YouVersion Logo
Search Icon

எண் 24

24
அத்தியாயம் 24
1இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே யெகோவாவுக்குப் பிரியம் என்று பிலேயாம் பார்த்தபோது, அவன் முந்திச் செய்து வந்ததுபோல யெகோவாவைப் பார்க்கப் போகாமல், வனாந்திரத்திற்கு நேராகத் தன்னுடைய முகத்தைத் திருப்பி, 2தன்னுடைய கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன்னுடைய கோத்திரங்களின்படியே முகாமிட்டிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது. 3அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது,
கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
4தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு,
சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது,
5யாக்கோபே, உன்னுடைய கூடாரங்களும், இஸ்ரவேலே,
உன்னுடைய தங்குமிடங்களும் எவ்வளவு அழகானவைகள்!
6அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும்,
நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும்,
யெகோவா நாட்டின சந்தனமரங்களைப்போலவும்,
தண்ணீர் அருகே உள்ள கேதுரு மரங்களைப்போலவும் இருக்கிறது.
7அவர்களுடைய வாளிகளிலிருந்து தண்ணீர் பாயும்;
அவர்கள் விதை திரளான தண்ணீர்களில் பரவும்;
அவர்களுடைய ராஜா ஆகாகை விட உயருவான்;
அவர்களுடைய ராஜ்ஜியம் மேன்மையடையும்.
8தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்;
காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு;
அவர்கள் தங்களுடைய எதிரிகளாகிய தேசத்தை தின்று,
அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி,
அவர்களைத் தங்களுடைய அம்புகளாலே எய்வார்கள்.
9சிங்கம்போலவும் கொடிய சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்;
அவர்களை எழுப்புகிறவன் யார்?
உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்,
உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்”
என்றான். 10அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் வந்தவனாகி, கையோடு கைதட்டி, பிலேயாமை நோக்கி: “என்னுடைய எதிரிகளைச் சபிக்க உன்னை அழைத்து வந்தேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய். 11ஆகையால் உன்னுடைய இடத்திற்கு ஓடிப்போ; உன்னை மிகவும் மேன்மைப்படுத்துவேன் என்றேன்; நீ மேன்மை அடையாதபடி யெகோவா தடுத்தார் என்றான். 12அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என்னுடைய மனதாக நன்மையையோ தீமையையோ செய்கிறதற்குக் யெகோவாவின் கட்டளையை மீறக்கூடாது; யெகோவா சொல்வதையே சொல்வேன் என்று, 13நீர் என்னிடத்திற்கு அனுப்பின தூதுவர்களிடத்தில் நான் சொல்லவில்லையா? 14இதோ, நான் என்னுடைய மக்களிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த மக்கள் உம்முடைய மக்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும்” என்று சொல்லி.
பிலேயாமின் நான்காவது தேவ வாக்கு
15அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது,
கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
16தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு,
உன்னதமான தேவன் அளித்த அறிவை அறிந்து,
உன்னதமான தேவனுடைய தரிசனத்தைக் கண்டு,
தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது;
17அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல;
அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல;
ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்,
ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்;
அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி,
சேத் சந்ததி#24:17 கலகக்காரரின் தலைகளை எல்லோரையும் நிர்மூலமாக்கும்.
18ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன்னுடைய எதிரிகளுக்குச் சுதந்தரமாகும்;
இஸ்ரவேல் பராக்கிரமம்செய்யும்.
19யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்;
பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார்”
என்றான்.
பிலேயாமின் கடைசி தேவ வாக்கு
20மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து,
தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான்.
21அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து,
தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“உன்னுடைய தங்குமிடம் பாதுகாப்பானது;
உன்னுடைய கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
22ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்;
அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாட்கள் ஆகும்” என்றான்.
23பின்னும் அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்; 24கித்தீமின் கடல் துறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான்” என்றான். 25பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன்னுடைய வழியே போனான்.

Currently Selected:

எண் 24: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in