YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 29

29
எகிப்திற்கு விரோதமாய் இறைவாக்கு
பார்வோன் மீதான தீர்ப்பு
1அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பத்தாம் வருடம், பத்தாம் மாதம், பன்னிரண்டாம் நாளிலே, யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. 2“மனுபுத்திரனே, நீ எகிப்தின் அரசனாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தை திருப்பி, அவனுக்கும் முழு எகிப்திற்கும் விரோதமாய் இறைவாக்குரைத்து சொல். 3நீ அவனோடு பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.
“ ‘எகிப்தின் அரசனாகிய பார்வோனே,
நீரோடைகளின் நடுவே கிடக்கும் பெரும் இராட்சத முதலையே!
நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்.
“நீயோ, நைல் நதி என்னுடையது;
அதை எனக்காக நானே உண்டாக்கினேன்” என சொல்லிக்கொள்கிறாய்.
4ஆனால் நான் உன் தாடைகளில் தூண்டில் மாட்டி,
உன் நீரோடைகளின் மீன்களை உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன்.
உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும் எல்லா மீன்களோடும் சேர்த்து,
உன் நீரோடைகளின் நடுவிலிருந்து நான் உன்னை இழுத்தெடுப்பேன்.
5நான் உன்னையும் உன் நீரோடைகளின்
எல்லா மீன்களையும் பாலைவனத்தில் விட்டுவிடுவேன்.
திறந்த வெளியிலே நீ விழுவாய்.
நீ சேர்க்கப்படவோ எடுக்கப்படவோமாட்டாய்.
நான் உன்னைப் பூமியின் மிருகங்களுக்கும்,
ஆகாயத்துப் பறவைகளுக்கும் உணவாகக் கொடுப்பேன்.
6அப்பொழுது எகிப்தில் வாழும் அனைவரும் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.
“ ‘நீ இஸ்ரயேலருக்கு நாணல் புல்லினாலான ஊன்றுகோலாயிருந்தாய். 7அவர்கள் உன்னைத் தங்கள் கைகளினால் இறுக்கி பிடித்தபோது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப் போகச்செய்வாய்.
8“ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நானே உனக்கு விரோதமாய் ஒரு வாளைக் கொண்டுவந்து, உன் மனிதர்களையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன். 9எகிப்து அழிந்து பாழ்நிலமாகும். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.
“ ‘நைல் நதி என்னுடையது; “நானே அதை உன்டாக்கினேன்” என்று நீ சொன்னாய் அல்லவோ? 10ஆகவே நான் உனக்கும் உன் நீரோடைகளுக்கும் விரோதமாக இருக்கிறேன். மிக்தோல் தொடக்கம்முதல் அஸ்வான்வரை, எத்தியோப்பியாவின் எல்லைவரையுள்ள எகிப்து நாட்டை இடிபாடுகளுடைய பாழ்நிலமாக்குவேன். 11மனித கால்களோ, மிருகத்தின் கால்களோ அதைக் கடப்பதில்லை. நாற்பது வருடங்களுக்கு ஒருவரும் அங்கு வாழப்போவதுமில்லை. 12பாழாய்ப்போன நாடுகளின் மத்தியில் எகிப்தையும் நான் பாழாக்குவேன். இடிபாடுகளுள்ள பட்டணங்களிடையே, அவளது பட்டணம் நாற்பது வருடங்கள் கிடக்கும். நான் எகிப்தியரைப் பல நாடுகளுக்குள்ளும் சிதறிப்போகச்செய்து அவர்களை நாடுகளுக்கூடே சிதறடிப்பேன்.
13“ ‘எனினும், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே நான் அந்த நாற்பது வருடங்களின் முடிவில், எகிப்தியரை, சிதறடிக்கப்பட்டிருந்த பல நாடுகளுக்குள்ளும் இருந்து, ஒன்றுசேர்ப்பேன். 14திரும்பவும் நான் அவர்களைச் சிறையிருப்பிலிருந்து கொண்டுவந்து அவர்களுடைய முன்னோரின் நாடாகிய எகிப்தின் பத்ரோசுக்குக் கொண்டுவருவேன். அங்கே அவர்கள் ஒரு சிறிய அரசாக இருப்பார்கள். 15அது அரசுகளிலெல்லாம் சிறியதாயிருக்கும். இனியொருபோதும் மற்ற நாடுகளின்மேல் தன்னை அது உயர்த்தாது. இனியொருகாலமும் அது நாடுகளுக்குமேல் ஆளுகைசெய்யாத அளவுக்கு அதை நான் பலவீனப்படுத்துவேன். 16எகிப்து இனியொருபோதும் இஸ்ரயேலரின் நம்பிக்கையின் ஆதாரமாய் இருக்கமாட்டாது. ஆனால் ஆதரவுக்காக அவளிடம் திரும்பியவர்களின் பாவத்தின் ஒரு ஞாபகமாய் அது இருக்கும். அப்பொழுது அவர்கள் ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.’ ”
எகிப்து நேபுகாத்நேச்சாருக்குக் கொடுக்கப்படுதல்
17அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட இருபத்தேழாம் வருடம், முதலாம் மாதம், முதலாம் நாளிலே யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம், 18“மனுபுத்திரனே, பாபிலோன் அரசனாகிய நேபுகாத்நேச்சார் தனது இராணுவத்தைத் தீருவுக்கு விரோதமாய் அனுப்பி, கடும் தாக்குதலை மேற்கொண்டான். ஒவ்வொருவனின் தலையும் மொட்டையாக்கப்பட்டு, ஒவ்வொருவனின் தோலும் புண்ணாகும்வரை தோலுரிக்கப்பட்டன. அப்படியிருந்தும் அவனும் அவனுடைய இராணுவமும், தீருவுக்கு எதிராக நடத்திய படையெடுப்பின் பலனைப் பெறவில்லை.” 19ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நான் எகிப்தை பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சாருக்குக் கையளிக்கப்போகிறேன். அதன் செல்வத்தை அவன் எடுத்துக்கொண்டு போவான். அவன் தன் இராணுவங்களுக்குக் கூலியாக நாட்டைச் சூறையாடிக் கொள்ளையிடுவான். 20அவனும் அவனுடைய இராணுவமும் அதை எனக்காகச் செய்தபடியினால், அம்முயற்சிக்கு வெகுமதியாக எகிப்தை அவனுக்குக் கொடுத்திருக்கிறேன் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
21“அந்த நாளிலே நான் இஸ்ரயேலருக்குப் புதுப்பெலனைக் கொடுத்து, அவர்கள் மத்தியில் உன் வாயைத் திறப்பேன். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in