YouVersion Logo
Search Icon

ஏசா 28

28
அத்தியாயம் 28
எப்பிராயீமுக்கு ஐயோ
1எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்திற்கு#28:1 பூ மாலை ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் பூவே! 2இதோ, திறமையும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழையைப் போலவும், சங்காரப் புயல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான். 3எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடம் காலால் மிதித்துப்போடப்படும். 4செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய பூ, பருவகாலத்திற்குமுன் பழுத்ததும், காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும். 5அக்காலத்திலே சேனைகளின் யெகோவா தமது மக்களில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும், 6நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், போரை அதின் வாசல்வரை திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார். 7ஆனாலும் இவர்களும் திராட்சைரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிவிலகிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சைரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிவிலகி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். 8உணவு உண்ணும் இடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. 9அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கச்செய்யப்பட்டவர்களுக்குமே. 10கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். 11பரியாச உதடுகளினாலும் அந்நிய மொழியினாலும் இந்த மக்களுடன் பேசுவார். 12இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறச்செய்யும் இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களிடம் அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். 13ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், யெகோவாவுடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும். 14ஆகையால் எருசலேமிலுள்ள இந்தமக்களை ஆளுகிற நிந்தனைக்காரரே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 15நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. 16ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது சோதனை செய்யப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறமாட்டான்#28:16 பார்க்க சங்கீதம் 118:22-23, ரோமர் 9:33, 10:11, 1 பேதுரு. 2:6. 17நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை பெருவெள்ளம் அடித்துக்கொண்டுபோகும். 18நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். 19அது புரண்டுவந்த உடனே உங்களை அடித்துக்கொண்டுபோகும்; அது அனுதினமும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிச் சொல்லப்படும் செய்தியைக் கேட்கும்போதும் சஞ்சலத்தை உண்டாக்கும். 20கால் நீட்டப் படுக்கையின் நீளம்போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது. 21யெகோவா தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார். 22இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம் செய்யாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் தீர்மானிக்கப்பட்ட அழிவின் செய்தியைச் சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன். 23செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். 24உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ? 25அவன் அதை மேலாக பரப்பினபின்பு, அதற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ? 26அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துவிக்கிறார். 27உளுந்து இரும்புக்கோலாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டியின் உருளை சுற்றவிடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும். 28அப்பத்திற்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டியின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை. 29இதுவும் சேனைகளின் யெகோவாவாலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.

Currently Selected:

ஏசா 28: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ஏசா 28