YouVersion Logo
Search Icon

ரோமர் 14

14
அத்தியாயம் 14
நியாயந்தீர்த்தல்
1விசுவாசத்தில் பலவீனமாக உள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன சந்தேகங்களைக் குற்றமாக தீர்மானிக்காமல் இருங்கள். 2ஒருவன் எந்த உணவுப்பொருளையும் சாப்பிடலாம் என்று நம்புகிறான்; பலவீனமாக உள்ளவனோ காய்கறிகளைமட்டும் சாப்பிடுகிறான். 3சாப்பிடுகிறவன் சாப்பிடாமல் இருக்கிறவனை அற்பமாக நினைக்காமல் இருக்கவேண்டும்; சாப்பிடாமல் இருக்கிறவனும் சாப்பிடுகிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காமல் இருக்கவேண்டும்; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. 4மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய முதலாளிக்கே அவன் பொறுப்பாளி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராக இருக்கிறாரே. 5அன்றியும், ஒருவன் ஒருநாளைவிட மற்றொரு நாள் சிறந்தது என்று நினைக்கிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சமமாக நினைக்கிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாக இருக்கட்டும். 6நாட்களை சிறப்பாக்கிக்கொள்கிறவன் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்கிறான்; நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்ளாமல் இருக்கிறான். சாப்பிடுகிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று சாப்பிடுகிறான்; சாப்பிடாமல் இருக்கிறவனும் கர்த்தருக்கென்று சாப்பிடாமல், தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான். 7நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதும் இல்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதும் இல்லை. 8நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; எனவே, பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாக இருக்கிறோம். 9கிறிஸ்துவும் மரித்தவர்களுக்கும், ஜீவனுள்ளவர்களுக்கும் ஆண்டவராக இருப்பதற்காக, மரித்தும், உயிரோடு எழுந்தும், பிழைத்தும் இருக்கிறார். 10இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளி என்று தீர்க்கிறது என்ன? நீ உன் சகோதரனை அற்பமாக நினைக்கிறது என்ன? நாமெல்லோரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. 11அப்படியே:
“முழங்கால்கள் எல்லாம் எனக்கு முன்பாக முடங்கும்,
நாக்குகள் எல்லாம் தேவனை அறிக்கைப்பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன்” என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
12எனவே, நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கு ஒப்புவிப்பான். 13இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடையையும் இடறலையும் போடக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். 14எந்தப்பொருளும் தன்னில்தானே தீட்டானவைகள் இல்லை என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டானது என்று நினைக்கிறவன் எவனோ அவனுக்கு அது தீட்டானதாக இருக்கும். 15ஆகாரத்தினாலே உன் சகோதரனுக்கு விசனம் உண்டாக்கினால், நீ அன்பாக நடக்கிறவன் இல்லை; அவனை உன் ஆகாரத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. 16உங்களுடைய நல்ல செயல்கள் அவமதிக்கப்பட இடங்கொடுக்காமல் இருங்கள். 17தேவனுடைய ராஜ்யம் சாப்பிடுவதும் குடிப்பதும் இல்லை, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் சந்தோஷமாகவும் இருக்கிறது. 18இவைகளிலே கிறிஸ்துவிற்கு ஊழியம் செய்கிறவன் தேவனுக்குப் பிரியமானவனும் மனிதனால் அங்கீகரிக்கப்பட்டவனுமாக இருக்கிறான். 19எனவே, சமாதானத்திற்குரியவைகளையும், ஐக்கிய பக்திவளர்ச்சியை உண்டாக்கக்கூடியவைகளையும் நாடுவோம். 20ஆகாரத்திற்காக தேவனுடைய செயல்களை அழித்துப்போடாதே. எந்த உணவுப்பொருளும் சுத்தமானதுதான்; ஆனாலும் இடறல் உண்டாகச் சாப்பிடுகிறவனுக்கு அது தீமையாக இருக்கும். 21இறைச்சி சாப்பிடுவதும், மதுபானம் அருந்துகிறதும், வேறு எதையாவது செய்கிறதும், உன் சகோதரன் இடறுவதற்கோ, தவறுவதற்கோ, பலவீனப்படுகிறதற்கோ காரணமாக இருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமல் இருப்பதே நன்மையாக இருக்கும். 22உனக்கு விசுவாசம் இருந்தால் அது தேவனுக்குமுன்பாக உனக்குள்மட்டும் இருக்கட்டும். நல்லது என்று நிச்சயித்த விஷயத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான். 23ஒருவன் சந்தேகத்துடன் சாப்பிட்டால், அவன் விசுவாசம் இல்லாமல் சாப்பிடுகிறதினால், தண்டனைக்குரியவனாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத எதுவும் பாவமே.

Currently Selected:

ரோமர் 14: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in