YouVersion Logo
Search Icon

1 இராஜாக்கள் 4

4
சாலொமோனின் அதிகாரிகளும் ஆளுநர்களும்
1அரசன் சாலொமோன் இவ்விதமாக இஸ்ரயேல் முழுவதையும் ஆட்சிசெய்தான்.
2அவனுடைய பிரதான அதிகாரிகள்:
சாதோக்கின் மகன் அசரியா, ஆசாரியனாய் இருந்தான்.
3சீசாவின் மகன்களான ஏலிகோரேப், அகியா ஆகியோர், செயலாளர்களாய் இருந்தனர்.
அகிலூதின் மகன் யோசபாத், பதிவாளனாய் இருந்தான்.
4யோய்தாவின் மகன் பெனாயா பிரதான படைத்தளபதியாய் இருந்தான்.
சாதோக், அபியத்தார் ஆகியோர் ஆசாரியர்களாய் இருந்தார்கள்.
5நாத்தானின் மகன் அசரியா, மாவட்ட அதிகாரிகளுக்குப் பொறுப்பாயிருந்தான்.
நாத்தானின் மகன் சாபூத், ஆசாரியனாகவும், அரசனின் அந்தரங்க ஆலோசகனாகவும் இருந்தான்.
6அகீஷார், அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்தான்.
அப்தாவின் மகன் அதோனிராம், கட்டாய வேலைக்குப் பொறுப்பாயிருந்தான்.
7முழு இஸ்ரயேலருக்கும் மேலாக சாலொமோன் பன்னிரண்டு மாவட்ட ஆளுநர்களை நியமித்திருந்தான். இவர்கள் அரசனுக்கும், அரச குடும்பத்தாருக்கும் உணவு விநியோகம் செய்தார்கள். ஒரு வருடத்தில் ஒரு மாதத்திற்குத் தேவையான உணவை மாதத்திற்கு ஒருவராக விநியோகம் செய்ய வேண்டியிருந்தது.
8அவர்களுடைய பெயர்களாவன:
பென்கர், எப்பிராயீம் மலைநாட்டின் ஆளுநர்.
9பென் தேக்கேர், மாகாஸிலுள்ள சால்பீம், பெத்ஷிமேஷ், ஏலோன் பெத்கனான் ஆகிய இடங்களுக்கு ஆளுநர்.
10பென் கெசெத், அருபோத்திற்கு ஆளுநனாய் இருந்தான். இதில் சோக்கோவும் எப்பேர் நிலங்களும் அடங்கியிருந்தன.
11பென் அபினதாப்#4:11 அபினதாபின் மகன்., நாபோத் தோருக்கு ஆளுநர். அவன் சாலொமோனின் மகள் தாபாத்தைத் திருமணம் செய்திருந்தான்.
12அகிலூதின் மகன் பானா, இவன் தானாக், மெகிதோ, பெத்ஷான் முழுவதையும் ஆளுகை செய்தான். பெத்ஷான் சரேத்தானுக்கு அடுத்து யெஸ்ரயேலுக்குக் கீழே இருந்தது. பானாவின் பகுதி பெத்ஷான் தொடங்கி ஆபேல் மெகொலாவுக்குப்போய் யக்மெயாமில் முடிந்தது.
13பென் கேபேர், ராமோத் கீலேயாத்தில் ஆளுநர். இந்தப் பகுதியில் கீலேயாத்திலுள்ள மனாசேயின் மகனான யாவீரின் குடியிருப்புகளோடு பாசானிலுள்ள அர்கோப்பின் பகுதிகளும், அதைவிட மதிலால் சூழப்பட்ட வெண்கல தாழ்ப்பாள்களையுடைய அறுபது பட்டணங்களும் அடங்கியிருந்தன.
14இத்தோவின் மகன் அகினதாப், மக்னாயீமின் ஆளுநர்.
15அகிமாஸ், நப்தலியின் ஆளுநர். அவன் சாலொமோனின் மகள் பஸ்மாத்தைத் திருமணம் செய்திருந்தான்.
16ஊஷாயின் மகன் பானா என்பவன் ஆசேர், ஆலோத் ஆகியவற்றின் ஆளுநர்.
17பருவாவின் மகன் யோசபாத், இசக்காரில் ஆளுநர்.
18ஏலாவின் மகன் சீமேயி, பென்யமீனின் ஆளுநர்.
19ஊரின் மகன் கேபேர், கீலேயாத்தின் ஆளுநர். எமோரியரின் அரசனான சீகோனின் எல்லைகளும், பாசானின் அரசனான ஓகுவின் எல்லைகளும் இதில் அடங்கியிருந்தன. அந்த மாவட்டத்திற்கு அவன் ஒருவனே ஆளுநனாய் இருந்தான்.
