YouVersion Logo
Search Icon

நீதி 1

1
அத்தியாயம் 1
மையக் கருத்து
1தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:
2இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து,
புத்திமதிகளை உணர்ந்து,
3விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.
4இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.
5புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்;
விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து;
6நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும்,
ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான்.
7யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள்.
ஞானம் தழுவுவதற்கான அறிவுரைகள்
8என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள்,
உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே.
9அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும்,
உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும்.
10என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும்
நீ சம்மதிக்காதே.
11எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து,
குற்றமில்லாமல் இருக்கிறவர்களை
காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்;
12பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்;
குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல்
அவர்களை முழுமையாக விழுங்குவோம்;
13விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்;
கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.
14எங்களோடு பங்காளியாக இரு;
நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்;
15என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல்,
உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக.
16அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி,
இரத்தம் சிந்த விரைகிறது.
17எவ்வகையான பறவையானாலும் சரி,
அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது.
18இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள்,
தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள்.
19பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே;
இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும்.
ஞானத்தைத் தள்ளுதலுக்கு எதிரான எச்சரிக்கை
20ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது,
வீதிகளில் சத்தமிடுகிறது.
21அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும்,
நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு,
பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது:
22பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே,
நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே,
நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
23என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்;
இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன்,
என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்;
நான் என்னுடைய கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
25என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி,
என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
26ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து,
நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஏளனம்செய்வேன்.
27நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும்,
ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும்,
நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன்.
28அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்;
நான் மறுஉத்திரவு கொடுக்கமாட்டேன்;
அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
29அவர்கள் அறிவை வெறுத்தார்கள்,
யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
30என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை;
என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள்.
31ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்;
தங்களுடைய யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
32அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும்,
மூடரின் பொறுப்பின்மை அவர்களை அழிக்கும்;
33எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ,
அவன் பயமின்றி தங்கி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாக இருப்பான்.

Currently Selected:

நீதி 1: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in