YouVersion Logo
Search Icon

வெளி 20

20
அத்தியாயம் 20
ஆயிரவருட அரசாட்சி
1ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். 2பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய இராட்சசப் பாம்பை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருடங்கள் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். 3அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். 4அன்றியும், நான் சிங்காசனங்களைப் பார்த்தேன்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள். இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் உருவத்தையாவது வணங்காமலும் தங்களுடைய நெற்றியிலும் தங்களுடைய கையிலும் அதின் முத்திரையைத் அணிந்துகொள்ளாமலும் இருந்தவர்களையும் பார்த்தேன். அவர்கள் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாண்டார்கள். 5மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்வரை உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். 6முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாக இருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் முன்பாக ஆசாரியர்களாக இருந்து, அவரோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாளுவார்கள்.
சாத்தானின் தண்டனை
7அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, 8பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள தேசத்து மக்களாகிய கோகையும் மாகோகையும் ஏமாற்றவும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருக்கும். 9அவர்கள் பூமியெங்கும் நிரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களை அழித்துப்போட்டது. 10மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
மரணம் நியாயந்தீர்க்கப்பட்டது
11பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் உட்கார்ந்திருக்கிறவரையும் பார்த்தேன்; அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. 12மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்பதைப் பார்த்தேன்; அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுத்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் செய்கைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். 13கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். 14அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். 15ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

Currently Selected:

வெளி 20: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in