YouVersion Logo
Search Icon

2 சாமுயேல் 12

12
நாத்தான் தாவீதைக் கண்டித்தல்
1யெகோவா நாத்தானை தாவீதிடம் அனுப்பினார்; நாத்தான் தாவீதிடம் வந்து அவனிடம், “ஒரு பட்டணத்தில் இரண்டு மனிதர் இருந்தார்கள், ஒருவன் செல்வந்தன், மற்றவன் ஏழை. 2செல்வந்தனுக்கு ஏராளமான ஆடுகளும், மாடுகளும் இருந்தன. 3ஏழைக்கோ தான் வாங்கி வளர்த்த ஒரு செம்மறியாட்டுக் குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லை. அது அவனோடும், அவன் பிள்ளைகளோடும் வளர்ந்தது; அது அவன் உணவை சாப்பிட்டு, அவன் பாத்திரத்தில் குடித்து, அவன் மடியில் நித்திரை செய்தது. அது அவனுடைய மகளைப்போல் இருந்தது.
4“இப்படியிருக்கையில் ஒரு நாள் அச்செல்வந்தனிடம் ஒரு வழிப்போக்கன் வந்தான்; அந்த வழிப்போக்கனுக்கு உணவு தயாரிப்பதற்குத் தன் மந்தையில் ஒரு செம்மறியாட்டையோ, மாட்டையோ அந்தச் செல்வந்தன் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக அந்த ஏழைக்குச் சொந்தமான செம்மறியாட்டுக் குட்டியைப் பிடித்துத் தன்னிடம் வந்தவனுக்கு உணவு தயாரித்தான்” என்றான்.
5இதைக் கேட்ட தாவீதிற்கு அந்த செல்வந்தன்மேல் கோபம் மூண்டது; எனவே தாவீது நாத்தானிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் அந்த மனிதன் சாகவே தகுதியுள்ளவன் என்பதும் நிச்சயம். 6அவன் இரக்கமில்லாமல் இப்படியான செயலைச் செய்தபடியால், அவன் அந்த செம்மறியாட்டுக் குட்டிக்காக நான்கு மடங்கு விலை கொடுக்கவேண்டும்” என்றான்.
7அப்பொழுது நாத்தான் தாவீதிடம், “நீரே அந்த மனிதன். இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் சவுலிடமிருந்து உன்னை விடுவித்து இஸ்ரயேலரின் அரசனாக உன்னை அபிஷேகம் பண்ணினேன். 8உன் தலைவனுடைய வீட்டையும், அவனுடைய மனைவிகளையும் உனக்குக் கொடுத்தேன். அத்துடன் இஸ்ரயேல் குடும்பத்தையும், யூதா குடும்பத்தையும் கொடுத்தேன். இவையெல்லாம் உனக்குப் போதாதிருந்தால், என்னிடம் கேட்டிருந்தால் இதைவிட அதிகமாகவும் நான் உனக்குக் கொடுத்திருப்பேன் அல்லவா? 9இப்படியிருக்க நீ யெகோவாவுக்கு அருவருப்பான செயலை செய்து அவருடைய வார்த்தைகளை ஏன் புறக்கணித்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக்கொன்று, அவன் மனைவியை உன் மனைவியாக்கினாய்; அம்மோனியரின் வாளால் நீதானே உரியாவை கொலைசெய்தாய். 10இப்படியாக நீ என்னை அவமதித்து, ஏத்தியனான உரியாவின் மனைவியை உனக்குச் சொந்தமாக எடுத்தபடியால் ஒருபோதும் உன் குடும்பத்தைவிட்டு வாள் நீங்காது.’
11“மேலும், யெகோவா சொல்லுகிறதாவது: ‘உன் சொந்தக் குடும்பத்திலிருந்தே உனக்குப் பேரழிவை வரப்பண்ணுவேன், உன் கண்முன்னே உன் மனைவிகளை உனக்கு நெருங்கிய ஒருவனுக்குக் கொடுப்பேன். அவன் அவர்களுடன் பகிரங்கமாக உறவுகொள்வான். 12நீயோ இதை மறைவில் செய்தாய்; நானோ இஸ்ரயேலர் அனைவருக்கும் முன்பாகவும் பகிரங்கமாய் செய்விப்பேன்’ என்று சொல்கிறார்” என நாத்தான் சொன்னான்.
13உடனே தாவீது நாத்தானிடம், “நான் யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்திருக்கிறேன்” என்றான்.
அதற்கு நாத்தான், “யெகோவா உன் பாவத்தை அகற்றிவிட்டார், அதனால் நீ சாகமாட்டாய். 14ஆனால் நீ இப்படிச் செய்ததினால் யெகோவாவினுடைய பகைவர் முன்பாக யெகோவாவை முற்றிலும் அவமதித்தாய். ஆகையால் உனக்குப் பிறக்கும் பிள்ளை நிச்சயமாக சாவான்” என்று சொன்னார்.
15இவ்வாறு சொன்னபின் நாத்தான் தன் வீட்டிற்குப் போனான். அதன்படி உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற பிள்ளையை யெகோவா தண்டித்ததினால் அவன் நோயுற்றான். 16அதைக்கண்ட தாவீது அப்பிள்ளைக்காக இறைவனிடம் வேண்டினான். அவன் உபவாசம் இருந்து வீட்டிற்குள்ளேபோய் தரையில் கிடந்து மன்றாடி இரவுகளைக் கழித்தான். 17அவனுடைய குடும்பத்தின் முதியவர்கள் அவனுக்கு அருகே நின்று, அவனை எழுந்திருக்கும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால் அவனோ மறுத்துவிட்டான்; அவன் அவர்களோடு எந்த உணவைச் சாப்பிடவும் மறுத்தான்.
