக்கு உள்ளே மகா பரிசுத்த இடம் என்று சொல்லப்பட்ட கூடாரம் இருந்தது. 4அதிலே தங்கத்தால் செய்த தூபகலசமும், முழுவதும் தங்கத்தகடு பதிக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட தங்கப்பாத்திரமும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. 5அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை. 6இவைகள் இவ்விதமாக ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்ற முதலாம் கூடாரத்திற்குள் எப்பொழுதும் பிரவேசிப்பார்கள். 7இரண்டாம் கூடாரத்திற்குள் பிரதான ஆசாரியன்மட்டும் வருடத்திற்கு ஒருமுறை இரத்தத்தை எடுத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் மக்களுடைய தவறுகளுக்காகவும் செலுத்துவான். 8அதினாலே, முதலாம் கூடாரம் நிற்கும்வரைக்கும் மகா பரிசுத்த இடத்திற்குப் போகிற வழி இன்னும் வெளிப்படவில்லை என்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். 9அந்தக் கூடாரம் இந்தக் காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாக இருக்கிறது; அதற்கேற்றபடி செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தமுடியாதவைகள். 10உண்பதும், குடிப்பது, பலவிதமான குளியல்களும், சரீரத்திற்குரிய சடங்குகளேதவிர வேறோன்றும் இல்லை. இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் செய்வதற்கு கட்டளையிடப்பட்டது.
கிறிஸ்துவின் இரத்தம்
11கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராக வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தப் படைப்பு சம்பந்தமான கூடாரத்தின்வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின்வழியாகவும், 12வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். 13அது எப்படியென்றால், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தம் உண்டாகப் பரிசுத்தப்படுத்துமென்றால், 14நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! 15ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். 16ஏனென்றால், எங்கே மரணசாசனம் உண்டோ, அங்கே அந்த சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். 17எப்படியென்றால், மரணம் உண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடு இருக்கும்போது அதற்குப் பயன் இல்லையே. 18அப்படியே, முதலாம் உடன்படிக்கையும் இரத்தம் இல்லாமல் உறுதி செய்யப்படவில்லை. 19எப்படியென்றால், மோசே, நியாயப்பிரமாணத்தினால், எல்லா மக்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு முடியோடும், ஈசோப்போடும் எடுத்து, புத்தகத்தின் மேலும் மக்கள் எல்லோர்மேலும் தெளித்து: 20தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான். 21இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய எல்லாப் பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான். 22நியாயப்பிரமாணத்தின்படி ஏறக்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது. 23ஆகவே, பரலோகத்தில் உள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது; பரலோகத்தில் உள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியவைகள். 24அப்படியே, உண்மையான பரிசுத்த இடத்திற்கு அடையாளமான கையினால் செய்யப்பட்ட பரிசுத்த இடத்திலே கிறிஸ்துவானவர் நுழையாமல், பரலோகத்திலே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமூகத்தில் வேண்டுதல் செய்வதற்காக நுழைந்திருக்கிறார். 25பிரதான ஆசாரியன் மற்றவர்களுடைய இரத்தத்தோடு ஒவ்வொரு வருடமும் பரிசுத்த இடத்திற்குள் நுழைவதுபோல, அவர் அநேகமுறை தம்மைப் பலியிடுவதற்காக நுழையவில்லை. 26அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். 27அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, 28கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக ஒரேமுறை பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாவதுமுறை பாவம் இல்லாமல் தரிசனமாவார்.

Currently Selected:

எபி 9: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for எபி 9