YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 33

33
எசேக்கியேல் ஒரு காவலாளி
1யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: 2“மனுபுத்திரனே, உன்னுடைய நாட்டு மக்களுடன் நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘நான் ஒரு நாட்டுக்கு விரோதமாய் வாளைக் கொண்டுவரும்போது, நாட்டு மக்கள் தங்களுடைய எல்லைகளிலுள்ள ஒருவனைத் தெரிந்துகொண்டு, அவனைத் தம் காவற்காரனாக வைத்தபின்பு, 3அவன், நாட்டுக்கு விரோதமாக வரும் வாளைக்கண்டதும், எக்காளம் ஊதி, மக்களை எச்சரிக்கிறான். 4அப்பொழுது எவனாகிலும் அந்த எக்காளத் சத்தத்தைக் கேட்டும் எச்சரிக்கையாக இல்லாமல் இருந்தால், வாள் வந்து அவன் உயிரைப் பறித்துவிடும். அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மீதே இருக்கும். 5எக்காளத் தொனியைக் கேட்டும் அவன் எச்சரிப்பை ஏற்கவில்லை, ஆகையால் அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மீதே இருக்கும். எச்சரிப்பை அவன் ஏற்றிருப்பின் அவன் தன்னைத்தானே பாதுகாத்திருந்திருப்பான். 6ஆனால், வாள் வருகிறதைக் காவலாளி கண்டும், மக்களை எச்சரிப்பதற்காக எக்காளத்தை ஊதாமலிருந்தால், வாள் வந்து அவர்களில் ஒருவனுடைய உயிரைப் பறிக்குமாயின், அந்த மனிதன் தன் பாவத்தினிமித்தமே அழிக்கப்படுவான். ஆனால் நான் அவனுடைய இரத்தப்பழிக்கு அக்காவலாளியிடம் கணக்குக்கேட்பேன்.’
7“மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலாளியாக நியமித்திருக்கிறேன். ஆதலால் நீ, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு, அவர்களுக்கு எனது எச்சரிப்பைக் கொடு. 8நான் கொடியவன் ஒருவனிடம், ‘கொடியவனே, நீ நிச்சயமாய் சாவாய்’ என கூறும்போது, அக்கொடியவன் தன் வழிகளை விட்டுத் திரும்பும்படி நீ அவனிடம் பேசாமற்போனால், அந்தக் கொடியவன் தன் பாவத்திலே மரிப்பான். அவனுடைய இரத்தப்பழிக்கு உன்னிடமே நான் கணக்குக்கேட்பேன். 9ஆயினும், அக்கொடியவன் தன் வழிகளை விட்டுத் திரும்பும்படி நீ எச்சரித்தும், அதை அவன் ஏற்காவிட்டால், அவன் தன் பாவத்தின் நிமித்தமே மரிப்பான். நீயோ உன்னைக் காத்துக்கொள்வாய்.
10“மனுபுத்திரனே, நீ இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு சொல்லவேண்டியதாவது: ‘ “நீங்கள் எங்கள் குற்றங்களும் பாவங்களும் எங்களுக்குப் பாரமாயின. அவைகளாலே நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோமே! அப்படியானால் நாங்கள் வாழ்வது எப்படி? என சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே?” ’ 11ஆனால் ஆண்டவராகிய யெகோவா சொல்கிறதாவது, ‘நான் வாழ்வது நிச்சயம்போலவே, கொடியவர்களின் மரணத்தில் நான் மகிழ்வதில்லை; அவர்கள் தங்கள் வழிகளை விட்டுத் திரும்பி வாழ்வதையே விரும்புகிறேன் என்பதும் நிச்சயம். திரும்புங்கள், உங்கள் தீயவழிகளைவிட்டுத் திரும்புங்கள்; இஸ்ரயேல் குடும்பத்தாரே! நீங்கள் ஏன் சாகவேண்டும்?’ என்கிறார் என்று அவர்களுக்குச் சொல்.
12“ஆதலால் மனுபுத்திரனே, உனது நாட்டு மக்களிடம் நீ சொல்லவேண்டியதாவது: ‘நீதியானவன் கீழ்ப்படியாதபோது, அவனுடைய நீதி அவனைக் காப்பாற்றமாட்டாது. கொடியவன் தன் கொடிய வழிகளிலிருந்து திரும்பும்போது, அவனுடைய கொடுமை அவன் வீழ்ச்சியடைவதற்குக் காரணமாயிருக்கவும் மாட்டாது. நீதியானவன் பாவம் செய்வானாயின் அவனுடைய முந்திய நீதியினிமித்தம் அவன் வாழ்வதற்கு அனுமதிக்கப்படமாட்டான்.’ 13ஆனால் நீதிமான் ஒருவன் நிச்சயமாக வாழ்வான் என நான் கூறியிருக்க, அவன் தன் நீதியிலே நம்பிக்கை வைத்து, தீமைகளைச் செய்வானேயாகில் அவன் முன்செய்த நீதியான காரியங்கள் எதுவுமே நினைக்கப்படுவதில்லை. அவன் தான் செய்த தீமையினிமித்தம் மரிப்பான். 14மேலும் நான் ஒரு கொடியவனிடம், ‘நிச்சயமாக நீ சாவாய்’ எனச் சொல்லியிருக்க, அவன் தன் பாவத்திலிருந்து திரும்பி, நீதியும் சரியானதையும் செய்து, 15அவன் கொடுத்த கடனுக்காகப் பெற்றுக்கொண்ட அடைமானத்தையும் மீளக்கொடுத்து, தான் திருடியவற்றையும் திருப்பிக் கொடுத்து, வாழ்வு கொடுக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி, தீமைசெய்யாது விடுவானாயின், நிச்சயமாக அவன் வாழ்வான். அவன் சாகமாட்டான். 16அவன் செய்த பாவங்கள் எதுவுமே அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை. அவன் நீதியும் சரியானதையும் செய்தானே. நிச்சயமாக அவன் வாழ்வான்.
