YouVersion Logo
Search Icon

1 நாளாகமம் 19

19
அம்மோனியருக்கெதிரான சண்டை
1சிறிது காலத்திற்கு பின்பு அம்மோனியரின் அரசன் நாகாஸ் இறந்தான். அவனுக்குப்பின் அவன் மகன் அவனுடைய இடத்தில் அரசனானான். 2அப்பொழுது தாவீது, ஆனூனின் தகப்பன் நாகாஸ் எனக்கு தயவு காட்டியதனால் நானும் அவனுக்குத் தயவுகாட்டுவேன் என்று எண்ணினான். எனவே ஆனூனின் தகப்பன் இறந்ததற்கு அனுதாபத்தைத் தெரிவிக்க ஒரு குழுவை அனுப்பினான்.
தாவீதின் மனிதர்கள் அனுதாபச் செய்தியுடன் அம்மோனியரின் நாட்டிற்கு ஆனூனிடம் வந்தார்கள். 3அப்பொழுது அம்மோனியரின் அதிகாரிகள் ஆனூனிடம், “தாவீது இந்த அனுதாபச் செய்தியை அனுப்பி உனது தகப்பனைக் கனப்படுத்துகிறான் என்று நீ நினைக்கிறாயா? இல்லை; இந்த நாட்டை ஆராய்ந்து உளவுபார்த்து இந்நாட்டை கவிழ்க்க அல்லவா இந்த மனிதர்கள் வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். 4எனவே ஆனூன் தாவீதின் மனிதர்களைப் பிடித்து, அவர்களின் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய உடைகளின் பின்பக்கத்தில், இடுப்பிலிருந்து கீழ்வரையுள்ள பகுதியை கத்தரித்துவிட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.
5அப்பொழுது அவர்களுக்கு நடந்ததை ஒருவன் தாவீதிற்கு அறிவித்தான். அவர்கள் மிகவும் அவமானத்திற்கு உட்பட்டிருந்ததால் அவர்களைச் சந்திக்க தாவீது அரசன் தூதுவரை அனுப்பி, “உங்கள் தாடி வளரும்வரை நீங்கள் எரிகோவில் தங்கியிருந்து, பின்பு திரும்புங்கள்” என்று சொல்லும்படி சொன்னான்.
6அம்மோனியர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதை உணர்ந்தபோது, ஆனூனும் அம்மோனியரும் மெசொப்பொத்தாமியாவின் வடமேற்குப் பகுதிக்கும், ஆராம் மாக்காவுக்கும், சோபாவுக்கும் தங்களுக்குத் தேர்களையும், தேரோட்டிகளையும் கூலிக்கு அனுப்பும்படி கிட்டத்தட்ட ஆயிரம் தாலந்து நிறையுள்ள வெள்ளியை அனுப்பிவைத்தார்கள். 7அவ்வாறு அவர்கள் முப்பத்திரண்டாயிரம் தேர்களையும், தேரோட்டிகளையும், மாக்காவின் அரசனையும், அவனுடைய படைகளையும் கூலிக்கு அமர்த்தினார்கள். அவர்கள் மேதேபாவுக்கு அருகே வந்து முகாமிட்டனர். அம்மோனியர்கள் தங்கள் பட்டணங்களிலிருந்து கூட்டமாக திரண்டு போருக்குப் புறப்பட்டார்கள்.
8இதைக் கேள்விப்பட்ட தாவீது யோவாபையும், போர்த் திறமையுள்ள முழு இராணுவத்தையும் அனுப்பினான். 9அம்மோனியர் வெளியே வந்து தங்கள் பட்டண வாசலில் அணிவகுத்து நின்றனர். அப்பொழுது வந்திருந்த அரசர்களோ நாட்டின் திறந்தவெளியில் ஆயத்தமாக நின்றார்கள்.
10படைவீரர் தனக்கு முன்னும் பின்னும் அணிவகுத்து நிற்பதை யோவாப் கண்டபோது, அவன் இஸ்ரயேலில் திறமைமிக்க படைவீரர் சிலரைத் தெரிந்தெடுத்து, அவர்களை சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிற்கச் செய்தான். 11மற்ற படைவீரரை தன் சகோதரன் அபிசாயின் தலைமையின்கீழ் அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான். 12பின்பு யோவாப் தன் சகோதரனிடம், “சீரியர் என்னைவிட வலிமைமிக்கவர்களாய் இருந்தால், நீ வந்து என்னைத் தப்புவிக்கவேண்டும். அம்மோனியர்கள் உன்னைவிட வலிமையுடையவர்களாய் இருந்தால், நான் வந்து உன்னைத் தப்புவிப்பேன். 13தைரியமாயிருங்கள், நாம் நமது மக்களுக்காகவும், நமது இறைவனின் பட்டணங்களுக்காகவும் தைரியமாய் போரிடுவோம். யெகோவா தன் பார்வைக்கு நலமானபடி செய்வார்” என்றான்.
14பின்பு யோவாப்பும் அவனோடிருந்த வீரர்களும் சீரியருடன் போரிட முன்னேறிச் சென்றனர். அவர்கள் இவர்களுக்கு முன்பாகத் தப்பி ஓடினார்கள். 15சீரியர் தப்பியோடுவதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் யோவாப்பின் சகோதரன் அபிசாயிக்கு முன்பாக தப்பியோடி பட்டணத்திற்குள் நுழைந்தார்கள். எனவே யோவாப் எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.
16தாங்கள் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்ட சீரியர், யூப்ரட்டீஸ் நதிக்கு அப்புறத்தில் தூதுவர்களை அனுப்பி அங்கிருந்த சீரியரைக் கொண்டுவந்தார்கள். ஆதாதேசரின் படைத்தளபதியாகிய சோப்பாக் அவர்களுக்குத் தலைமை தாங்கினான்.
17இது தாவீதிற்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரயேலர் எல்லோரையும் ஒன்றுதிரட்டி யோர்தான் நதியைக் கடந்து சென்றான். அங்கே சீரியருக்கு எதிராக முன்னேறி அவர்களின் முன்பாகத் தனது படையை அணிவகுத்து நிறுத்தினான். அவ்வாறு அவன் அணிவகுத்து நிற்கையில் அவர்கள் அவனுக்கெதிராகப் போரிட்டனர். 18ஆனால் சீரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகத் தப்பி ஓடினார்கள்; தாவீது ஏழாயிரம் தேரோட்டிகளையும், நாற்பதாயிரம் காலாட்களையும் கொன்று, அவர்களுடைய படைத்தளபதி சோப்பாக்கையும் கொன்றான்.
19தாங்கள் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்ட ஆதாதேசருக்குத் காணிக்கை செலுத்துபவர்கள் தாவீதுடன் சமாதானம்பண்ணி, அவனுக்கு அடிபணிந்தார்கள்.
அதன்பின்பு சீரியர் ஒருபோதும் அம்மோனியருக்கு உதவிசெய்ய விரும்பவில்லை.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in