YouVersion Logo
Search Icon

ஏசா 6

6
அத்தியாயம் 6
ஏசாயாவின் வேலை
1உசியா ராஜா மரணமடைந்த வருடத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய ஆடையின் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. 2சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் ஆறு இறக்கைகளிருந்தன; அவனவன் இரண்டு இறக்கைகளால் தன் முகத்தை மூடி, இரண்டு இறக்கைகளால் தன் கால்களை மூடி, இரண்டு இறக்கைகளால் பறந்து; 3ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று சத்தமிட்டுச் சொன்னார்கள். 4சொன்னவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைக்கால்கள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. 5அப்பொழுது நான்: ஐயோ, அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகளுள்ள மக்களின் நடுவில் குடியிருக்கிறவன்; சேனைகளின் யெகோவாவாகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். 6அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்துவந்து, 7அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான். 8பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாகப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். 9அப்பொழுது அவர்: நீ போய், இந்த மக்களை நோக்கி, நீங்கள் காதால் கேட்டும் உணராமலும், கண்களால் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல். 10இந்த மக்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்களுடைய காதுகளை மந்தப்படுத்தி, அவர்களுடைய கண்களை மூடிப்போடு என்றார். 11அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனித நடமாட்டமில்லாமலும் பாழாகி, பூமி வெட்டவெளியாகி, 12யெகோவா மனிதர்களைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் மையப்பகுதி முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே என்று சொன்னார். 13ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளில் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரம் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.

Currently Selected:

ஏசா 6: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ஏசா 6