YouVersion Logo
Search Icon

2 சாமுயேல் 2

2
தாவீது யூதாவின் அரசனாக அபிஷேகம் பெறுதல்
1சிறிது காலத்திற்குப்பின் தாவீது யெகோவாவிடம் விசாரித்து, “யூதாவின் பட்டணங்கள் ஒன்றிற்கு நான் போகலாமா?” என்று கேட்டான்.
அதற்கு யெகோவா, “நீ போகலாம்” என்றார்.
மேலும் தாவீது, “நான் எங்கே போகலாம்” என்று யெகோவாவிடம் கேட்டான்.
“நீ எப்ரோனுக்குப் போ” எனச் சொன்னார்.
2எனவே தாவீது தன் இரண்டு மனைவிகளான யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும் எப்ரோனுக்குப் போனான். 3தாவீது தன்னோடுகூட இருந்த மனிதரையும் அவர்கள் ஒவ்வொருவரையும் குடும்பங்களுடன் கூட்டிக்கொண்டு போனான். அவர்கள் எப்ரோனிலும் அதனைச் சேர்ந்த பட்டணங்களிலும் குடியேறினார்கள். 4அப்பொழுது யூதாவின் மனிதர் எப்ரோனுக்கு வந்து, அங்கே தாவீதை யூதா கோத்திரத்தின்மேல் அரசனாக அபிஷேகம் பண்ணினார்கள்.
அவ்வேளை கீலேயாத் யாபேசின் மனிதரே சவுலின் உடலை அடக்கம் செய்தார்களென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. 5எனவே தாவீது கீலேயாத் யாபேசின் மனிதரிடம் தூதுவரை அனுப்பி அவர்களிடம், “உங்கள் அரசனான சவுலை அடக்கம் செய்து அவருக்கு இரக்கம் காட்டினபடியால் யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக. 6மேலும் யெகோவா உங்களுக்கு தயவையும் தமது உண்மையையும் காட்டுவாராக. நீங்கள் இதைச் செய்ததால் நானும் உங்களுக்கு அதே தயவைக் காட்டுவேன். 7இப்பொழுது நீங்கள் உங்களைப் பெலமும் தைரியமும் உள்ளவர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அரசன் சவுல் இறந்துவிட்டதினால், யூதா கோத்திரத்தார் என்னைத் தங்கள் அரசனாக அபிஷேகம் செய்துள்ளார்கள்” என்று அவர்களுக்கு சொல்லச் சொன்னான்.
தாவீதின் மற்றும் சவுலின் குடும்பங்களிடையே யுத்தம்
8அவ்வேளையில் சவுலின் படைத்தளபதி நேரின் மகன் அப்னேர், சவுலின் மகன் இஸ்போசேத்தைக்#2:8 இஸ்போசேத்தை என்ற பெயருக்கு எபிரெயத்தில் பாகாலின் மகன் என்று அர்த்தம். கூட்டிக்கொண்டு மக்னாயீமுக்குப் போனான். 9அவன் இஸ்போசேத்தை கீலேயாத், அசூரியா, யெஸ்ரயேல், எப்பிராயீம், பென்யமீன் ஆகிய நாடுகளுக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அரசனாக்கினான்.
10சவுலின் மகன் இஸ்போசேத் இஸ்ரயேலுக்கு அரசனானபோது அவனுக்கு நாற்பது வயது; அவன் இரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான். ஆயினும் யூதா குடும்பத்தார் தாவீதைப் பின்பற்றினார்கள். 11தாவீது எப்ரோனிலே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் யூதா குடும்பத்தாருக்கு அரசனாயிருந்தான்.
12பின்பு நேரின் மகன் அப்னேர் சவுலின் மகன் இஸ்போசேத்தின் ஆட்களைக் கூட்டிக்கொண்டு மக்னாயீமிலிருந்து புறப்பட்டு கிபியோனுக்குப் போனான். 13அதேவேளை செருயாவின்#2:13 செருயா யோவாபின் தாய். மகன் யோவாபும், தாவீதின் ஆட்களுடன் போய் கிபியோனின் குளத்தின் அருகில் அவர்களைச் சந்தித்தான். ஒரு கூட்டம் குளத்தின் ஒரு பக்கத்திலும், மற்றொரு கூட்டம் குளத்தின் மறுபக்கத்திலும் இருந்தது.
14அப்பொழுது அப்னேர் யோவாபிடம், “எங்கள் முன்னிலையில் வாலிபர் சிலர் வந்து நேருக்குநேர் நின்று போட்டியிடட்டும்” என்றான்.
அதற்கு யோவாப், “அப்படியே செய்யட்டும்” என்றான்.
15எனவே சவுலின் மகன் இஸ்போசேத்தின் பக்கத்தில் பென்யமீன் கோத்திரத்தாரில் பன்னிரண்டு பேரும், தாவீதின் பக்கத்தில் அவனுடைய மனிதரில் பன்னிரண்டு பேரும் எண்ணி விடப்பட்டார்கள். 16அவர்கள் ஒவ்வொருவரும் எதிர்ப்பக்கத்திலுள்ள ஒவ்வொருவருடைய தலையையும் பிடித்து வாளால் குத்தியதால், எல்லோரும் ஒருமித்து விழுந்து இறந்தார்கள். எனவே கிபியோனில் இருந்த அந்த இடம் எல்காத் அசூரிம் என்று அழைக்கப்பட்டது.
