YouVersion Logo
Search Icon

எரேமியா 38

38
எரேமியா ஒரு குழிக்குள் எறியப்படுதல்
1மக்கள் எல்லோருக்கும் எரேமியா சொல்வதை மாத்தானின் மகன் செபதியா, பஸ்கூரின் மகன் கெதலியா, செலேமியாவின் மகன் யூகால், மல்கியாவின் மகன் பஸ்கூர் ஆகியோர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் சொன்னது என்னவென்றால், 2“யெகோவா கூறுவது இதுவே: ‘இந்தப் பட்டணத்தில் தங்கியிருக்கிற எவனும் வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பான். ஆனால் பாபிலோனியரிடம் போகிற எவனும் வாழ்வான். அவன் உயிர் தப்பி வாழ்வான்.’ 3யெகோவா கூறுவது இதுவே: ‘இப்பட்டணம் பாபிலோன் அரசனின் இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்படைக்கப்படும். அவன் இதைக் கைப்பற்றுவான்’ என்றான்.”
4அப்பொழுது அதிகாரிகள் அரசனிடம், “இந்த மனிதன் சாகவேண்டும். இவன் பட்டணத்தில் மீதியாயிருக்கும் போர்வீரரையும், எல்லா மக்களையும் தான் சொல்கிற வார்த்தைகளால் அதைரியப்படுத்துகிறான். இந்த மனிதன் மக்களின் நன்மையை அல்ல, அவர்களின் அழிவையே நாடுகிறான்” என்றார்கள்.
5சிதேக்கியா அரசன் அதற்குப் பதிலாக, “இதோ அவன் உங்களுடைய கையில் இருக்கிறான். உங்களுக்கு மாறாக அரசனால் எதுவும் செய்யமுடியாது” என்றான்.
6அப்பொழுது அவர்கள் எரேமியாவைக் காவற்கூட முற்றத்திலிருந்த அரசனின் மகன் மல்கியாவின் குழிக்குள் போட்டார்கள். அவர்கள் எரேமியாவை கயிறுகளினால் கட்டி அதற்குள் இறக்கினார்கள். அதில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எரேமியா சேற்றிற்குள்ளே புதைந்து கொண்டிருந்தான்.
7அரச அரண்மனையில் இருந்த ஒரு எத்தியோப்பிய அதிகாரியான எபெத்மெலேக் எரேமியா குழிக்குள் போடப்பட்டதைக் கேள்விப்பட்டான். அரசன் பென்யமீன் வாசலில் உட்கார்ந்திருந்தபோது, 8எபெத்மெலேக் அரண்மனையிலிருந்து வெளியேறி அரசனிடம் சென்று, 9“அரசனே, தலைவனே இறைவாக்கினன் எரேமியாவை இந்த அதிகாரிகள் தங்கள் எல்லா செயல்களினாலும் கொடுமையாய் நடத்தியிருக்கிறார்கள். அவனை அவர்கள் ஒரு குழிக்குள் எறிந்துவிட்டார்கள். பட்டணத்தில் அப்பம் இல்லாமல் போகையில் பட்டினியால் அவன் அங்கே சாவானே” என்றான்.
10அதற்கு அரசன் எத்தியோப்பியனான எபெத்மெலேக்கிடம், “உன்னோடு முப்பது மனிதரைக் கூட்டிக்கொண்டுபோய் இறைவாக்கினன் எரேமியா இறப்பதற்குமுன் அவனை குழியிலிருந்து வெளியே தூக்கியெடு” என்று கட்டளையிட்டான்.
11அப்படியே எபெத்மெலேக் அந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு அரண்மனை பொக்கிஷ அறையின் கீழிருந்த அந்த இடத்திற்குப் போனான். அங்கிருந்து பழைய சீலைகளையும், பழைய உடைகளையும் எடுத்து அவைகளைக் கயிற்றின் வழியாய் எரேமியா இருந்த குழிக்குள் இறக்கினான். 12எத்தியோப்பியனான எபெத்மெலேக், எரேமியாவிடம், “நீ இந்த பழைய உடைகளையும், பழைய துணிகளையும் உனது அக்குள்களில் கயிறு வெட்டிவிடாதபடி வைத்துக்கொள்” என்று சொன்னான். எரேமியா அவ்வாறே செய்தான். 13அப்பொழுது அவர்கள் எரேமியாவை கயிறுகள் மூலம் குழியிலிருந்து வெளியே தூக்கி எடுத்தார்கள். அதன்பின் எரேமியா காவற்கூடத்தின் முற்றத்தில் தங்கியிருந்தான்.
சிதேக்கியா எரேமியாவிடம் திரும்பவும் கேள்வி கேட்டல்
14பின்பு சிதேக்கியா அரசன், இறைவாக்கினன் எரேமியாவை யெகோவாவினுடைய ஆலயத்தின் மூன்றாம் வாசலுக்குக் கொண்டுவரச் செய்தான். அரசன் அவனிடம், “நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்கப்போகிறேன். எதையும் மறைக்காமல் எனக்குச் சொல்” என்றான்.
