YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகள் 5

5
தெபோராளின் பாடல்
1அந்த நாளில் தெபோராளும், அபினோமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்:
2“யெகோவா இஸ்ரயேலுக்காக நீதியை நிலைநாட்டியதற்காகவும்,
மக்கள் தங்களை மனமுவர்ந்து ஒப்படைத்ததற்காகவும்
யெகோவாவைத் துதியுங்கள்!
3“அரசர்களே கேளுங்கள்! ஆளுநர்களே செவிகொடுங்கள்!
யெகோவாவை பாடுவேன், நான் பாடுவேன்.
இஸ்ரயேலின், இறைவனாகிய யெகோவாவுக்கு, இசை மீட்டுவேன்.
4“யெகோவாவே! நீர் சேயீரை விட்டு போனபோதும்,
ஏதோம் நாட்டைவிட்டு அணிவகுத்துச் சென்றபோதும் பூமி அதிர்ந்தது.
வானங்கள் பொழிந்தன.
மேகங்கள் தண்ணீரை கீழே பொழிந்தன.
5சீனாயின் யெகோவாவான யெகோவாவுக்குமுன், மலைகளும் அதிர்ந்தன.
இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு முன்பாக அவை அதிர்ந்தன.
6“ஆனாத்தின் மகன் சம்காரின் நாட்களிலும்,
யாகேலின் நாட்களிலும் வீதிகள் கைவிடப்பட்டிருந்தன.
பயணிகள் சுற்றுப்பாதையில் சென்றார்கள்.
7இஸ்ரயேலின் கிராம வாழ்க்கை நின்றுபோயிற்று.
தெபோராளாகிய நான் இஸ்ரயேலில் தாயாக எழும்பும்வரை
அது நின்றுபோயிற்று.
8எப்போது அவர்கள் புது தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்களோ,
அப்போதே யுத்தமும் பட்டண வாசலில் வந்தது.
இஸ்ரயேலில் உள்ள நாற்பதாயிரம் பேரிடம்
கேடயமோ ஈட்டியோ காணப்படவில்லை.
9எனது இருதயமோ இஸ்ரயேலின் தலைவர்களோடே இருக்கிறது.
மக்களுக்குள்ளே விரும்பிவந்த தொண்டர்களுடனும் இருக்கிறது.
யெகோவாவைத் துதியுங்கள்!
10“வெள்ளைக் கழுதைமேல் சவாரி செய்கிறவர்களே,
சேணத்தின் கம்பளத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களே,
வீதி வழியாய் நடப்பவர்களே,
யோசித்துப் பாருங்கள். 11தண்ணீர் குடிக்கும் இடங்களில் பாடகரின்#5:11 பாடகரின் அல்லது வில்வீரரின். குரலையும்.
அவர்கள் யெகோவாவின் நேர்மையான செயல்களைச் சொல்கிறார்கள்.
இஸ்ரயேலின் வீரர்களின் நேர்மையான செயல்களைச் சொல்கிறார்கள்.
“அப்பொழுது யெகோவாவிடம் மக்கள்
பட்டண வாசலுக்கு சென்றார்கள்.
12விழித்தெழு, விழித்தெழு தெபோராளே!
விழித்தெழுந்து பாட்டுப்பாடு.
பாராக்கே எழுந்திரு!
அபினோமின் மகனே உன்னை சிறைப்பிடித்தவர்களைச் சிறைபிடி.
13“தப்பியிருந்த மனிதர் உயர்குடிமக்களிடம் வந்தார்கள்.
யெகோவாவின் மக்கள் வல்லவர்களுடன் என்னிடம் வந்தார்கள்.
14அமலேக்கியர் வாழும் இடமான எப்பிராயீமிலிருந்து சிலர் வந்தார்கள்.
பென்யமீனியர் உன்னைப் பின்தொடர்ந்தவர்களுடன் சேர்ந்தார்கள்.
மாகீரில் இருந்து தலைவர்களும் வந்தார்கள்.
செபுலோனிலிருந்து அதிகாரிகளும் வந்தார்கள்.
15இசக்காரின் தலைவர்கள் தெபோராளோடு இருந்தார்கள்.
ஆம்! இசக்கார் கோத்திரத்தார் பாராக்கின்
பின்னே பள்ளத்தாக்கில் விரைந்து சென்றார்கள்.
ரூபனின் பிரிவைச் சார்ந்தவர்கள்
தங்கள் இருதயத்தை ஆராய்ந்தார்கள்.
16ஏன் நீ தொழுவங்களுக்குள் இருக்கிறாய்?
மந்தைகளைக் கூப்பிடும் சத்தத்தைக் கேட்பதற்காகவா?
