YouVersion Logo
Search Icon

1 இராஜாக்கள் 11

11
சாலொமோனின் மனைவிகள்
1சாலொமோன் அரசன் பார்வோனின் மகளைத்தவிர மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சீதோனியர், ஏத்தியர் ஆகிய நாடுகளிலுள்ள பல பெண்கள்மேலும் ஆசைவைத்தான். 2இந்த நாட்டினரைப் பற்றி யெகோவா முன்பே இஸ்ரயேலரிடம், “பிற நாட்டு மக்களுடன் நீங்கள் திருமண சம்பந்தம் வைக்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் நிச்சயமாய் உங்கள் இருதயங்களை அவர்களுடைய தெய்வங்களிடம் திரும்பச் செய்வார்கள்” என்று கூறியிருந்தார். அப்படியிருந்தும் சாலொமோன் அவர்களில்கொண்ட அன்பினால் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தான். 3அவனுக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த எழுநூறு மனைவிகளும், முந்நூறு வைப்பாட்டிகளும் இருந்தனர். அவனுடைய மனைவிகள் அவனை வழிதவறச் செய்தனர். 4சாலொமோன் வயதுசென்றவனானபோது அவனுடைய மனைவியர் வேறு தெய்வங்களுக்குப் பின்னால் அவனுடைய இருதயத்தைத் திருப்பினார்கள்; அவனுடைய தந்தையான தாவீதின் இருதயத்தைப்போல, அவனுடைய இருதயம் யெகோவாவை முழுமையாகப் பற்றிக்கொள்ளவில்லை. 5சாலொமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருக்கப்படத்தக்க தெய்வமான மில்கோமையும் பின்பற்றினான். 6இப்படியாக சாலொமோன் யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்தான். தன் தகப்பனாகிய தாவீது செய்ததுபோல யெகோவாவை முழுமனதோடு பின்பற்றவில்லை.
7சாலொமோன் எருசலேமின் கிழக்கே ஒரு குன்றின்மேல் மோவாபியரின் அருவருக்கப்படத்தக்க தெய்வமான கேமோசுக்கும், அம்மோனியரின் அருவருக்கப்படத்தக்க தெய்வமான மோளேகுக்கும் ஒரு மேடையைக் கட்டினான். 8அவன் தனது அந்நிய மனைவிகளுக்காக இவ்வாறு செய்தான். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குத் தூபங்காட்டி பலிகளைச் செலுத்தினார்கள்.
9இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இரண்டு முறைகள் சாலொமோனுக்குக் காட்சியளித்திருந்தும், யெகோவாவைவிட்டு அவனுடைய இருதயம் விலகிப்போனதால், யெகோவா சாலொமோனுடன் கோபங்கொண்டார். 10அத்துடன் யெகோவா அவனைப் பிற தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாமென்று தடுத்தும், சாலொமோன் யெகோவாவின் கட்டளையைக் கைக்கொள்ளவில்லை. 11ஆகவே யெகோவா சாலொமோனிடம், “உனது மனப்பான்மை இவ்வாறு இருப்பதாலும், நான் உனக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையையும், விதிமுறைகளையும் நீ கைக்கொள்ளாதபடியாலும் நிச்சயமாக உன் ஆட்சியை உன்னிடமிருந்து பறித்து, உனக்குக் கீழ்ப்பட்ட ஒருவனுக்குக் கொடுப்பேன். 12ஆயினும் உன் தகப்பனாகிய தாவீதின் நிமித்தம் உன் காலத்தில் அதை நான் செய்யமாட்டேன். உன் மகனுடைய கையிலிருந்தே அதைப் பறிப்பேன். 13இருந்தும் அவனிடமிருந்து முழு அரசாட்சியையும் பறிக்காமல் என் அடியவனாகிய தாவீதின் நிமித்தமும், நான் தெரிந்தெடுத்த எருசலேம் பட்டணத்தின் நிமித்தமும், ஒரு கோத்திரத்தை அவனுக்குக் கொடுப்பேன்” என்றார்.
