YouVersion Logo
Search Icon

2 சாமுயேல் 20

20
தாவீதுக்கு எதிராக சேபாவின் கலகம்
1அப்பொழுது பென்யமீன் கோத்திரத்தானான பிக்கிரியின் மகன் சேபா என்னும் கலகக்காரனும் அங்கே இருந்தான். அவன் எக்காளத்தை ஊதி மக்களிடம் சொன்னதாவது:
“எங்களுக்குத் தாவீதிடம் பங்கில்லை,
ஈசாயின் மகனிடத்தில் எங்களுக்கு ஒரு பாகமுமில்லை.
இஸ்ரயேலின் நீங்கள் எல்லோரும் உங்கள் கூடாரங்களுக்கு போய்விடுங்கள்.”
2எனவே இஸ்ரயேலர் அனைவரும் தாவீதை விட்டுப்பிரிந்து பிக்கிரியின் மகன் சேபாவைப் பின்பற்றினார்கள். ஆனால் யூதா மக்களோ யோர்தான் தொடங்கி எருசலேமுக்குப் போகும் வழியெல்லாம் அரசனோடேயே இருந்தார்கள்.
3தாவீது எருசலேமிலுள்ள தன் அரண்மனைக்குத் திரும்பிவந்தபோது, அரண்மனையைப் பார்க்கும்படி விட்டுப்போயிருந்த தன் பத்து மறுமனையாட்டிகளையும் ஒரு காவலாளனின் பொறுப்பில் ஒரு வீட்டில் வைத்தான். அவர்களுக்கு தேவையானவற்றைக் கொடுத்தானேயல்லாமல், அவர்களுடன் உறவுகொள்ளவில்லை. அவர்கள் மரணமடைய மட்டும் விதவைகளைப்போல் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.
4அதன்பின் அரசன் அமாசாவிடம், “இன்னும் மூன்று நாட்களுக்குள் யூதா மக்களை என்னிடம் அழைப்பித்து, அத்துடன் நீயும் என்னுடன் இருக்கவேண்டும்” எனச் சொன்னான். 5ஆனால் யூதா மக்களை அழைத்துவரும்படி சென்ற அமாசா, அரசன் தனக்குக் குறிப்பிட்ட காலத்தையும்விட அதிக காலத்தை எடுத்தான்.
6எனவே தாவீது அபிசாயிடம், “அப்சலோம் நமக்குச் செய்த தீங்கிலும் அதிக தீங்கை இப்பொழுது பிக்கிரியின் மகன் சேபா செய்வான். எனவே நீ உனது எஜமானின் மனிதரைக் கூட்டிக்கொண்டு அவனைத் துரத்திக்கொண்டு போ. இல்லையெனில் அவன் அரணான பட்டணங்களைத் தேடி எங்களிடமிருந்து தப்பிவிடுவான்” என்றான். 7அதன்படியே யோவாபின் வீரரும், கிரேத்தியரும், பிலேத்தியரும் எல்லா வலிமைமிக்க வீரரும் அபிசாயின் தலைமையில் புறப்பட்டார்கள். அவர்கள் பிக்கிரியின் மகன் சேபாவைத் துரத்திப்பிடிக்கும்படி எருசலேமிலிருந்து அணிவகுத்துச் சென்றார்கள்.
8கிபியோனிலுள்ள பெரும் கற்பாறை அருகே அவர்கள் இருந்தபோது, அமாசா அவர்களைச் சந்திக்க வந்தான். அப்பொழுது யோவாப் இராணுவ சீருடையை அணிந்திருந்தான். அதன்மேல் அவனுடைய இடுப்புப்பட்டியில் ஒரு குறுவாள் கட்டப்பட்டிருந்தது. அவன் முன்னால் அடியெடுத்து வைத்தபோது அது உறையிலிருந்து கீழே விழுந்தது.
9அப்பொழுது யோவாப் அமாசாவிடம், “சகோதரனே எப்படியிருக்கிறாய்?” என்று கேட்டு அவனை முத்தமிடுவதற்காக தன் வலதுகையால் அவன் தாடியைப் பிடித்து இழுத்தான். 10அமாசாவோ யோவாபின் இடதுகையில் இருந்த குறுவாளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவில்லை. அப்பொழுது யோவாப் அவனுடைய வயிற்றில் குத்தினான். அமாசாவின் குடல் தரையில் விழுந்தது. மீண்டும் குத்தப்படாமலேயே அமாசா இறந்தான். அதன்பின் யோவாபும் அவன் சகோதரன் அபிசாயும் பிக்கிரியின் மகன் சேபாவை பிடிக்க தொடர்ந்து போனார்கள்.
