YouVersion Logo
Search Icon

நியா 3

3
அத்தியாயம் 3
யெகோவா இஸ்ரவேலர்களின் போர்த்திறமையை சோதித்தல்
1கானான் தேசத்தில் நடந்த எல்லா யுத்தங்களையும் அறியாமலிருந்த இஸ்ரவேலர்களாகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும், 2இஸ்ரவேலின் புதிய சந்ததியாரும், அதற்கு முன்பு யுத்தம் செய்ய அறியாமலிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் யெகோவா விட்டுவைத்தவர்கள் யாரென்றால்: 3பெலிஸ்தர்களின் ஐந்து அதிபதிகளும், எல்லா கானானியர்களும், சீதோனியர்களும், பாகால் எர்மோன் துவங்கி ஆமாத்திற்குள் நுழையும்வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியர்களுமே. 4யெகோவா மோசேயைக்கொண்டு தங்களுடைய பிதாக்களுக்கு விதித்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலர்கள் அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள். 5இப்படி இஸ்ரவேல் மக்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களாகிய இவர்களின் நடுவே குடியிருந்து, 6அவர்களுடைய மகள்களை திருமணம்செய்து, தங்களுடைய மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்.
முதல் நியாயாதிபதியாகிய ஒத்னியேல்
7இப்படி இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் தொழுதுகொள்கிறபோது, 8யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம் கொண்டு அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் மக்கள் கூசான்ரிஷதாயீமை எட்டு வருடங்கள் பணிந்துகொண்டார்கள். 9இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டபோது, யெகோவா இஸ்ரவேல் மக்களை காப்பாற்றும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய மகனான ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழும்பச்செய்தார். 10அவன்மேல் யெகோவாவுடைய ஆவி வந்து அவனை பெலப்படுத்தியதால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்செய்யப் புறப்பட்டான்; யெகோவா மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவனுடைய கை கூசான்ரிஷதாயீமின்மேல் பெலங்கொண்டது. 11தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது. கேனாசின் மகனான ஒத்னியேல் இறந்துபோனான்.
நியாயாதிபதியாகிய ஏகூத்
12இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அவர்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தபடியால், யெகோவா எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு எதிராக பெலனடையச் செய்தார். 13அவன் அம்மோனிய மக்களையும் அமலேக்கியர்களையும் அழைத்துக்கொண்டுவந்து, இஸ்ரவேலை முறியடித்தான்; பேரீச்சை மரங்களின் பட்டணத்தையும் பிடித்தான். 14இவ்வாறு இஸ்ரவேல் மக்கள் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருடங்கள் பணிந்துகொண்டார்கள். 15இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டபோது, யெகோவா அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பச்செய்தார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாக இருந்தான்; அவனுடைய கையிலே இஸ்ரவேல் மக்கள் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள். 16ஏகூத், இருபுறமும் கூர்மையான ஒரு முழ நீளமுமான ஒரு பட்டயத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஆடைக்குள்ளே தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டிக்கொண்டு, 17காணிக்கையை மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குச் செலுத்தினான்; எக்லோன் மிகவும் பருமனான மனிதனாக இருந்தான். 18அவன் காணிக்கையைச் செலுத்தி முடிந்தபின்பு, காணிக்கையைச் சுமந்து வந்த மக்களை அனுப்பிவிட்டான். 19அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து: ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்ற அனைவரும் அவனை விட்டு வெளியே போய்விட்டார்கள். 20ஏகூத் அவன் அருகில் போனான்; அவனோ தனக்குத் தனியாக இருந்த குளிர்ச்சியான மேல் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடம் சொல்லவேண்டிய தேவ வாக்கு என்னிடம் உண்டு என்றான்; அவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான். 21உடனே ஏகூத் தன்னுடைய இடதுகையை நீட்டி, தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டியிருந்த பட்டயத்தை உருவி, அதை அவனுடைய வயிற்றிற்குள் குத்தினான். 22கத்தியோடு கைப்பிடியும் உள்ளே போனது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கமுடியாதபடி, கொழுப்பு கத்தியைச் சுற்றிக் கொண்டது; கத்தி முனை பின்புறமாக வந்தது. 23ஏகூத் புறப்பட்டு, மேல் வீட்டு அறையின் கதவை மூடிப் பூட்டிவிட்டு, தலைவாசல் வழியாகப் போய்விட்டான். 24அவன் போனபின்பு வேலைக்காரர்கள் வந்து பார்த்தார்கள்; இதோ, மேல் வீட்டு அறையின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான வீட்டிலே கழிவறையில் இருக்கலாம் என்றார்கள். 25அவர்கள் சலித்துப்போகும் வரைக்கும் காத்திருந்தார்கள்; அவன் மேல்வீட்டு அறையின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்களுடைய எஜமான் தரையிலே செத்துக்கிடந்தான். 26அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான். 27அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையில் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் அவனோடு மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து: 28என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; யெகோவா உங்கள் எதிரிகளாகிய மோவாபியர்களை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைமுகத்தைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவிடாமல், 29அக்காலத்திலே மோவாபியர்களில் ஏறக்குறையப் 10,000 பேரை வெட்டினார்கள்; அவர்கள் எல்லாரும் திறமையுள்ளவர்களும் பலசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை. 30இப்படியே அந்த நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் 80 வருடங்கள் அமைதலாக இருந்தது.
நியாயாதிபதியாகிய சம்கார்
31அவனுக்குப்பின்பு ஆனாத்தின் மகன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தர்களில் 600 பேரை, கால்நடைகளை நடத்த பயன்படுத்தப்படும் ஒரு கோலால் கொன்றான்; அவனும் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினான்.

Currently Selected:

நியா 3: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for நியா 3