சாலொமோனின் பகைவர்கள்
14அதன்பின் யெகோவா ஏதோமியரின் அரச பரம்பரையிலிருந்து, ஏதோமியனான ஆதாத்தை சாலொமோனுக்கு எதிரான பகைவனாக எழுப்பினார். 15முன்பு ஏதோமியருடன் தாவீது போரிட்டபோது படைத்தலைவனான யோவாப் தங்களில் இறந்தவர்களை அடக்கம்பண்ணப் போயிருந்தான். அவன் அந்நேரம் ஏதோமிலிருந்த எல்லா ஆண்களையும் வெட்டிக்கொன்றான். 16யோவாப்பும் எல்லா இஸ்ரயேலரும் ஏதோமிலிருந்த எல்லா ஆண்களையும் கொன்று முடியுமட்டும் ஆறு மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தனர். 17ஆனால் ஆதாத் இன்னும் ஒரு சிறுவனாகவே இருந்தான். அவன் தன் தகப்பனுக்குப் பணிசெய்த சில ஏதோமிய அதிகாரிகளோடு சேர்ந்து எகிப்திற்குத் தப்பி ஓடினான். 18அவர்கள் மீதியானிலிருந்து புறப்பட்டு பாரானுக்குப் போனார்கள். பின்பு பாரானிலிருந்து சில மனிதரையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டு எகிப்திய அரசனான பார்வோனிடம் எகிப்திற்குப் போனார்கள். எகிப்திய அரசனான பார்வோன் ஆதாத்துக்கு ஒரு வீட்டையும், நிலத்தையும், உணவையும் கொடுத்தான்.
19ஆதாத்துக்கு பார்வோனின் கண்களில் தயவு கிடைத்ததால் தன் சொந்த மனைவியான அரசி தாப்பெனேஸின் சகோதரியை ஆதாத்துக்குத் திருமணம் செய்துகொடுத்தான். 20தாப்பெனேஸின் சகோதரி அவனுக்கு கேனுபாத் என்ற ஒரு மகனைப் பெற்றாள். அவனை தாப்பெனேஸ், அரச அரண்மனையில் வைத்து வளர்த்தாள். அங்கு கேனுபாத் பார்வோனின் சொந்தப் பிள்ளைகளுடன் வாழ்ந்தான்.
21ஆதாத் எகிப்தில் இருந்தபோது தாவீது அவன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான் என்றும், அவன் படைத்தலைவனான யோவாப்பும் இறந்துபோனான் என்றும் கேள்விப்பட்டான். அப்போது அவன் பார்வோனிடம் போய், “நான் என்னுடைய சொந்த நாட்டுக்குப் போக என்னை விட்டுவிடும்” என்று கேட்டான்.
22அதற்குப் பார்வோன், “நீ உன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போவதற்கு இங்கே உனக்கு என்ன குறை இருக்கிறது?” என்று கேட்டான்.
அதற்கு ஆதாத், “ஒரு குறையுமில்லை. ஆனால் என்னைப் போக அனுமதியும்” என்றான்.
23இறைவன், சோபாவின் அரசனாகிய ஆதாதேசர் என்னும் தன் எஜமானிடமிருந்து தப்பி ஓடிய எலியாதாவின் மகனான ரேசோனை, சாலொமோனுக்கு மற்றொரு பகைவனாக எழுப்பினார். 24தாவீது சேபாவின் படைகளை அழித்தபோது, இவன் தன்னுடன் சில கலகக்காரரைச் சேர்த்துக்கொண்டு அவர்களுக்குத் தலைவனானான். அந்தக் கலகக்காரர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கு குடியமர்ந்து, அதைத் தங்களுடைய அதிகாரத்திற்குட்படுத்தினார்கள். 25சாலொமோன் உயிரோடிருந்த காலம் முழுவதும் ஆதாத்துடைய கலகத்துடன்கூட ரேசோனும் இஸ்ரயேலருக்கு எதிரியாக இருந்தான். அப்படியே ரேசோன் சீரியாவில் ஆட்சிசெய்து இஸ்ரயேலருக்கு எதிரியாக இருந்தான்.
சாலோமோனுக்கு எதிராக யெரொபெயாம் கலகம் செய்தல்
26அத்துடன் நேபாத்தின் மகன் யெரொபெயாம் சாலொமோன் அரசனுக்கு எதிராகக் கலகம் செய்தான். சாலொமோனின் அலுவலர்களில் ஒருவனான இவன் சேரேதாவைச் சேர்ந்த எப்பிராயீமிய கோத்திரத்தான். இவனுடைய தாய் செரூகாள் என்னும் பெயருள்ள ஒரு விதவை.
27அவன் அரசனுக்கெதிராய் கலகம் செய்த விதமாவது: சாலொமோன் அரண்மனைத் தளங்களைக் கட்டி, தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்தின் மதிலில் இருந்த இடைவெளிகளையும் நிரப்பினான். 28இத்தருணத்தில் யெரொபெயாம் ஒரு மதிப்புள்ள மனிதனாக காணப்பட்டான். அந்த வாலிபன் தன் வேலைகளை எவ்வளவு கவனமாகச் செய்கிறான் என்பதை சாலொமோன் கவனித்தபோது, யோசேப்பு வீட்டாரின் எல்லா தொழிலாளர்களுக்கும் பொறுப்பாக அவனை வைத்தான்.
