YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 47

47
ஆலயத்திலிருந்து ஆறு
1மீண்டும் அந்த மனிதன் என்னை ஆலய புகுமுக வாசலுக்குக் கொண்டுவந்தான். ஆலய வாசற்படியின் கீழிருந்து கிழக்குநோக்கி தண்ணீர் ஓடிவருவதை நான் கண்டேன். ஆலயம் கிழக்கு நோக்கியிருந்தது. தண்ணீர் ஆலயத்தின் தென்புறத்தின் கீழாக பலிபீடத்தின் தெற்கிலிருந்து வந்தது. 2பின்பு அவன் என்னை வடக்கு வாசல் வழியே கிழக்கு நோக்கியிருந்த வெளிவாசலின் வெளிப்புறத்தைச் சுற்றி அழைத்துக்கொண்டு போனான். தெற்குப்புறமிருந்து தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது.
3அம்மனிதன் தனது அளவுநூலைப் பிடித்தபடி, கிழக்குப் புறமாய்ப்போனான். அவன் ஆயிரம் முழ தூரத்தை அளந்து, பின்னர் கணுக்கால் அளவு ஆழமுள்ள தண்ணீர் வழியாக என்னை அழைத்துச் சென்றான். 4மேலும் அவன் ஆயிரம் முழ தூரம் அளந்து முழங்கால் அளவு ஆழமுள்ள தண்ணீர் வழியே என்னை அழைத்துச் சென்றான். பின்னும் அவன் இன்னும் ஆயிரம் முழ தூரம் அளந்து இடுப்பளவு ஆழமுள்ள தண்ணீர் வழியாக என்னை அழைத்துச் சென்றான். 5இன்னும் ஆயிரம் முழ தூரத்தை அவன் அளந்தான். ஆனால், இப்பொழுதோ அது என்னால் கடக்கமுடியாத ஒரு ஆறாக இருந்தது. ஏனெனில் தண்ணீர் மட்டம் உயர்ந்து நீந்தக்கூடிய ஆழமாய் இருந்தது. அது ஒருவனாலும் கடக்கமுடியாத ஆறாக இருந்தது. 6அவன் என்னிடம், “மனுபுத்திரனே, இதை நீ காண்கிறாயா?” என்று கேட்டான்.
பின்பு அவன் என்னை ஆற்றின் கரைக்கு நடத்திவந்தான். 7நான் அங்கு வந்தபோது, ஆற்றின் இரு கரைகளிலும் ஏராளமான மரங்களைக்கண்டேன். 8அவன் என்னிடம், “இந்தத் தண்ணீர் கிழக்குப் பிரதேசத்தில் பாய்ந்து, யோர்தான் பள்ளத்தாக்கினுள் இறங்கி, சவக்கடலில் விழுகிறது. இது சவக்கடலில் விழும்போது, அங்குள்ள உப்புத் தண்ணீர் நன்னீராகிறது. 9இந்த ஆறு ஓடும் இடமெல்லாம் உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக வாழும். இந்தத் தண்ணீர் அங்கே ஓடி, உவர்ப்புத் தண்ணீரை நன்னீராக்குவதால், அங்கு பெருந்தொகையான மீன்கள் இருக்கும். எனவே இந்த ஆறு ஓடுமிடங்களிலெல்லாம் இருக்கும் அனைத்தும் உயிர்வாழும். 10கரையின் நெடுகிலும் மீனவர் நிற்பார்கள். என்கேதி தொடக்கம், என் எக்லாயீம்வரை வலை உலர்த்தும் இடங்கள் இருக்கும். மத்திய தரைக்கடலின் மீன்களைப்போல பலவித மீன்கள் அங்கிருக்கும். 11ஆனாலும் சேற்று நிலங்களிலும், சதுப்பு நிலங்களிலும் உள்ள உவர்ப்புத் தண்ணீர் நன்னீராக மாட்டாது. அவை உப்புக்காகவே விட்டுவிடப்படும். 12ஆற்றின் இரு கரைகளிலும் எல்லாவித பழமரங்களும் வளரும். அவற்றில் இலைகள் உதிர்வதுமில்லை, பழங்கள் இல்லாமல் போவதுமில்லை. பரிசுத்த ஆலயத்திலிருந்து அவற்றினுள் தண்ணீர் பாய்வதால் அவை மாதந்தோறும் பழம் கொடுத்துக்கொண்டே இருக்கும். அவற்றின் பழங்கள் உணவுக்காகவும் இலைகள் சுகம் கொடுப்பதற்காகவும் இருக்கும்.”
