YouVersion Logo
Search Icon

நியா 15

15
அத்தியாயம் 15
சிம்சோன் பெலிஸ்தியர்களுக்குத் தொல்லை கொடுத்தல்
1சிலநாட்கள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன்னுடைய மனைவியைப் பார்க்கப்போய்: நான் என்னுடைய மனைவியின் அறைக்குள் போகவேண்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளேபோகவிடாமல்: 2நீ அவளை முழுவதும் பகைத்துவிட்டாய் என்று நான் நினைத்து, அவளை உன்னுடைய நண்பனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன்; அவளுடைய தங்கை அவளைவிட அழகானவள் அல்லவா, அவளுக்குப் பதிலாக இவள் உனக்கு இருக்கட்டும் என்று சொன்னான். 3அப்பொழுது சிம்சோன்: நான் பெலிஸ்தர்களுக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி, 4புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடு வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக்கட்டி, 5பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தர்களின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சை தோட்டங்களையும் ஒலிவ தோப்புக்களையும் சுட்டெரித்துப்போட்டான். 6இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர்கள் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனான சிம்சோன்தான்; அவனுடைய மனைவியை அவனுடைய நண்பனுக்குத் திருமணம் செய்துகொடுத்ததினால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள். 7அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்காமல் ஓயமாட்டேன் என்று சொல்லி, 8அவர்களைத் தொடையிலும் இடுப்பிலுமாக துண்டுதுண்டாக வெட்டி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைக் குகையில் குடியிருந்தான். 9அப்பொழுது பெலிஸ்தர்கள் போய், யூதாவிலே முகாமிட்டு, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள். 10நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனிதர்கள் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள். 11அப்பொழுது யூதாவிலே மூவாயிரம்பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைக் குகைக்குப் போய்: பெலிஸ்தர்கள் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான். 12அப்பொழுது அவர்கள்: உன்னைக் கட்டி, பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்: நீங்கள் என்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள் என்றான். 13அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள். 14அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர்கள் அவனுக்கு எதிராக ஆரவாரம் செய்தார்கள். அப்பொழுது யெகோவாவுடைய ஆவி அவன்மேல் பலமாக இறங்கினதால், அவனுடைய புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவனுடைய கைகளைவிட்டு அறுந்துபோயின. 15உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, தன்னுடைய கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே 1,000 பேரைக் கொன்றுபோட்டான். 16அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடை எலும்பினால் குவியல் குவியலாக மடிந்து கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் 1,000 பேரைக் கொன்றேன் என்றான். 17அப்படிச் சொல்லிமுடிந்தபின்பு, தன்னுடைய கையில் இருந்த தாடை எலும்பை எறிந்துவிட்டு, அந்த இடத்திற்கு ராமாத்லேகி#15:17 தாடை எலும்புகளின் குன்று என்று பெயரிட்டான். 18அவன் மிகவும் தாகமடைந்து, யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருந்தசேதனம் பண்ணப்படாதவர்களின் கைகளினால் சாகவேண்டுமோ என்றான். 19அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கச்செய்தார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவனுடைய உயிர் திரும்ப வந்தது, அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி#15:19 அழைக்கிறவரின் நீரூற்று என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரையும் லேகியில் இருக்கிறது. 20அவன் பெலிஸ்தர்களின் நாட்களில் இஸ்ரவேலை 20 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.

Currently Selected:

நியா 15: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in