29அந்நாட்களில் ஒரு நாள் யெரொபெயாம் எருசலேம் பட்டணத்துக்கு வெளியே போய்க்கொண்டிருந்தபோது, சீலோவைச் சேர்ந்த இறைவாக்கினனான அகியா ஒரு புதிய மேலுடையை உடுத்திக்கொண்டு வழியில் அவனைச் சந்தித்தான். இருவரும் பட்டணத்துக்கு வெளியே தனியாக நின்றனர். 30அகியா தன் புதிய மேலுடையை எடுத்து பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து, 31யெரொபெயாமைப் பார்த்து, “இவற்றில் பத்து துண்டுகளை உனக்கென எடுத்துக்கொள். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுவது இதுவே: ‘சாலொமோனின் கையிலிருந்து ஆட்சியை பறித்து, அதில் பத்து கோத்திரங்களை உனக்குத் தரப்போகிறேன். 32எனது அடியவனாகிய தாவீதின் நிமித்தமாகவும், இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலிருந்தும் நான் தெரிந்தெடுத்த பட்டணமான எருசலேமின் நிமித்தமாகவும், ஒரு கோத்திரம் அவனுக்காக இருக்கும். 33நான் இதைச் செய்வேன். ஏனென்றால் அவன் என்னைக் கைவிட்டு சீதோனியரின் தேவதையான அஸ்தரோத்தையும், மோவாபியரின் தெய்வமான கேமோசையும், அம்மோனியரின் தெய்வமான மில்கோமையும் வணங்கினான். அவன் என்னுடைய வழிகளில் நடக்கவுமில்லை; என் பார்வைக்குச் செம்மையானவற்றைச் செய்யவுமில்லை. சாலொமோனின் தகப்பனான தாவீது செய்ததுபோல என் விதிமுறைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ளவுமில்லை.
34“ ‘ஆனாலும் சாலொமோனின் கையிலிருந்து முழு ஆட்சியையும் எடுக்கமாட்டேன். நான் தெரிந்துகொண்டவனும், என் கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொண்டவனுமான என் அடியவன் தாவீதின் நிமித்தம், சாலொமோனின் வாழ்நாள் முழுவதும் அவனை அரசனாக வைத்திருக்கிறேன். 35தாவீதின் மகனின் கையிலிருந்து பத்து கோத்திரங்களை எடுத்து உனக்குத் தருவேன். 36என் பெயர் தங்கும்படி, நான் தெரிந்தெடுத்த பட்டணமான எருசலேமில் எனக்கு முன்பாக என் அடியவனான தாவீதுக்கு எப்பொழுதும் ஒரு விளக்கு இருக்கும்படி, அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன். 37ஆயினும் உன்னையோ நான் தெரிந்தெடுப்பேன். நீ உன் இருதய விருப்பப்படி எல்லோருக்கும் மேலாக அரசாள்வாய். இஸ்ரயேலுக்கு மேல் அரசனாய் இருப்பாய். 38அப்போது நான் உனக்குக் கட்டளையிடுவதெல்லாவற்றையும் நீ செய்து, என் வழிகளில் நடந்து, என் விதிமுறைகளையும் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் அடியானாகிய தாவீது செய்ததுபோல என் பார்வையில் சரியானதைச் செய்வாயானால், நான் உன்னோடுகூட இருப்பேன். தாவீதுக்கு நான் கட்டியது போல, நீடித்திருக்கும் ஒரு வம்சத்தை உனக்கும் கட்டி இஸ்ரயேலை உனக்குத் தருவேன். 39இப்படிச் செய்வதனால் தாவீதின் வம்சத்தைத் தாழ்த்துவேன். ஆயினும் என்றென்றும் அல்ல’ என்று யெகோவா கூறுகிறார்” என அகியா சொன்னான்.
40அதனால் சாலொமோன் யெரொபெயாமைக் கொலைசெய்ய முயற்சி செய்தான். ஆனால் அவன் சீஷாக் அரசனிடம் எகிப்திற்குத் தப்பி ஓடி, சாலொமோனின் மரணம்வரை அங்கே தங்கியிருந்தான்.
சாலொமோனின் மரணம்
41சாலொமோன் தன் ஆட்சிக்காலத்தில் செய்தவை அனைத்தும், அவன் காண்பித்த ஞானமும் சாலொமோனின் வரலாறுகளின் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. 42சாலொமோன் இஸ்ரயேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் எருசலேமிலிருந்து அரசாண்டான். 43இதன்பின் சாலொமோன் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் தகப்பனான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ரெகொபெயாம் அவனுக்குப்பின் அரசனானான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in