YouVersion Logo
Search Icon

வெளி 17

17
அத்தியாயம் 17
மிருகத்தின் மேலுள்ள பெண்
1ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே; 2அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி; 3ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன். 4அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். 5மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. 6அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். 7அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன். 8நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். 9ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். 10அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான். 11இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான். 12நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள். 13இவர்கள் ஒரே மனதுடையவர்கள்; இவர்கள் தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள். 14இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான். 15பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே. 16நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள். 17தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்வரையும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே மனதுடையவர்களாக இருந்து, தங்களுடைய ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார். 18நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.

Currently Selected:

வெளி 17: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in