YouVersion Logo
Search Icon

எரேமியா 21

21
சிதேக்கியாவின் வேண்டுதல் மறுக்கப்படுதல்
1மல்கியாவின் மகன் பஸ்கூரையும், மாசெயாவின் மகன் செப்பனியா என்ற ஆசாரியனையும் சிதேக்கியா அரசன் எரேமியாவிடம் அனுப்பினான். அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. அவர்கள் அவனிடம், 2“பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் எங்களைத் தாக்குவதற்கு வந்திருக்கிறதினால், இப்பொழுது எங்களுக்காக யெகோவாவிடம் விசாரி. ஒருவேளை அவன் எங்களைவிட்டுப் பின்வாங்கும்படியாக யெகோவா கடந்த காலங்களில் செய்ததுபோல எங்களுக்காக அற்புதங்களைச் செய்வார்” என்றார்கள்.
3ஆனால் எரேமியா அவர்களுக்கு மறுமொழியாக, “நீங்கள் சிதேக்கியாவிடம் சொல்லவேண்டியதாவது, 4‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா, சொல்வது இதுவே: உங்கள் மதிலுக்கு வெளியே உங்களை முற்றுகையிடுகிற பாபிலோன் அரசனோடும், பாபிலோனியரோடும் சண்டையிட நீங்கள் பயன்படுத்தும் உங்கள் கைகளில் இருக்கிற போர் ஆயுதங்களை, உங்களுக்கு எதிராகவே நான் திருப்பப் போகிறேன். நான் அவர்களை பட்டணத்திற்குள் ஒன்றுசேர்ப்பேன். 5என்னுடைய நீட்டிய கரத்தினாலும், வலிமையான புயத்தினாலும் நானே உங்களுக்கெதிராக யுத்தம் செய்வேன். கோபத்துடனும், கடுங்கோபத்துடனும், பெரும் ஆத்திரத்துடனும் யுத்தம் செய்வேன். 6அத்துடன் இப்பட்டணத்தில் இருக்கும் மனிதரையும், மிருகங்களையும் அடித்து வீழ்த்துவேன். அவர்கள் பயங்கரமான கொள்ளைநோயினால் சாவார்கள். 7யெகோவா அறிவிக்கிறதாவது, அதற்குப் பின்பு யூதாவின் அரசன் சிதேக்கியாவையும், அவனுடைய அதிகாரிகளையும், அவர்களுடன் கொள்ளைநோய்க்கும், வாளுக்கும், பஞ்சத்திற்கும் தப்பியிருக்கும் இந்தப் பட்டணத்து மக்களையும் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரிடத்திலும், அவர்களைக் கொலைசெய்ய தேடுகிற பகைவர்களிடத்திலும் ஒப்புக்கொடுப்பேன். பாபிலோன் அரசன் அவர்களை வாளுக்கு இரையாக்குவான். அவன் அவர்களுக்கு இரக்கமோ, தயவோ, அனுதாபமோ காட்டமாட்டான்.’
8“மேலும், நீ மக்களிடம், ‘யெகோவா கூறுவது இதுவே: பாருங்கள், நான் உங்களுக்கு முன்பாக வாழ்வின் வழியையும், சாவின் வழியையும் வைக்கிறேன். 9இந்தப் பட்டணத்தில் தங்கியிருக்கிறவன் எவனோ அவன் வாளினாலோ, பஞ்சத்தினாலோ அல்லது கொள்ளைநோயினாலோ சாவான். வெளியே போய் உங்களை முற்றுகையிடுகிற பாபிலோனியரிடம் சரணடைகிறவன் எவனோ அவன் வாழ்வான். அவன் உயிர் தப்புவான். 10நான் இப்பட்டணத்திற்கு நன்மையை அல்ல; தீமையையே நியமித்திருக்கிறேன். இந்தப் பட்டணம் பாபிலோன் அரசனின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும். அவன் அதை நெருப்பால் அழித்துவிடுவான் என யெகோவா அறிவிக்கிறார்.’
11“மேலும் யூதாவின் அரச குடும்பத்திடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்; 12தாவீதின் குடும்பத்தாரே! யெகோவா கூறுவது இதுவே:
“ ‘காலைதோறும் நீதியை நடப்பியுங்கள்.
கொள்ளையிடப்பட்டவனை
ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து தப்புவியுங்கள்.
இல்லாவிட்டால், நீங்கள் செய்த தீமையின் நிமித்தம்
எனது கடுங்கோபம் வெளிப்பட்டு,
அணைப்பாரில்லாத நெருப்பைப்போல் பற்றி எரியும்.
13எருசலேமே! இந்தப் பள்ளத்தாக்கின் சமனான இடத்தில்
கன்மலையாய் வாழ்கிறவர்களே!
“எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யார்?
எங்கள் புகலிடத்திற்குள் வர யாரால் முடியும்?” என்று சொல்கிறவர்களே!
நான் உங்களுக்கு விரோதமாய் இருக்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
14நான் உங்களை உங்கள் செயல்களுக்குத்தக்கதாய் தண்டிப்பேன்.
நான் உங்கள் காடுகளில் நெருப்பு மூட்டுவேன்.
அது உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும்
சுட்டெரிக்கும் என்று யெகோவா அறிவிக்கிறார்.’ ”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in