11அப்பொழுது யோவாபின் வீரர்களிலொருவன் அமாசாவின் உடலருகே நின்று, “யோவாபை ஆதரிக்கும் எவனும், தாவீதின் பக்கம் இருக்கும் எவனும் யோவாபைப் பின்தொடரட்டும்” என்றான். 12அமாசா நடுவழியில் இரத்தத்தில் மூழ்கிக்கிடந்தான். அங்கு வந்த படைவீரர் அமாசாவின் உடலைப் பார்க்க தாமதித்து நிற்பதை அவன் கண்டான். அதனால் அமாசாவின் உடலை வழியிலிருந்து இழுத்து வயலுக்குள் போட்டு அதை ஒரு துணியால் மூடினான். 13அமாசாவின் உடல் வழியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டபின், படைவீரர் அனைவரும் பிக்கிரியின் மகன் சேபாவை துரத்திப்பிடிக்கும்படி யோவாபுடன் போனார்கள்.
14சேபா இஸ்ரயேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவாகிய ஆபேலுக்கு வந்து அங்கு அவன் பேரேத்தியரின் பிரதேசம் வழியாகச் சென்றான். அவர்கள் ஒன்றுபட்டு அவனைப் பின்தொடர்ந்தார்கள். 15யோவாபுடன் இருந்த வீரர்கள் வந்து ஆபேல் பெத்மாக்காவாகிய சேபாவை முற்றுகையிட்டார்கள். பட்டணத்துக்கு எதிரே ஒரு முற்றுகை கொத்தளத்தைக் கட்டினார்கள். அது வெளி அரணுக்கு எதிரே இருந்தது. பட்டணத்து மதிலை வீழ்த்தும்படி அதை இடித்துக் கொண்டிருக்கும்போது, 16ஒரு ஞானமுள்ள பெண் பட்டணத்திலிருந்து சத்தமிட்டுக் கூப்பிட்டு, “கேளுங்கள், கவனியுங்கள்; நான் யோவாபுடன் பேசும்படி அவரை இங்கே வரச்சொல்லுங்கள்” என்றாள். 17எனவே யோவாப் அவளிடம் வந்தபோது அவள், “நீர்தானா யோவாப்?” என்று கேட்டாள்.
அதற்கு யோவாப், “நானேதான்” என்றான்.
அப்பொழுது அப்பெண், “உமது அடியாள் சொல்வதைக் கேளும்” என்றாள்.
அதற்கு அவன், “கேட்கிறேன்” என்றான்.
18தொடர்ந்து அவள், “வெகுகாலத்திற்குமுன் மக்கள், ‘ஆபேலில் ஆலோசனையைக் கேளுங்கள்’ எனச் சொல்வது வழக்கம். அவ்வாறே மக்கள் தங்கள் வழக்குகளைத் தீர்த்தார்கள். 19இஸ்ரயேலில் நாங்கள் சமாதானமும், உண்மையுமுள்ளவர்கள்; இஸ்ரயேலருக்கு ஒரு தாய்போல் இருக்கும் இப்பட்டணத்தை நீங்கள் அழிக்க விரும்புகிறீர்கள்; யெகோவாவினுடைய உரிமைச்சொத்தை ஏன் நீங்கள் விழுங்கப் பார்க்கிறீர்கள்?” என்றாள்.
20அதற்கு யோவாப், “அப்படிப்பட்ட எண்ணம் எனக்கில்லை. அதை அழித்து ஒழிக்கும் எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. 21அது எங்களுடைய நோக்கமல்ல; எப்பிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த பிக்கிரியின் மகனான சேபா என்பவன் அரசனுக்கு எதிராக, தாவீதுக்கு எதிராகத் தன் கையை ஓங்கியிருக்கிறான். அந்த ஒரு மனிதனை எங்களிடத்தில் ஒப்படைத்தால் நாங்கள் பட்டணத்தைவிட்டுப் போய்விடுவோம்” என்றான்.
அப்பொழுது அப்பெண் யோவாபிடம், “அவனுடைய தலை மதிலுக்கு மேலாக உன்னிடத்தில் எறியப்படும்” என்றாள்.
22அதன்படியே அந்தப் பெண் எல்லா மக்களிடமும் ஞானமாய் பேசியதால், அவர்கள் பிக்கிரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி யோவாபிடம் எறிந்துவிட்டார்கள். அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதினன். படைவீரர் அனைவரும் பட்டணத்தைவிட்டு கலைந்து ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளுக்குப் போனார்கள். யோவாபும் எருசலேமுக்கு அரசனிடம் போனான்.
தாவீதின் அதிகாரிகள்
23யோவாப் இஸ்ரயேலின் முழு படைகளுக்கும் தலைவனாகவும்,
யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியருக்கும், பிலேத்தியருக்கும் தலைவனாகவும் இருந்தார்கள்.
24அதோராம் கட்டாய வேலைசெய்பவர்களுக்குப் பொறுப்பாகவும்
அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளனாகவும்,
25சேவா செயலாளராகவும்,
சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களாகவும் இருந்தார்கள்.
26அத்துடன் யயீரியனான ஈரா தாவீதின் ஆசாரியனாயும் இருந்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in