YouVersion Logo
Search Icon

யோவா 20

20
அத்தியாயம் 20
இயேசுவின் உயிர்த்தெழுதல்
1வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடு, மகதலேனா மரியாள் கல்லறைக்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போடப்பட்டிருப்பதைப் பார்த்தாள். 2உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவிடமும் இயேசுவிற்கு அன்பாக இருந்த மற்ற சீடனிடமும்போய்: கர்த்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். 3அப்பொழுது பேதுருவும் மற்ற சீடனும் கல்லறைக்குப் போவதற்காகப் புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். 4பேதுருவைவிட மற்ற சீடன் வேகமாக ஓடி, முதலில் கல்லறைக்கு வந்து, 5அதற்குள்ளே குனிந்து பார்த்து, துணிகள் கிடக்கிறதைப் பார்த்தான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. 6சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே நுழைந்து, 7துணிகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி மற்றத் துணிகளோடு வைக்காமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் பார்த்தான். 8முதலில் கல்லறைக்கு வந்த மற்ற சீடனும் அப்பொழுது உள்ளே நுழைந்து, பார்த்து விசுவாசித்தான். 9அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாமல் இருந்தார்கள்.
மகதலேனா மரியாளுக்கு இயேசு காட்சியளித்தல்
10பின்பு அந்தச் சீடர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள். 11மரியாள் கல்லறையின் அருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கும்போது அவள் குனிந்து கல்லறைக்கு உள்ளே பார்த்து, 12இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளை உடை அணிந்தவர்களாக இரண்டு தூதர்கள், தலைபக்கம் ஒருவனும் கால்பக்கம் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாள். 13அவர்கள் அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். 14இவைகளைச் சொல்லிப் பின்பக்கம் திரும்பி, இயேசு நிற்கிறதைப் பார்த்தாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாமல் இருந்தாள். 15இயேசு அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரன் என்று நினைத்து: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போயிருந்தால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்வேன் என்றாள். 16இயேசு அவளைப் பார்த்து: மரியாளே என்றார். அவள் திரும்பிப்பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தம். 17இயேசு அவளைப் பார்த்து: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடம் திரும்பிப்போகவில்லை; நீ என் சகோதரர்களிடம்போய், நான் என் பிதாவினிடமும் உங்களுடைய பிதாவினிடமும், என் தேவனிடமும் உங்களுடைய தேவனிடமும் திரும்பிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். 18மகதலேனா மரியாள் போய், தான் இயேசுவைப் பார்த்ததையும், அவர் தன்னிடம் சொன்னவைகளையும் சீடர்களுக்கு அறிவித்தாள்.
இயேசு சீடர்களுக்குக் காட்சியளித்தல்
19வாரத்தின் முதல்நாளாகிய அன்றையதினம் மாலைநேரத்திலே, சீடர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கும்போது, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 20அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கரங்களையும் விலாவையும் அவர்களுக்குக் காட்டினார். சீடர்கள் இயேசுவைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள். 21இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, 22அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்; 23எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னிக்காமல் இருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாமல் இருக்கும் என்றார்.
தோமாவின் சந்தேகம்
24இயேசு வந்திருந்தபோது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களோடு இருக்கவில்லை. 25மற்றச் சீடர்கள்: இயேசுவை பார்த்தோம் என்று அவனிடம் சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினால் உண்டான காயத்தை நான் பார்த்து, அந்தக் காயத்திலே என் விரலைவிட்டு, என் கையை அவருடைய விலாவிலே வைத்துப்பார்க்காமல் விசுவாசிக்கமாட்டேன் என்றான். 26மீண்டும் எட்டு நாட்களுக்குப்பின்பு அவருடைய சீடர்கள் வீட்டிற்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களோடு இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 27பின்பு அவர் தோமாவைப் பார்த்து: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கரங்களைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாக இல்லாமல் விசுவாசியாக இரு என்றார். 28தோமா அவருக்கு மறுமொழியாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். 29அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைப் பார்த்ததினாலே விசுவாசித்தாய், பார்க்காமல் இருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். 30இந்தப் புத்தகத்தில் எழுதப்படாத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீடர்களுக்கு முன்பாகச் செய்தார். 31இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிப்பதற்காகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

Currently Selected:

யோவா 20: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in