15அதற்கு எரேமியா சிதேக்கியாவிடம், “நான் அவ்வாறே பதில் சொன்னால் என்னைக் கொலைசெய்வீர் அல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும் நீர் எனக்குச் செவிகொடுக்கமாட்டீரே” என்றான்.
16ஆனால் சிதேக்கியா அரசனோ, எரேமியாவிடம் இரகசியமாக ஆணையிட்டு, “நமக்கு சுவாசத்தைக் கொடுத்திருக்கும் யெகோவா இருப்பது நிச்சயம் என்றால், நான் உன்னைக் கொல்வதோ, உன் உயிரை வாங்கத் தேடுகிறவர்களிடம் உன்னை ஒப்புக்கொடுப்பதோ இல்லை என்பதும் நிச்சயம்” என்று சத்தியம் செய்தான்.
17அதற்கு எரேமியா சிதேக்கியாவிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘பாபிலோன் அரசனுடைய அதிகாரிகளிடம் நீ சரணடைந்தால், நீ உன் உயிரைக் காத்துக்கொள்வாய். இப்பட்டணமும் எரித்து அழிக்கப்படமாட்டாது. உன் குடும்பமும் உயிர்வாழும். 18ஆனால் நீ பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் சரணடையாவிட்டால், இப்பட்டணம் பாபிலோனியரின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும். அவர்கள் இப்பட்டணத்தைச் சுட்டெரிப்பார்கள். நீயும் அவர்களுடைய கையிலிருந்து தப்பமாட்டாய்’ என்றான்.”
19அதற்கு சிதேக்கியா அரசன் எரேமியாவிடம், “நான் பாபிலோனியரிடம் முன்பே போய்ச் சேர்ந்த யூதருக்குப் பயப்படுகிறேன். ஏனெனில் பாபிலோனியர் என்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்கள் என்னைத் துன்புறுத்தக்கூடும்” என்று சொன்னான்.
20அதற்கு எரேமியாவோ, “அவர்கள் உன்னை ஒப்புக்கொடுக்கமாட்டார்கள். நான் உனக்குச் சொல்வதின்படி செய்து யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திரு. அப்பொழுது உனக்கு எல்லாம் நன்மையாயிருக்கும். நீயும் உயிருடன் தப்புவாய். 21ஆனால் நீ சரணடைவதற்கு மறுத்தால், யெகோவா எனக்கு வெளிப்படுத்தியுள்ளது இதுவே: 22யூதா அரசனின் அரண்மனையில் மீதியாய் விடப்பட்டிருக்கும் பெண்கள், பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் கொண்டுவரப்படுவார்கள். அப்பெண்கள் உன்னிடம்:
“ ‘நீ நம்பியிருந்த உனது நண்பர்கள்,
உன்னை வழிதவறச்செய்து உன்னை மேற்கொண்டார்கள்.
உன்னுடைய பாதங்கள் சேற்றிற்குள்ளே புதைந்தன;
உனது நண்பர்கள் உன்னைக் கைவிட்டுப் போய்விட்டார்கள்’ என்று சொல்வார்கள்.
23“உனது எல்லா மனைவியரும், பிள்ளைகளும், பாபிலோனியரிடத்துக்குக் கொண்டுவரப்படுவார்கள். நீயுங்கூட அவர்களுடைய கையிலிருந்து தப்பாமல், பாபிலோன் அரசனால் கைதுசெய்யப்படுவாய். இப்பட்டணம் தீயினால் எரிக்கப்படும்” என்றான்.
24அப்பொழுது சிதேக்கியா எரேமியாவிடம், “இந்த வார்த்தைகளை ஒருவரும் அறியாமலிருக்கட்டும்; அறிந்தால் நீ சாகக்கூடும். 25அதிகாரிகள் நான் உன்னுடன் பேசியதைக் கேள்விப்பட்டு உன்னிடம் வந்து, ‘அரசனுக்கு நீ கூறியது என்ன? அரசன் உனக்குக் கூறியது என்ன? எங்களுக்கு அதை மறைக்காதே, மறைத்தால் உன்னை நாங்கள் கொல்வோம்’ என்று சொன்னால், 26நீ அவர்களிடம், ‘நான் சாகும்படி யோனத்தானுடைய வீட்டுக்குத் திரும்பவும் என்னை அனுப்பவேண்டாம் என்று அரசனிடம் வேண்டிக்கொண்டேன்’ என்று சொல்” என்று கூறினான்.
27அதுபோலவே அதிகாரிகளெல்லாரும் எரேமியாவிடம் வந்து, கேள்வி கேட்டார்கள்; அரசன் தனக்குக் கட்டளையிட்ட இந்த வார்த்தைகளுக்கேற்ப அவன் பதில் கூறினான். அரசனுடன் எரேமியா பேசியதை அவர்கள் ஒருவரும் அறிந்திராதபடியால், அவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.
28எருசலேம் பிடிக்கப்படும் நாள்வரைக்கும் எரேமியா காவற்கூடத்தின் முற்றத்திலேயே இருந்தான்.
எருசலேமின் வீழ்ச்சி
எருசலேம் பிடிக்கப்பட்ட விதம் இதுவே:

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in