YouVersion Logo
Search Icon

ஏசாயா 62

62
சீயோனின் புதுப்பெயர்
1சீயோனின் நிமித்தம் நான் மவுனமாயிராமலும்,
எருசலேமின் நிமித்தம் நான் செயலற்று இராமலும்,
அதன் நீதி விடியற்கால வெளிச்சத்தைப் போலவும்,
அதன் இரட்சிப்பு பற்றியெரியும் ஒரு தீவட்டியைப் போலவும்
வெளிப்படும்வரை அமராமலும் இருப்பேன்.
2பிறநாடுகள் உன் நீதியைக் காண்பார்கள்,
அரசர்கள் யாவரும் உன் மகிமையைக் காண்பார்கள்;
யெகோவாவின் வாய் வழங்கும்
ஒரு புதிய பெயரால் நீ அழைக்கப்படுவாய்.
3நீ யெகோவாவின் கரத்தில் சிறப்பான மகுடமாகவும்,
உன் இறைவனின் கரத்தில் அரச மகுடமாகவும் இருப்பாய்.
4அவர்கள் இனி ஒருபோதும் உன்னைக் கைவிடப்பட்ட நாடு என அழைப்பதில்லை.
உன்னைப் பாழடைந்த நாடு என்று சொல்வதுமில்லை.
நீ எப்சிபா என்று அழைக்கப்படுவாய்,
உனது நாடு பியூலா என்று பெயர்பெறும்;
ஏனெனில் யெகோவா உன்னில் பிரியப்படுவார்,
உன் நாடு வாழ்க்கைப்படும்.
5ஒரு வாலிபன் ஒரு கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்வதுபோல,
உன்னைக் கட்டியெழுப்பியவர் உன்னைத் திருமணம் செய்வார்.
மணமகன் மணமகளில் மகிழ்ச்சிகொள்ளுவதுபோல,
உன் இறைவன் உன்னில் மகிழ்ச்சிகொள்வார்.
6எருசலேமே, நான் உனது மதில்களின்மேல் காவலாளரை நியமித்திருக்கிறேன்;
பகலிலோ இரவிலோ ஒருபோதும் அவர்கள் மவுனமாய் இருக்கமாட்டார்கள்.
யெகோவாவை நோக்கி மன்றாடுவோரே,
நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டாம்.
7அவர் எருசலேமை நிலைக்கப்பண்ணி, அவளைப் பூமியின் புகழ்ச்சியாக்கும்வரை,
அவருக்கு ஓய்வுகொடாதீர்கள்.
8யெகோவா தனது வலது கரத்தினாலும்
வலிய புயத்தினாலும் ஆணையிட்டுக் கூறியது:
“நான் உங்கள் தானியத்தை,
இனி ஒருபோதும் உங்கள் பகைவர்களுக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்;
உங்கள் உழைப்பினால் உண்டான புதிய திராட்சரசத்தை
பிறர் இனி ஒருபோதும் குடிக்கமாட்டார்கள்.
9அதை அறுவடை செய்பவர்களே அதைச் சாப்பிட்டு,
யெகோவாவைத் துதிப்பார்கள்.
திராட்சைப் பழங்களை சேகரிப்பவர்களே எனது பரிசுத்த இடத்தின் முற்றத்தில்
திராட்சை இரசத்தைக் குடிப்பார்கள்.”
10கடந்துசெல்லுங்கள், வாசல்களைக் கடந்துசெல்லுங்கள்!
மக்களுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்.
கட்டுங்கள், பெரும் பாதையைக் கட்டுங்கள்!
கற்களை அகற்றுங்கள்.
நாடுகளுக்காக கொடியை ஏற்றுங்கள்.
11யெகோவா பூமியின் கடைசிவரை
பிரசித்தப்படுத்தியிருப்பது:
“பாருங்கள், ‘உங்கள் இரட்சகர் வருகிறார்!
இதோ, அவர் கொடுக்கும் வெகுமதி அவருடன் இருக்கிறது;
அவர் கொடுக்கும் பிரதிபலனும் அவரோடு வருகிறது’
என்று சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்.”
12அவர்கள் பரிசுத்த மக்கள் என்றும்,
யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள்;
நீ தேடிக் கண்டுபிடிக்கப்பட்டதென்றும்
இனி ஒருபோதும் கைவிடப்படாத பட்டணம் என்றும் அழைக்கப்படுவாய்.

Currently Selected:

ஏசாயா 62: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in