17“ஆயினும், உன் நாட்டு மனிதர், ‘யெகோவாவின் வழி நீதியானதல்ல’ என்கிறார்கள். ஆனால் அவர்களின் வழிதான் நீதியற்றது. 18நீதியான ஒருவன் தன் நீதியிலிருந்து திரும்பி தீமைகளைச் செய்வானாகில், அதற்காக அவன் மரிப்பான். 19கொடியவனொருவன் தன் கொடுமையிலிருந்து விலகி, நீதியும் நியாயமுமானவற்றைச் செய்வானாயின், அப்படிச் செய்வதன் நிமித்தம் அவன் வாழ்வான். 20ஆனாலும், இஸ்ரயேல் குடும்பத்தாரே, ‘நீங்கள் யெகோவாவின் வழி நீதியானதல்ல’ என்கிறீர்கள். உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்பேன் என்கிறார்” என்றான்.
எருசலேமின் வீழ்ச்சிக்குக் காரணம்
21நாங்கள் நாடுகடத்தப்பட்ட பன்னிரண்டாம் வருடம், பத்தாம் மாதம், ஐந்தாம் நாள் எருசலேமிலிருந்து தப்பி வந்த மனிதன் ஒருவன் என்னிடம் வந்து, “நகரம் வீழ்ந்தது” என்றான். 22அந்த மனிதன் வருவதற்கு முந்திய நாள் சாயங்காலம் யெகோவாவின் கரம் என்மேல் வந்தது. காலையில் அம்மனிதன் என்னிடம் வருமுன் அவர் என் வாயைத் திறந்தார். என் வாய் திறக்கப்பட்டிருந்தபடியினால் நான் மவுனமாயிருக்கவில்லை.
23அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: 24“மனுபுத்திரனே, இஸ்ரயேல் நாட்டில் அழிவு ஏற்பட்ட நகரங்களில் எஞ்சி வாழும் மக்கள், ‘ஆபிரகாம் ஒரே ஒரு மனிதனாக இருந்தும் முழு நாட்டையும் உரிமையாக்கிக் கொண்டானே; நாங்களோ அநேகராய் இருக்கிறோம். நிச்சயமாக இப்பொழுது நாடு எங்களுக்கு உரிமையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதல்லவா’ என்கிறார்கள். 25ஆகவே, நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிடுவதுடன், விக்கிரகங்களை நம்பி இரத்தமும் சிந்துகிறீர்கள். அப்படியிருக்க நாடு உங்களது உரிமையாகலாமோ? 26நீங்கள் உங்கள் வாளிலே நம்பிக்கை வைக்கிறீர்கள். வெறுக்கத்தக்க காரியங்களையும் செய்கிறீர்கள். மேலும் நீங்கள் ஒவ்வொருவரும் தன் அயலான் மனைவியைக் கறைப்படுத்துகிறீர்கள். அப்படியிருக்க நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ?’ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
27“இதையும் அவர்களிடம் சொல். ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நான் வாழ்வது நிச்சயம்போல, அழிவு ஏற்பட்ட நகரங்களில் விடப்பட்டவர்கள் வாளினால் சாவார்கள். நாட்டில் வெளியிடங்களில் இருப்பவர்களைக் காட்டு மிருகங்களுக்கு விழுங்கும்படி கொடுப்பேன். பலத்த கோட்டைகளிலும் குகைகளிலும் மறைந்திருப்போர் கொள்ளைநோயினால் சாவார்கள் என்பதும் நிச்சயம். 28நான் நாட்டைப் பாழாக்குவேன். அப்பொழுது அதன் பெருமையான பலம் ஒரு முடிவுக்கு வரும். அப்பொழுது அதன் வழியால் ஒருவனும் கடக்கமுடியாதபடி இஸ்ரயேலின் மலைகள் பாழாகும். 29அவர்கள் செய்த வெறுக்கத்தக்க காரியங்களினிமித்தம் நான் நாட்டைப் பாழடையச்செய்யும்போது, நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’
30“மனுபுத்திரனே, உன்னைக் குறித்தோ உன் நாட்டு மக்கள், சுவரோரங்களிலும், வீட்டு வாசல்களிலும் ஒன்றுகூடி ‘யெகோவாவிடமிருந்து வந்த வார்த்தையாம்; வந்து கேளுங்கள்’ என்பதாக ஒருவருக்கொருவர் கேலியாகச் சொல்லிக்கொள்கிறார்கள். 31என் மக்கள் வழக்கமாய்ச் செய்வதுபோலவே, உன் வார்த்தைகளைக் கேட்பதற்காக உன்னிடம் வந்து உனக்குமுன் இருக்கின்றார்கள். ஆயினும், அவர்கள் அவைகளின்படி நடப்பதில்லை. அவர்கள் தங்கள் வாயினால் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களுடைய இருதயங்களோ நீதியற்ற ஆதாயத்தில் பேராசைகொள்கின்றன. 32உண்மையாய் நீயோ அவர்களுக்கு, இனிய குரலுடன் காதல் பாடல்ளைப் பாடி, இசைக் கருவிகளையும் நன்றாய் வாசித்து, அவர்களை மகிழ்விக்கும் ஒருவன்போல் மட்டுமே காணப்படுகிறாய். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவைகளின்படி நடப்பதில்லை.
33“ஆனாலும் இவைகளெல்லாம் உண்மையாகும்போது, அவை நிச்சயமாகவே வரும். அப்பொழுது அவர்கள், இறைவாக்கினன் ஒருவன் தங்கள் மத்தியில் இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in