YouVersion Logo
Search Icon

எரேமியா 15

15
1அதன்பின் யெகோவா என்னிடம், “மோசேயும் சாமுயேலும் எனக்குமுன் நின்று மன்றாடினாலுங்கூட, இந்த மக்களுக்கு இரங்கமாட்டேன். எனக்கு முன்னின்று அவர்களை அனுப்பிவிடு; அவர்கள் போகட்டும். 2‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று அவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுவே:
“ ‘மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள் மரணத்துக்கும்,
வாளுக்குக் குறிக்கப்பட்டவர்கள் வாளுக்கும்,
பஞ்சத்திற்குக் குறிக்கப்பட்டவர்கள் பஞ்சத்திற்கும்,
சிறையிருப்புக்குக் குறிக்கப்பட்டவர்கள் சிறையிருப்புக்கும் போவார்கள்.’
3“நான் அவர்களுக்கு எதிராக நான்குவிதமான அழிக்கிறவர்களை அனுப்புவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களைக் கொல்வதற்கு வாளையும், இழுத்துக்கொண்டு போவதற்கு நாய்களையும், அவர்களைத் தின்று அழிப்பதற்கு ஆகாயத்துப் பறவைகளையும், பூமியிலுள்ள மிருகங்களையும் அனுப்புவேன். 4யூதாவின் அரசன் எசேக்கியாவின் மகன் மனாசே, எருசலேமில் செய்தவற்றிற்காக நான் அவர்களை உலகின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாக்குவேன்.
5“எருசலேமே! யார் உன்மேல் அனுதாபப்படுவார்கள்?
யார் உனக்காக துக்கிப்பார்கள்?
நீ எப்படியிருக்கிறாய் என்று கேட்க யார் வருவார்கள்?
6நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நீ தொடர்ந்து பின்வாங்கிக்கொண்டே இருக்கிறாய்.
ஆகையால் நான் உனக்கெதிராய் என் கையை நீட்டி, உன்னை அழிப்பேன்.
என்னால் இனிமேலும் இரக்கங்காட்ட முடியாது.
7நாட்டில் பட்டணத்து வாசல்களில் அவர்களை தூற்றுக் கூடையினால் தூற்றுவேன்.
அவர்கள் தங்கள் வழிகளைவிட்டு
மனந்திரும்பாதபடியினால் என் மக்களை தவிக்கச்செய்து,
அவர்கள்மேல் அழிவைக் கொண்டுவருவேன்.
8அவர்களின் விதவைகளை
கடற்கரை மணலைப் பார்க்கிலும் எண்ணற்றவர்களாக்குவேன்.
நண்பகலில் அவர்களுடைய வாலிபரின் தாய்மாருக்கு
எதிராக அழிக்கிறவனைக் கொண்டுவருவேன்.
திடீரென அவர்கள்மீது கலகத்தையும்,
பயங்கரத்தையும் கொண்டுவருவேன்.
9ஏழு பிள்ளைகளின் தாய்
மூச்சடைத்து செத்துப்போவாள்.
இன்னும் பகல் வேளையாயிருக்கும்போதே அவளுடைய சூரியன் அஸ்தமிக்கும்.
அவள் அவமானத்துக்குள்ளாகி தாழ்த்தப்பட்டுப் போவாள்.
அவர்களில் தப்பியிருப்பவர்களை
அவர்களுடைய பகைவருக்கு முன்பாக வாளுக்கு இரையாக்குவேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
10அப்பொழுது நான், “என் தாயே! நீ என்னைப் பெற்றெடுத்தாயே;
முழு நாடுமே எதிர்த்து வாதாடும் மனிதனாகிய என்னைப் பெற்றாயே!
நான் யாரிடத்திலும் கடன் வாங்கவும் இல்லை, யாருக்கும் கடன் கொடுக்கவும் இல்லை.
அப்படியிருந்தும் ஒவ்வொருவரும் என்னைச் சபிக்கிறார்கள்.”
