YouVersion Logo
Search Icon

யோபு 3

3
யோபு பேசுதல்
1அதற்குப்பின் யோபு தன் வாயைத் திறந்து தன் பிறந்த நாளைச் சபித்தான், 2யோபு சொன்னதாவது:
3“நான் பிறந்த நாளும்,
‘ஒரு ஆண் குழந்தை உற்பத்தியானது!’ என்று சொல்லப்பட்ட இரவும் அழியட்டும்.
4அந்த நாள் இருளடையட்டும்;
உன்னதத்தின் இறைவன் அதைக் கவனத்தில் கொள்ளாதிருக்கட்டும்;
அதில் ஒளி பிரகாசியாதிருக்கட்டும்.
5அந்த நாளை இருளும்,
நிழலும் ஒருமுறை பற்றிக்கொள்ளட்டும்;
மேகம் அதின்மேல் மூடிக்கொள்ளட்டும்;
மந்தாரம் அதின் வெளிச்சத்தை மூழ்கடிக்கட்டும்.
6அந்த இரவைக் காரிருள் பிடிப்பதாக;
வருடத்தின் நாட்களில் அது சேர்க்கப்படாத நாளாகவும்,
மாதங்களிலும் குறிக்கப்படாமலும் போவதாக.
7அந்த இரவு பாழாவதாக;
அதில் மகிழ்ச்சியின் சத்தம் எதுவும் கேளாதிருக்கட்டும்.
8நாட்களைச் சபிக்கிறவர்களும், லிவியாதான் என்னும் பெரிய பாம்பை,
எழுப்புகிறவர்களும் அதைச் சபிக்கட்டும்.
9அந்த நாளின் விடியற்கால நட்சத்திரங்கள் இருளடையட்டும்;
பகல் வெளிச்சத்திற்காக அது வீணாய்க் காத்திருக்கட்டும்;
அது அதிகாலையின் ஒளிக்கீற்றுகளைக் காணாதிருக்கட்டும்.
10ஏனெனில், அந்த நாள் என் கண்களில் இருந்து கஷ்டத்தை மறைக்காமலும்,
என் தாயின் கருப்பையை அடைக்காமலும் போயிற்றே.
11“பிறக்கும்போதே ஏன் நான் அழிந்துபோகவில்லை?
நான் கருப்பையில் இருந்து வெளியே வரும்போதே ஏன் சாகவில்லை?
12என்னை ஏற்றுக்கொள்ள மடியும்,
எனக்குப் பால் கொடுக்க மார்பகங்களும் ஏன் இருந்தன?
13அவ்வாறு இல்லாதிருந்தால்,
நான் அமைதியாய், இளைப்பாறுவேனே!
14இப்பொழுது பாழாய்க்கிடக்கும் இடங்களில் தங்களுக்கு அரண்மனைகளைக் கட்டிய
பூமியின் அரசர்களோடும், ஆலோசகர்களோடும்,
15பொன்னை உடையவர்களும்,
தங்கள் வீடுகளை வெள்ளியால் நிரப்பினவர்களுமான ஆளுநர்களோடும் நான் இளைப்பாறுவேனே.
16அல்லது செத்துப்பிறந்த குழந்தையைப் போலவும்,
பகல் வெளிச்சத்தைக் காணாத பாலகனைப் போலவும் நான் ஏன் தரையில் புதைக்கப்படவில்லை?
17கொடியவர்கள் அங்கே கலகத்திலிருந்து ஓய்ந்திருப்பார்கள்;
சோர்வுற்றோர் அங்கே இளைப்பாறுவார்கள்.
18கைதிகள்கூட அங்கே சுகம் அனுபவிப்பார்கள்;
அடிமைகளை நடத்துபவர்களின் சத்தத்தை இனி அவர்கள் கேட்பதில்லை.
19அங்கே சிறியவர்களும், பெரியவர்களும் இருக்கிறார்கள்;
அத்துடன் அடிமையும் தனது தலைவனிடமிருந்நு விடுதலையாகிறான்.
20“அவலத்தில் மூழ்கியிருப்பவனுக்கு வெளிச்சம் எதற்கு,
உள்ளத்தில் கசப்பு உள்ளவனுக்கு வாழ்வு எதற்கு?
21மறைவான புதையல்களைவிட, சாவைத் தேடியும்,
அடையாதவர்களுக்கு வாழ்வு ஏன்?
22அவர்கள் கல்லறையைச் சென்றடையும்போது,
மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருப்பார்களா?
23இறைவனால் நெருக்கப்பட்டு,
அவன் போகும் பாதை மறைக்கப்பட்ட,
மனிதனுக்கு வாழ்வு ஏன் கொடுக்கப்பட்டிருக்கிறது?
24பெருமூச்சே எனது உணவு;
என் கதறுதல் தண்ணீராய்ப் புரண்டோடுகிறது.
25நான் எதற்கு பயந்தேனோ, அது என்மேல் வந்தது;
நான் எதற்கு அஞ்சினேனோ, அது எனக்கு நிகழ்ந்தது.
26எனக்கு சமாதானமோ, அமைதியோ,
இளைப்பாறுதலோ இல்லை. ஆனால் மனக்குழப்பத்தை மட்டும் அனுபவிக்கிறேன்.”

Currently Selected:

யோபு 3: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in