வெளி 21
21
அத்தியாயம் 21
புதிய எருசலேம்
1பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது. 2யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. 3மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார். 4அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று சொன்னது. 5சிங்காசனத்தின்மேல் உட்காருந்திருந்தவர்: இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். 6அன்றியும், அவர் என்னைப் பார்த்து: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன். தாகமாக இருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன். 7ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாக இருப்பேன், அவன் என் குமாரனாக இருப்பான். 8பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். 9பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணமகளை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, 10பெரிதும் உயரமுமான ஒரு மலையின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். 11அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது. 12அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. 13வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் வம்சத்தில் உள்ள பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. 14நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்கள் இருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு பெயர்களும் பதிந்திருந்தன. 15என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான். 16அந்த நகரம் சதுரமாக இருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாக இருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது இரண்டாயிரத்து இருநூறு கிலோமீட்டர் தூர அளவாக இருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாக இருந்தது. 17அவன் அதின் மதிலை அளந்தபோது, மனித அளவின்படியே அது நூற்றுநாற்பத்துநான்கு முழமாக இருந்தது. 18அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாக இருந்தது. 19நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவகை இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், 20ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே. 21பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாக இருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாக இருந்தது. 22அதிலே தேவாலயத்தை நான் பார்க்கவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். 23நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டியதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. 24இரட்சிக்கப்படுகிற மக்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்களுடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். 25அங்கே இரவு இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை. 26உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். 27தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் செல்வதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்கள்மட்டும் அதில் செல்வார்கள்.
Currently Selected:
வெளி 21: IRVTam
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.