17அன்றையதினம் யுத்தம் மிகவும் கடுமையாய் இருந்தது. அப்னேரும், இஸ்ரயேல் மக்களும் தாவீதின் மனிதரால் தோற்கடிக்கப்பட்டார்கள்.
18அங்கே செருயாவின் மூன்று மகன்களான யோவாப், அபிசாய், ஆசகேல் என்பவர்கள் இருந்தார்கள். ஆசகேல் ஒரு காட்டுக் கலைமானைப்போல் வேகமாக ஓடும் ஆற்றலுடையவன். 19அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறமோ இடதுபுறமோ திரும்பாமல் அவனைத் துரத்திச்சென்றான். 20அப்பொழுது அப்னேர் ஆசகேலைத் திரும்பிப்பார்த்து அவனிடம், “நீ ஆசகேல் அல்லவா?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “நானேதான்” என்றான்.
21எனவே அப்னேர் அவனிடம், “நீ என்னைப் பின்தொடராமல் வலதுபுறமோ இடதுபுறமோ திரும்பி வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனிடமிருந்து ஆயுதங்களை எடுத்துக்கொள்” என்றான். ஆனால் ஆசகேல் அவனைத் துரத்துவதை நிறுத்தவில்லை.
22மறுபடியும் அப்னேர் ஆசகேலை எச்சரித்தான். அப்னேர் அவனிடம், “என்னைத் துரத்துவதை நிறுத்து. நான் உன்னை ஏன் கொல்லவேண்டும். உன்னைக் கொலை செய்தால் உன் சகோதரன் யோவாபின் முகத்தில் எப்படி விழிப்பேன்?” என்றான்.
23ஆனாலும் ஆசகேலோ துரத்துவதை நிறுத்த மறுத்துவிட்டதால், உடனே அப்னேர் திரும்பி தன் ஈட்டியின் பின்பகுதியினால் ஆசகேலின் வயிற்றில் குத்தினான். ஈட்டி அவன் உடலில் ஊடுருவி முதுகு வழியே வந்தது. அவன் அவ்விடத்திலேயே விழுந்து இறந்தான். அவனுக்குப் பின்னால் வந்த ஒவ்வொருவரும் ஆசகேல் இறந்து கிடந்த இடத்திற்கு வந்தபோது அங்கேயே தரித்து நின்றுவிட்டார்கள்.
24ஆனால் யோவாபும், அபிசாயும் அப்னேரைத் துரத்திச் சென்றார்கள். அவர்கள் சூரியன் மறையும் மாலை நேரத்தில் கிபியோன் பாலைவனத்திற்கு போகும் வழியில் கீயாவுக்கு அருகேயுள்ள அம்மா என்னும் குன்றுவரை வந்தார்கள். 25அப்பொழுது பென்யமீன் கோத்திரத்து மக்கள் அப்னேருக்கு பின்னாக ஒன்றுதிரண்டு கூட்டமாக ஒரு மலை உச்சியில் சண்டைக்கு ஆயத்தமாக நின்றார்கள்.
26அப்னேர் யோவாபைக் கூப்பிட்டு அவனிடம், “வாள் ஓய்வின்றி எப்பொழுதும் வெட்டி வீழ்த்த வேண்டுமா? அதன் முடிவு கசப்பானதாய் இருக்கும் என்று நீ உணரவில்லையா? தங்கள் சகோதரரைத் துரத்துவதை நிறுத்தும்படி உன் மனிதருக்கு எப்போது கட்டளையிடப் போகிறாய்?” எனக் கேட்டான்.
27அதற்கு யோவாப், “நீ இப்படிச் சொல்லியிராவிட்டால் இறைவன் வாழ்வது நிச்சயம்போல, எனது படைவீரர் தங்கள் சகோதரரை விடியும்வரை துரத்தியிருப்பார்கள் என்பதும் நிச்சயம்” என்றான்.
28எனவே யோவாப் எக்காளம் ஊதியவுடன் படைவீரர் துரத்துவதை நிறுத்திவிட்டார்கள். அதன்பின் அவர்கள் இஸ்ரயேலரைத் துரத்தவுமில்லை, யுத்தம் செய்யவுமில்லை.
29அன்றிரவு முழுவதும் அப்னேரும் அவன் ஆட்களும் அரபா வழியாக அணிவகுத்து நடந்தார்கள். அவர்கள் யோர்தானைக் கடந்து, பித்ரோன் முழுவதும் நடந்து மக்னாயீமுக்கு வந்து சேர்ந்தார்கள்.
30யோவாப் அப்னேரைத் துரத்திச் செல்வதைவிட்டுத் தன் மக்களனைவரையும் ஒன்றுகூட்டினான். தாவீதின் ஆட்களில் ஆசகேலுடன் சேர்த்து இன்னும் பத்தொன்பதுபேர் குறைவாக இருந்தார்கள். 31ஆனால் தாவீதின் ஆட்கள் அப்னேரிடமிருந்த பென்யமீன் கோத்திரத்தாரில் முந்நூற்று அறுபதுபேரைக் கொலைசெய்திருந்தார்கள். 32அவர்கள் ஆசகேலின் உடலை எடுத்துக்கொண்டுபோய் பெத்லெகேமிலுள்ள அவன் தகப்பன் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். அதன்பின் யோவாபும் அவன் ஆட்களும் இரவு முழுவதும் அணிவகுத்துச்சென்று, பொழுது விடியும்போது எப்ரோனை வந்தடைந்தார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in