YouVersion Logo
Search Icon

ரோமர் 3

3
அத்தியாயம் 3
தேவனுடைய உண்மை
1இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? 2அது எல்லாவிதத்திலும் உயர்ந்ததாக இருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. 3சிலர் விசுவாசிக்காமற்போனாலும் என்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை ஒன்றுமில்லாமல் ஆக்குமா? 4அப்படியாக்காது:
“நீர் உம்முடைய வசனங்களில் நீதிமானாக விளங்கவும்,
உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியானது” என்று எழுதியிருக்கிறபடி,
தேவனே சத்தியவான் என்றும், எந்த மனிதனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
5நான் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியைக் காண்பித்தால் என்னசொல்லுவோம்? கோபத்தைக் காட்டுகிற தேவன் அநீதி உள்ளவராக இருக்கிறார் என்று சொல்லலாமா? 6அப்படிச் சொல்லக்கூடாது; அப்படிச்சொன்னால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பது எப்படி? 7அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவி என்று தீர்க்கப்படுவது ஏன்? 8“நன்மை வருவதற்காகத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாம் அல்லவா?” நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்கள் என்றும் சிலர் எங்களை அவமதிக்கிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் தண்டனை நீதியாக இருக்கும்.
நீதிமான் ஒருவனுமில்லை
9ஆனாலும் என்ன? அவர்களைவிட நாங்கள் விசேஷமானவர்களா? கொஞ்சம்கூட விசேஷமானவர்கள் இல்லை, யூதர்கள் கிரேக்கர்கள் எல்லோரும் பாவத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை முன்பே வெளிப்படுத்தினோமே. 10அப்படியே:
“ஒருவன்கூட நீதிமான் இல்லை;
11உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
12எல்லோரும் வழிதவறி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;
நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
13அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி,
தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள்;
அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
14அவர்கள் வாய் சபிக்கிறதினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
15அவர்கள் கால்கள் இரத்தம் சிந்துகிறதற்கு அலைகிறது;
16நாசமும், உபத்திரவமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது;
17சமாதான வழியை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்;
18அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தேவபயம் இல்லை” என்று எழுதியிருக்கிறதே.
19மேலும், வாய்கள் எல்லாம் அடைக்கப்படுவதற்கும், உலகத்தார் எல்லோரும் தேவனுடைய தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளானவர்களாவதற்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறது என்று தெரிந்திருக்கிறோம். 20இப்படியிருக்க, பாவத்தைத் தெரிந்துகொள்ளுகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறதினால், எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேவனுக்குமுன்பாக நீதிமானாக்கப்படுவது இல்லை.
விசுவாசத்தினால் வரும் நீதி
21இப்படியிருக்க, நியாயப்பிரமாணம் இல்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதற்கு நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியாக இருக்கிறது. 22அது இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் தேவநீதியே; விசுவாசிக்கிற எல்லோருக்குள்ளும் எவர்கள் மேலும் அது வரும், வித்தியாசமே இல்லை. 23எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி, 24இலவசமாக அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; 25தேவன் பொறுமையாக இருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களை அவர் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிப்பதற்காகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவிடம் விசுவாசமாக இருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாக காண்பிப்பதற்காகவும், இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிப்பதற்காகவும், 26கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார். 27இப்படியிருக்க, மேன்மைபாராட்டுவது எங்கே? அது நீக்கப்பட்டது. எந்தப் பிரமாணத்தினாலே? செய்கையின் பிரமாணத்தினாலா? இல்லை; விசுவாசப்பிரமாணத்தினாலே. 28எனவே, மனிதன் நியாயப்பிரமாணத்தின் செயல்கள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்மானிக்கிறோம். 29தேவன் யூதர்களுக்கு மட்டுமா தேவன்? யூதரல்லாதோர்களுக்கும் தேவனல்லவா? ஆம் யூதரல்லாதோர்களுக்கும் அவர் தேவன்தான். 30விருத்தசேதனம் உள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனம் இல்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாகவும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. 31அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறோமா? அப்படி இல்லை; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

Currently Selected:

ரோமர் 3: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in