YouVersion Logo
Search Icon

யோபு 29

29
யோபுவின் முன்னைய நிலை
1யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது:
2“கடந்துபோன மாதங்களை, இறைவன் என்னைக் கண்காணித்த நாட்களை,
நான் எவ்வளவாய் விரும்புகிறேன்!
3அந்நாட்களில் அவருடைய விளக்கு என் தலைமேல் பிரகாசித்தது;
அவருடைய ஒளியினால் நான் இருளில் நடந்தேன்.
4வாலிப நாட்களில்,
இறைவனின் நெருங்கிய நட்பு என் வீட்டை ஆசீர்வதித்தது.
5எல்லாம் வல்லவர் என்னோடு இருந்தார்,
என் பிள்ளைகளும் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
6என் காலடிகள் வெண்ணெயால் கழுவப்பட்டது;
கற்பாறையிலிருந்து எனக்காக ஒலிவ எண்ணெய் ஊற்றெடுத்துப் பாய்ந்தது.
7“அந்நாட்களில் நான் பட்டணத்தின் வாசலுக்குச் சென்று,
பொது இடத்தில் எனது இருக்கையில் அமரும்போது,
8வாலிபர்கள் என்னைக் கண்டு ஒதுங்கி நின்றார்கள்;
முதியவர்கள் எழுந்து நின்றார்கள்.
9அதிகாரிகள் பேச்சை நிறுத்திவிட்டு
தங்கள் கைகளால் வாயை மூடிக்கொண்டார்கள்.
10உயர்குடி மக்களின் குரல்களும் அடங்கின,
அவர்களுடைய நாவுகள் மேல்வாயோடு ஒட்டிக்கொண்டன.
11என்னைக் கேட்டவர்கள் என்னைப்பற்றி நன்றாக பேசினார்கள்,
என்னைக் கண்டவர்களும் என்னைப் பாராட்டினார்கள்.
12ஏனெனில் உதவிக்காக அழுத ஏழைகளையும்,
உதவுவாரில்லாத தந்தையற்றவர்களையும் நான் காப்பாற்றினேன்.
13செத்துக்கொண்டிருந்த மனிதன் என்னை ஆசீர்வதித்தான்;
நான் விதவையைத் தன் உள்ளத்தில் மகிழ்ந்து பாடச்செய்தேன்.
14நான் நேர்மையை என் உடையாக அணிந்திருந்தேன்;
நியாயம் என் அங்கியாகவும், தலைப்பாகையாகவும் அமைந்திருந்தது.
15நான் குருடனுக்குக் கண்களாயும்,
முடவனுக்குக் கால்களாயும் இருந்தேன்.
16நான் தேவையுள்ளோருக்கு தகப்பனாக இருந்து,
அறியாதவனின் வழக்கில் நான் அவனுக்கு உதவினேன்.
17நான் கொடியவர்களின் கூர்மையானப் பற்களை உடைத்து,
அவர்களின் பற்களில் சிக்குண்டவர்களை விடுவித்தேன்.
18“நான், ‘என் வீட்டில் சாவேனென்றும்,
என் நாட்கள் கடற்கரை மணலைப்போல் பெருகும்’ என்றும் நினைத்தேன்.
19என் வேர் தண்ணீரை எட்டும் என்றும்,
என் கிளைகளில் இரவு முழுவதும் பனி படர்ந்திருக்கும் என்றும் எண்ணினேன்.
20என் மகிமை மங்காது;
என் வில் எப்போதும் கையில் புதுப்பெலனுடன் இருக்கும். என எண்ணினேன்.
21“அந்நாட்களில் மனிதர் ஆவலுடன் எனக்குச் செவிகொடுத்து,
என் ஆலோசனைக்கு மவுனமாய்க் காத்திருந்தார்கள்.
22நான் பேசியபின் அவர்கள் தொடர்ந்து பேசவில்லை;
என் வார்த்தைகள் அவர்கள் செவிகளில் மெதுவாய் விழுந்தன.
23மழைக்குக் காத்திருப்பதுபோல் அவர்கள் எனக்குக் காத்திருந்து,
கோடை மழையைப்போல் என் வார்த்தைகளைப் பருகினார்கள்.
24நான் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தபோது,
அவர்களால் அதை நம்பமுடியவில்லை;
என் முகமலர்ச்சியை மாற்றவுமில்லை.
25நானே அவர்களுக்கு வழியைத் தெரிந்தெடுத்து, அவர்களின் தலைவனாயிருந்தேன்;
தன் படைகளின் மத்தியில் உள்ள ஒரு அரசனைப்போலவும்,
கவலைப்படுகிறவர்களைத் தேற்றுகிறவன்போலவும் நான் இருந்தேன்.

Currently Selected:

யோபு 29: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in