YouVersion Logo
Search Icon

எரே 37

37
அத்தியாயம் 37
எரேமியா சிறையில் அடைக்கப்படுதல்
1பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாதேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய மகனாகிய கோனியாவின் பட்டத்திற்கு யோசியாவின் மகனாகிய சிதேக்கியா வந்து ஆட்சிசெய்தான். 2யெகோவா எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் மக்களாகிலும் கேட்கவில்லை. 3சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் மகனாகிய யூகாலையும், மாசெயாவின் மகனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம் செய்யவேண்டும் என்று சொல்லச் சொன்னான். 4அப்பொழுது எரேமியா மக்களின் நடுவே போக்கும் வரத்துமாக இருந்தான்; அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை. 5பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றுகைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள். 6அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்: 7இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்திற்குத் திரும்பிப்போகும். 8கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்திற்கு விரோதமாகப் போர்செய்து, அதைப் பிடித்து, நெருப்பினால் சுட்டெரிப்பார்கள். 9கல்தேயர் நம்மைவிட்டு கண்டிப்பாகப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம் போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை. 10உங்களுடன் போர்செய்கிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் தோற்கடித்தாலும், மீந்தவர்கள் எல்லோரும் காயம்பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை நெருப்பினால் சுட்டெரிப்பார்கள் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லுங்கள் என்றார். 11பார்வோனின் படை வருகிறதென்று, கல்தேயருடைய படை எருசலேமைவிட்டுப் போனபோது, 12எரேமியா அவ்விடத்தைவிட்டு, மக்களின் நடுவில் விலகிப்போகிறவன் போல, பென்யமீன் தேசத்திற்குப் போக மனதாய் எருசலேமிலிருந்து புறப்பட்டுப்போனான். 13அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, காவற்காரர்களின் அதிபதியாகிய யெரியா என்னும் பெயருள்ள ஒருவன் அங்கே இருந்தான்; அவன் அனனியாவின் மகனாகிய செலேமியாவின் மகன்; அவன்: நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்றுசொல்லி, எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான். 14அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின் சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான். 15அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைக் காரியதரிசியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற்கூடமாக்கியிருந்தார்கள். 16அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் நுழைந்து, அங்கே அநேக நாட்கள் இருந்தான். 17பின்பு சிதேக்கியா ராஜா அவனை வரவழைத்து: யெகோவாவால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டில் இரகசியமாகக் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான். 18பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டில் அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த மக்களுக்கும் விரோதமாக என்ன குற்றம்செய்தேன்? 19பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத்திற்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே? 20இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குக் காதுகொடுத்து, என் விண்ணப்பத்திற்குத் தயைசெய்து, என்னைக் காரியதரிசியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்; அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான். 21அப்பொழுது எரேமியாவைக் காவல்நிலையத்தின் முற்றத்தில் காக்கவும், நகரத்தில் அப்பம் இருக்குவரை அப்பம் சுடுகிறவர்களின் வீதியில் தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக்கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான்.

Currently Selected:

எரே 37: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in