சாலொமோனின் அன்றாட உணவு
20யூதாவின், இஸ்ரயேலின் மக்கள் கடற்கரை மணலைப்போல் எண்ணிக்கையில் பெருகியிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு, குடித்து சந்தோஷமாய் இருந்தார்கள். 21சாலொமோன் அரசன் யூப்ரட்டீஸ் நதி தொடக்கம் எகிப்தின் எல்லைவரை இருந்த பெலிஸ்தியரின் நாடுவரையுள்ள இடங்களையும், ஆட்சிப் பகுதியையும் ஆண்டு வந்தான். இந்த நாடுகள் சாலொமோனுக்கு வரி செலுத்தி அவனுடைய வாழ்நாளெல்லாம் அவனுக்குக் கீழ்ப்பட்டனவாகவே இருந்தன.
22சாலொமோனுக்குத் தினமும் தேவைப்பட்ட உணவுப் பொருட்கள்: முப்பது கோர்#4:22 அதாவது, சுமார் 5,000 கிலோகிராம் சிறந்த மாவும், அறுபது கோர்#4:22 அதாவது, சுமார் 10,000 கிலோகிராம் மாவும், 23தொழுவத்தில் பராமரிக்கப்பட்ட பத்து மாடுகளும், இருபது பசும்புல் மேய்ந்த மாடுகளும், நூறு செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும், அத்துடன் மான்களும், சிறு மான்களும், கலைமான்களும், திறமான கொழுத்த கோழிகளும் ஆகும். 24ஏனெனில் அவனின் ஆட்சி யூப்ரட்டீஸ் நதிக்கு மேற்கே திப்சாவிலிருந்து, காசாவரை இருந்த எல்லா இடத்திலும் பரந்திருந்தது. நாட்டில் எங்கும் சமாதானம் நிலவியது. 25சாலொமோனின் வாழ்நாள் முழுவதும், தாணிலிருந்து பெயெர்செபா வரை இஸ்ரயேலிலும், யூதாவிலும் வாழ்ந்த மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்துவந்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான திராட்சைக் கொடிகளுக்கும், அத்தி மரங்களுக்கும் கீழே வாழ்ந்தனர்.
26சாலொமோனிடம் தேரில் பூட்டும் குதிரைகளுக்கு நாலாயிரம் தொழுவங்களும், பன்னிரெண்டாயிரம் குதிரைகளும் இருந்தன.
27மாவட்ட அதிகாரிகள் ஒவ்வொருவரும் தமக்குரிய மாதத்தில் சாலொமோன் அரசனுக்கும், அரசனின் மேஜைக்கு வரும் எல்லோருக்கும் தேவையான உணவை விநியோகம் செய்தனர். ஒன்றும் குறைவுபடாதவாறு அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். 28அத்துடன் அவர்கள் தொழுவத்திலுள்ள அரசனுடைய தேர் குதிரைகளுக்கும், மற்றும் குதிரைகளுக்கும், வாற்கோதுமையையும், வைக்கோலையும் நியமிக்கப்பட்ட அளவை அவற்றிற்குரிய இடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.
சாலொமோனின் ஞானம்
29இறைவன் சாலொமோனுக்கு ஞானத்தையும், மிகுந்த நுண்ணறிவையும், கடற்கரை மணலைப்போன்ற அளவிடமுடியாத விசாலமான விளங்கிக்கொள்ளும் ஆற்றலையும் கொடுத்தார். 30சாலொமோனுடைய ஞானம் கிழக்கிலிருந்த எல்லா மனிதரின் ஞானத்தைவிடவும், எகிப்தின் எல்லா ஞானத்தைவிடவும் மேலோங்கி விளங்கியது. 31சாலொமோன் வேறு எந்த மனிதனையும்விட ஞானமுள்ளவனாயிருந்தான். இவன் எஸ்ராகியனான ஏத்தான், ஏமான், கல்கோல், தர்தா என்ற மாகோலின் மக்களையும்விட அதிக ஞானமுள்ளவனாயிருந்தான். அவனுடைய புகழ் சுற்றியிருந்த நாடுகளெங்கும் பரவியது. 32இவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான். இவனுடைய பாடல்கள் ஆயிரத்து ஐந்தாகக் கணக்கிடப்பட்டுள்ளன. 33மிகப்பெரிய லெபனோனின் கேதுரு மரம் தொடங்கி, சுவரில் முளைக்கும் ஈசோப்புச் செடி வரைக்குமுள்ள தாவரங்களை விபரித்தெழுதினான். அத்துடன் அவன் பறவைகள், விலங்குகள், ஊரும்பிராணிகள், மீன்கள் ஆகியவற்றைக் குறித்தும் கூறியுள்ளான். 34உலகின் பல நாடுகளிலிருந்த அரசர்களும் சாலொமோனுடைய ஞானத்தைப் பற்றிக் கேள்விப்பட்டார்கள். அவர்களால் அனுப்பப்பட்ட எல்லா மனிதர்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்பதற்கு வந்தார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in