11அதற்கு யெகோவா சொன்னதாவது,
“நான் உன்னை நிச்சயமாக ஒரு நல்ல நோக்கத்திற்காக விடுவிப்பேன்;
பேராபத்திலும், பெருந்துன்ப காலத்திலும் நிச்சயமாக உன் பகைவர்கள்
உன்னிடத்தில் கெஞ்சி மன்றாடும்படி செய்வேன்.
12“ஒரு மனிதனால் வடக்கிலிருந்து வரும் இரும்பையாவது,
வெண்கலத்தையாவது முறிக்க முடியுமோ?
13“நாடு முழுவதிலும்
அவர்கள் செய்துள்ள பாவங்களுக்காக,
அவர்களுடைய செல்வத்தையும், பொக்கிஷங்களையும்
விலையின்றி கொள்ளையாகக் கொடுப்பேன்.
14அவர்கள் அறியாத நாட்டில் அவர்களுடைய பகைவர்களுக்கு
அவர்களை அடிமையாக்குவேன்.
என் கோபத்தினால் உண்டாகிற நெருப்பு
அவர்களுக்கெதிராய் எரியும்” என்றார்.
15யெகோவாவே! நீர் என்னை அறிந்திருக்கிறீர்.
என்னை நினைவுகூர்ந்து என்னை ஆதரியும்.
என்னைத் துன்பப்படுத்தியவர்களை பழிவாங்கும்.
நீர் நீடிய பொறுமையுடையவர். நீர் என்னை எடுத்துப்போடாதேயும்.
உமக்காக நான் எவ்வளவு நிந்தையைச் சகித்தேன் என்பதையும் நினைத்துப் பாரும்.
16உமது வார்த்தைகள் எனக்கு வந்தபோது, நான் அவைகளை உட்கொண்டேன்.
சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே! உமது பெயரை நான் தரித்திருக்கிறபடியால்,
அவ்வார்த்தைகள் என் சந்தோஷமும்,
என் இருதயத்தின் களிப்புமாயிருந்தன.
17நான் ஒருபோதும் பரியாசக்காரருடைய
கூட்டத்தில் சேர்ந்து மகிழ்ந்ததில்லை.
உமது கரம் என்மேல் இருந்தபடியால், நான் தனிமையாய் இருந்தேன்.
நீர் என்னை கோபத்தினால் நிரப்பினீர்.
18ஏன் என்னுடைய வேதனை முடிவடையாமல் இருக்கிறது.
ஏன் எனது காயம் கடுமையாயும், ஆறாமலும் இருக்கிறது?
நீர் எனக்கு ஒரு ஏமாற்றும் நீரோடையைப் போலவும்,
ஊற்றெடுக்காத ஓடையைப் போலவும் இருப்பீரோ? என்றேன்.
19அதற்கு யெகோவா:
“நீ மனந்திரும்பினால், நீ எனக்குப் பணிசெய்யும்படி
நான் உன்னை முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவருவேன்.
நீ பயனற்ற வார்த்தைகளை விட்டு,
பயனுள்ள வார்த்தைகளைப் பேசுவாயானால்,
மீண்டும் என்னுடைய பேச்சாளனாய் இருப்பாய்,
இந்த மக்கள் உன் பக்கமாகத் திரும்பட்டும்;
ஆனால் நீயோ அவர்கள் பக்கமாய்த் திரும்பாதே.
20நான் உன்னை இந்த மக்களுக்கு ஒரு மதில் ஆக்குவேன்;
அரண்செய்யப்பட்ட ஒரு வெண்கல மதிலாக்குவேன்.
அவர்கள் உனக்கெதிராகப் போரிடுவார்கள்;
ஆனாலும் அவர்கள் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்.
ஏனெனில் நான் உன்னைத் தப்புவித்து காப்பாற்றும்படி,
நான் உன்னுடனே இருக்கிறேன்,”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
21“கொடியவர்களின் கையிலிருந்து உன்னைப் பாதுகாத்து,
கொடூரமானவர்களின் பிடியிலிருந்து உன்னை மீட்டெடுப்பேன்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in