நாட்டின் எல்லைகள்
13ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் உரிமைச்சொத்தாக நாட்டைப் பிரிக்கவேண்டும். யோசேப்புக்கு இரண்டு பங்குகள் கொடுக்கவேண்டும். பிரித்துக் கொடுக்கவேண்டிய எல்லைகள் இவையே: 14நீ அவர்கள் மத்தியில் அதைச் சமமாகப் பிரித்துக்கொடுக்கவேண்டும். இந்த நாடு உங்கள் சொத்துரிமையாகும். ஏனெனில் நான் அதைக் கொடுப்பேன், என்று உங்கள் முற்பிதாக்களுக்கு என் உயர்த்திய கையால் ஆணையிட்டேன்.
15“நாட்டின் எல்லைகள் இவ்விதமாகவே அமையவேண்டும்,
“வட எல்லை மத்திய தரைக்கடலிலிருந்து, தொடங்கி அது எத்லோன் வீதியோடே போய், ஆமாத் நுழைவு வாசலைக் கடந்து, சேதாத் நகரத்திற்குப் போகும். 16தமஸ்குவுக்கும் ஆமாத்துக்கும் இடையிலுள்ள பெரோத்தா, சிப்ராயிம் ஆகிய நகரமெங்கும் சென்று, அவ்ரான் எல்லையிலுள்ள ஆசேர் அத்திக்கோன் நகரம் வரைசெல்லும். 17இந்த எல்லையானது மத்திய தரைக்கடலிலிருந்து ஆசார் ஏனான்வரை செல்லும். பின்பு தமஸ்குவுக்கு வடக்கேபோய் ஆமாத்தின் தெற்கை அடையும். இதுவே வட எல்லையாயிருக்கும்.
18கிழக்குப்பக்கத்தின் எல்லை, தமஸ்குவுக்கும் அவ்ரானுக்கும் இடையிலுள்ள ஒரு முனையிலிருந்து செல்லும். இது யோர்தான் வழியாக கீலேயாத்துக்கும் இஸ்ரயேல் நாட்டுக்கும் இடையே தொடர்ந்து செல்லும். சவக்கடலிலுள்ள தாமார்வரை யோர்தான் நதியே எல்லையாகும். இதுவே கிழக்கு எல்லையாயிருக்கும்.
19தெற்குப் பக்கத்திலுள்ள எல்லை, தாமாரிலிருந்து காதேஸ் மேரிபாவின் நீர்நிலைகளை அடைந்து, எகிப்தின் நீரோடை வழியாக மத்திய தரைக்கடல்வரை செல்லும். இதுவே தெற்கு எல்லையாயிருக்கும்.
20மேற்குப் பக்கத்தில் மத்திய தரைக்கடலே அதன் எல்லையாகும். அது லேபோ ஆமாத் எதிரேயுள்ள இடம்வரை செல்லும். இதுவே மேற்கு எல்லையாயிருக்கும்.
21“இஸ்ரயேலின் கோத்திரங்களின்படியே நீங்கள் நாட்டை உங்களுக்குள் பங்கிடவேண்டும். 22உங்களுக்கும் உங்கள் மத்தியில் வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றிருக்கும் அந்நியருக்கும் சொத்துரிமையாக நாடு பங்கிட்டுக் கொடுக்கப்படுதல் வேண்டும். அவர்கள் இஸ்ரயேல் நாட்டில் பிறந்தவர்களைப்போல கணிக்கப்படுதல் வேண்டும். உங்களோடு அவர்களும் இஸ்ரயேல் கோத்திரங்களின் மத்தியில் சொத்துரிமையைப் பெறவேண்டும். 23அந்நியன் எந்தக் கோத்திரத்துடன் வாழ்கிறானோ, அங்கேயே அவனுடைய சொத்துரிமையை நீங்கள் அவனுக்குக் கொடுக்கவேண்டும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்றான்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in