YouVersion Logo
Search Icon

நியா 13

13
அத்தியாயம் 13
சிம்சோனின் பிறப்பு
1இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்ததால், யெகோவா அவர்களை 40 வருடங்கள் வரை பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். 2அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனிதன் இருந்தான்; அவன் பெயர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள். 3யெகோவாவுடைய தூதன் அந்த பெண்ணுக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். 4ஆதலால் நீ திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காதபடிக்கும், தீட்டானது ஒன்றும் சாப்பிட்டாதபடிக்கும் எச்சரிக்கையாக இரு. 5நீ கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெறுவாய்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படவேண்டாம்; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்#13:5 எண்ணாகமம் 6 அதிகாரத்தை பார்க்க; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றத் தொடங்குவான் என்றார். 6அப்பொழுது அந்தப் பெண் தன்னுடைய கணவனிடம் வந்து: தேவனுடைய மனிதன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாக இருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை. 7அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; ஆதலால் நீ திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காமலும், தீட்டானது ஒன்றும் சாப்பிடாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன்னுடைய மரணநாள்வரை தேவனுக்கென்று நசரேயனாக இருப்பான் என்று சொன்னார் என்றாள். 8அப்பொழுது மனோவா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ, என்னுடைய ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனிதன் மறுபடியும் ஒருமுறை எங்களிடம் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான். 9தேவன் மனோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுத்தார்; அந்தப் பெண் வயல்வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் கணவனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை. 10ஆகையால் அந்தப் பெண் சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன்னுடைய கணவனுக்கு அறிவித்தாள். 11அப்பொழுது மனோவா எழுந்து, தன்னுடைய மனைவியின் பின்னாலே போய், அவரிடத்திற்கு வந்து: இந்தப் பெண்ணோடு பேசியவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார். 12அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான். 13யெகோவாவுடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் அந்தப் பெண்ணோடே சொன்ன எல்லாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து, 14திராட்சைச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காமலும், தீட்டானதொன்றும் சாப்பிடாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கடைபிடிக்கட்டும் என்றார். 15அப்பொழுது மனோவா யெகோவாவுடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காக சமைத்துக் கொண்டுவரும்வரை தங்கியிரும் என்றான். 16யெகோவாவுடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன்னுடைய உணவை சாப்பிடமாட்டேன்; நீ சர்வாங்க தகனபலி செலுத்தவேண்டுமானால், அதை நீ யெகோவாவுக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் யெகோவாவுடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான். 17அப்பொழுது மனோவா யெகோவாவுடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மை மரியாதை செய்யும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான். 18அதற்குக் யெகோவாவுடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார். 19மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் யெகோவாவுக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவனுடைய மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அதிசயம் வெளிப்பட்டது. 20அக்கினிஜூவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பும்போது, யெகோவாவுடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் பார்த்து, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள். 21பின்பு யெகோவாவுடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் யெகோவாவுடைய தூதன் என்று மனோவா அறிந்து, 22தன்னுடைய மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், நிச்சயமாக மரிப்போம் என்றான். 23அதற்கு அவன் மனைவி: யெகோவா நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்கதகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள். 24பின்பு அந்தப் பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; யெகோவா அவனை ஆசீர்வதித்தார். 25அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் முகாமில் இருக்கும்போது யெகோவாவுடைய ஆவியானவர் அவனை தூண்டத்தொடங்கினார்.

Currently Selected:

நியா 13: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for நியா 13