18ஏழாம்நாள் குழந்தை இறந்துவிட்டது. குழந்தை இறந்த செய்தியைத் தாவீதிற்கு அறிவிப்பதற்கு பணியாட்கள் பயந்தார்கள்; ஏனெனில், “பிள்ளை உயிரோடிருக்கையில் நாங்கள் சொன்னவற்றை அவர் கேட்கவில்லை; இப்பொழுது பிள்ளை இறந்துவிட்டது என எப்படிச் சொல்வோம்? சொன்னால் வீபரீதமான எதையாவது செய்துகொள்வாரே” என தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
19ஆனால் பணியாட்கள் தங்களுக்குள்ளே இரகசியமாய் பேசிக்கொள்கிறதை தாவீது கவனித்தபோது பிள்ளை இறந்துவிட்டான் என்பதை உணர்ந்து கொண்டான். அப்பொழுது அவன், “பிள்ளை இறந்து விட்டானா?” என்று தன் பணியாட்களிடம் கேட்டான்.
அதற்கு அவர்கள், “ஆம் இறந்துவிட்டான்” என்றார்கள்.
20உடனே தாவீது தரையில் இருந்து எழுந்து, குளித்துவிட்டு, எண்ணெய் பூசி தன் உடைகளையும் மாற்றிக் கொண்டான். பின்பு யெகோவாவின் ஆலயத்துக்குச் சென்று யெகோவாவை வழிபட்டான். அதன்பின் தன் சொந்த வீட்டிற்கு போய் உணவு கேட்டு அவர்களிடம் அதை வாங்கிச் சாப்பிட்டான்.
21அப்பொழுது அவன் செய்வதைக் கண்ட பணியாட்கள் அவனிடம், “நீர் ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்? பிள்ளை உயிரோடிருக்கும்போது உபவாசித்து அழுதுகொண்டிருந்தீர்; இப்பொழுது பிள்ளை இறந்தபோது எழுந்து சாப்பிடுகிறீரே?” என்றார்கள்.
22அதற்கு அவன், “பிள்ளை உயிரோடிருந்தபோது, ஒருவேளை யெகோவா எனக்கு இரக்கங்காட்டிப் பிள்ளையை பிழைக்கப்பண்ணுவார் என நினைத்தே நான் உபவாசித்து அழுதுகொண்டிருந்தேன். 23இப்பொழுதோ பிள்ளை இறந்துவிட்டான்; எனவே இனி நான் ஏன் உபவாசிக்கவேண்டும்? என்னால் மறுபடியும் அவனைக் கொண்டுவர முடியுமா? நான் அவனிடம் போவேன்; அவனோ என்னிடம் திரும்பி வரமாட்டான்” என்றான்.
24அதன்பின் தாவீது தன் மனைவி பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி அவளுடன் உறவுகொண்டான். அவள் ஒரு மகனைப் பெற்றாள். அவர்கள் அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டார்கள். யெகோவா அவனில் அன்புகூர்ந்தார். 25யெகோவா அப்பிள்ளையில் அன்பாயிருந்தபடியால், அவர் அப்பிள்ளைக்கு யெதிதியா#12:25 யெதிதியா என்பது யெகோவாவுக்குப் பிரியமானவர் என்று அர்த்தம். எனப் பெயரிடும்படி இறைவாக்கு உரைப்பவனான நாத்தான் மூலம் தாவீதுக்குச் சொல்லி அனுப்பினார்.
26இந்நாட்களில் யோவாப் அம்மோனியரின் ரப்பா பட்டணத்திற்கு எதிராக சண்டையிட்டு அதைக் கைப்பற்றினான். 27அதன்பின் யோவாப் தாவீதிடம் தூதுவர்களை அனுப்பி, “நான் ரப்பா பட்டணத்துக்கு எதிராகப் போரிட்டு அவர்களின் தண்ணீர் விநியோகிக்கும் பகுதியையும் கைப்பற்றினேன். 28நீர் வீரர்களுடன் வந்து பட்டணத்தை முற்றுகையிட்டு அதைக் கைப்பற்றும். இல்லையெனில் நான் அதைக் கைப்பற்றும்போது, அது என்னுடைய பெயரால் அழைக்கப்படும்” என்று சொல்லச் சொன்னான்.
29எனவே தாவீது படை முழுவதையும் திரட்டி ரப்பாவுக்குச் சென்று போரிட்டு அதைக் கைப்பற்றினான். 30பின் அம்மோனிய அரசனின் தலையில் இருந்த மகுடத்தை எடுத்துக்கொண்டான். அது ஒரு தாலந்து எடையுள்ள தங்கமும், விலையுயர்ந்த மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்டதாய் இருந்தது. அந்த மகுடத்தை தாவீதின் தலையில் வைத்தார்கள். அப்பட்டணத்திலிருந்து கொள்ளையிடப்பட்ட பெருந்திரளான பொருட்களை எடுத்துக்கொண்டார்கள். 31அவன் அங்கிருந்த மக்களை வெளியே கொண்டுவந்து, அவர்களை வாள்கள், இரும்பு ஆயுதங்கள், கோடரிகள் முதலியவற்றால் வேலை செய்வதற்கும், செங்கல் செய்யும் வேலையிலும் ஈடுபடுத்தினான். இவ்வாறே தாவீது அம்மோனியரின் எல்லா பட்டணங்களுக்கும் செய்தான். பின்பு தாவீதும் அவனுடைய எல்லாப் படைவீரர்களும் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in