YouVersion Logo
Search Icon

மத் 14

14
அத்தியாயம் 14
யோவான்ஸ்நானனின் தலை வெட்டப்படுதல்
1அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு, 2தன் வேலைக்காரர்களைப் பார்த்து: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான்; ஆகவே, இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 3ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி சிறைச்சாலையில் வைத்திருந்தான். 4ஏனென்றால்: நீர் அவளை உன் மனைவியாக வைத்துக்கொள்வது நியாயமில்லை என்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். 5ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், மக்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். 6அப்படியிருக்க, ஏரோதின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் மகள் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். 7அதினிமித்தம் ஏரோது: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். 8அவள் தன் தாயினால் சொல்லப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தட்டிலே வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். 9ராஜா துக்கமடைந்தான். ஆனாலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு, 10ஆள் அனுப்பி, சிறைச்சாலையிலே யோவானின் தலையை வெட்டச்செய்தான். 11அவனுடைய தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள். 12அவனுடைய சீடர்கள் வந்து சரீரத்தை எடுத்து அடக்கம்செய்து, பின்புபோய் அந்தச் செய்தியை இயேசுவிற்கு அறிவித்தார்கள்.
இயேசு ஐந்தாயிரம்பேரைப் போஷித்தல்
13இயேசு அதைக்கேட்டு, அந்த இடத்தைவிட்டு, படகில் ஏறி, வனாந்திரமான ஒரு இடத்திற்குத் தனியே போனார். மக்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாக அவரிடத்திற்குப் போனார்கள். 14இயேசு வந்து, திரளான மக்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியுள்ளவர்களைச் சுகமாக்கினார். 15மாலைநேரமானபோது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்திரமான இடம், நேரமுமானது; மக்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு உணவு பதார்த்தங்களை வாங்கும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 16இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். 17அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். 18அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 19அப்பொழுது, அவர் மக்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். 20எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுத்தார்கள். 21பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.
இயேசு கடலின்மீது நடத்தல்
22இயேசு மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். 23அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, தனித்து ஜெபம்செய்ய ஒரு மலையின்மேல் ஏறி, மாலைநேரமானபோது அங்கே தனிமையாக இருந்தார். 24அதற்குள்ளாகப் படகு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் தள்ளாடியது. 25அதிகாலையிலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். 26அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். 27உடனே இயேசு அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார். 28பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். 29அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகைவிட்டு இறங்கி, இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான். 30காற்று பலமாக இருக்கிறதைக் கண்டு, பயந்து, மூழ்கும்போது: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். 31உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். 32அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. 33அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். 34பின்பு, அவர்கள் கடலைக்கடந்து, கெனேசரேத்து நாட்டிற்கு வந்தார்கள். 35அந்த இடத்து மனிதர்கள் அவரை யார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, வியாதியுள்ளவர்கள் எல்லோரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட எல்லோரும் குணமானார்கள்.

Currently Selected:

மத் 14: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in