ரூபனின் பிரிவைச் சார்ந்தவர்கள்
தங்கள் இருதயத்தை அதிகமாய் ஆராய்ந்தார்கள்.
17கீலேயாத் யோர்தானின் மறுகரையில் தங்கியிருந்தது.
தாண், ஏன் கப்பல்களின் அருகே தயங்கி நின்றான்?
ஆசேர் கடற்கரையில் தரித்து,
சிறுவளைகுடா பகுதிகளில் தங்கியிருந்தான்.
18செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பொருட்படுத்தவில்லை
அப்படியே நப்தலி மனிதரும் வயலின் மேடுகளில் நின்றனர்.
19“அரசர்கள் வந்தார்கள். அவர்கள் சண்டையிட்டார்கள்.
கானானின் அரசர்கள் மெகிதோவின் தண்ணீர் அருகே தானாக்கில் யுத்தம் செய்தார்கள்.
ஆனால் அவர்கள் வெள்ளியையோ,
கொள்ளையையோ சுமந்து செல்லவில்லை.
20வானங்களில் இருந்து நட்சத்திரங்கள் சண்டையிட்டன.
அவை தங்கள் வழிகளிலிருந்து சிசெராவுக்கு எதிராகச் சண்டையிட்டன.
21கீசோன் நதி அவர்களை அள்ளிக்கொண்டு போயிற்று.
பூர்வகாலத்து கீசோன் நதி, அவர்களை அள்ளிக்கொண்டு போயிற்று.
ஆகவே என் ஆத்துமாவே நீ வலிமைபெற்று முன்னேறிப் போ;
22குதிரைகளின் குளம்புகள் மூழ்கின.
அவனுடைய வலிமையான குதிரைகள் பாய்ந்து செல்கின்றன.
23‘மேரோசைச் சபியுங்கள், அதன் மக்களைக் கடுமையாகச் சபியுங்கள்’
என்று யெகோவாவின் தூதனானவர் சொல்கிறார்.
‘ஏனெனில் அவர்கள் யெகோவாவுக்கு உதவிசெய்ய வரவில்லை;
வலியவர்களுக்கு எதிராக யெகோவாவுக்கு உதவிசெய்ய வரவில்லை.’
24“பெண்களுக்குள்ளே யாகேல் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்,
கூடாரங்களில் வாழும் பெண்களுக்குள்
கேனியனான ஏபேரின் மனைவி அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவள்.
25அவன் அவளிடம் தண்ணீர் கேட்டான், அவளோ அவனுக்கு பால் கொடுத்தாள்;
அவள் உயர்குடியினருக்குரிய கிண்ணத்திலே தயிர் கொண்டுவந்தாள்.
26அவளது கை கூடாரத்தின் முளையையும்,
வலதுகை தொழிலாளியின் சுத்தியலையும் எட்டி எடுத்தது.
அவள் சிசெராவை அடித்தாள், அவனுடைய தலையை நொறுக்கினாள்;
அவள் அவனுடைய நெற்றியைக் குத்திச் சிதறடித்தாள்.
27அவள் காலடியில் அவன் சரிந்து விழுந்தான்;
அவன் விழுந்து அங்கேயே கிடந்தான்.
அவளது காலடியில் சரிந்தான், விழுந்தான்;
அவன் சரிந்த இடத்திலே விழுந்து செத்தான்.
28“ஜன்னல் வழியே சிசெராவின் தாய் எட்டிப்பார்த்தாள்;
‘ஏன் அவனுடைய இரதம் அங்கே இன்னும் வரவில்லை?
அவனுடைய இரதங்களின் ஓட்டம் ஏன் இன்னும் தாமதிக்கிறது?’
என பலகணியின் பின்நின்று புலம்பினாள்.
29அவளுடைய தோழிகளில் ஞானமுள்ளவள் பதிலளித்தாள்;
அவளும் தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
30‘அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடித்து பங்கிடுகிறார்களோ,
ஆளுக்கு ஒன்றோ, இரண்டோ பெண்கள்,
சிசெராவுக்கு கொள்ளையிட்ட பலவர்ண உடைகள்,
கொள்ளையிட்ட சித்திர வேலைப்பாடுள்ள பலவர்ண உடைகள்,
கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு
மிக நுட்பமான சித்திர வேலைப்பாடுள்ள உடைகளையும் கொடுக்க வேண்டாமோ?’
என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
31“எனவே யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்கள் இப்படியே அழியட்டும்!
உம்மில் அன்புகூருகிறவர்களோ தன் கெம்பீரத்தில் உதிக்கும்
சூரியனைப்போல் இருக்கட்டும்.”
இதன்பின்பு நாற்பது வருடங்கள் நாடு சமாதானமாய் இருந்தது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in