YouVersion Logo
Search Icon

யோபு 31

31
1“நான் ஒரு பெண்ணையும் இச்சையுடன் பார்க்கமாட்டேன்,
என என் கண்களோடு ஒப்பந்தம் செய்தேன்.
2ஆனாலும் உன்னதத்தில் இருக்கும் இறைவனிடமிருந்து என்ன பங்கு?
உன்னதத்தில் இருக்கும் எல்லாம் வல்லவர் அளிக்கும் சொத்து என்ன?
3கொடியவனுக்கு பேராபத்தும்,
தவறு செய்பவர்களுக்குப் பேரழிவும் அல்லவா?
4அவர் என் வழிகளைக் காணவில்லையோ?
என் ஒவ்வொரு காலடியையும் எண்ணவில்லையோ?
5“நான் பொய்யாய் நடந்திருந்து,
என் கால்கள் ஏமாற்ற விரைந்திருந்தால்,
6இறைவன் தராசில் என்னை நிறுத்தட்டும்,
நான் குற்றமற்றவன் என்பதை அவர் அறிந்துகொள்வார்.
7என் காலடிகள் பாதையைவிட்டு விலகியிருந்தால்,
அல்லது என் உள்ளம் என் கண்களைப் பின்பற்றியிருந்தால்,
அல்லது என் கைகள் கறைப்பட்டிருந்தால்,
8அப்பொழுது நான் விதைப்பதை மற்றவர்கள் உண்ணட்டும்,
என் விளைச்சல் வேரோடே பிடுங்கப்படட்டும்.
9“என் உள்ளம் ஒரு பெண்ணால் கவரப்பட்டு,
அயலானுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால்,
10அப்பொழுது என் மனைவி இன்னொருவனுக்கு மாவரைப்பாளாக;
பிற மனிதர்கள் அவளுடன் உறவுகொள்ளட்டும்.
11ஏனெனில், அது வெட்கக்கேடான,
தண்டிக்கப்படவேண்டிய பாவமாயிருக்கும்.
12அது பாதாளம்வரை அழிக்கும் நெருப்பு;
அது என் விளைச்சலை வேரோடே பிடுங்கிவிடும்.
13“என் வேலைக்காரருக்கும்,
வேலைக்காரிகளுக்கும் எனக்கு எதிராக மனக்குறை இருந்தபோது,
நான் அவர்களுக்கு நீதிவழங்க மறுத்திருந்தால்,
14இறைவன் என்னை எதிர்கொள்ளும்போது, நான் என்ன செய்வேன்?
அவர் என்னிடம் கணக்குக் கேட்கும்போது நான் என்ன பதில் சொல்வேன்?
15என்னை கருப்பையில் உண்டாக்கியவர் அவர்களையும் உண்டாக்கவில்லையோ?
எங்கள் இருவரையுமே எங்கள் தாய்மாரின் வயிற்றில் உருவாக்கியவர் அவரல்லவோ?
16“நான் ஏழைகளின் தேவைகளைக் கொடுக்க மறுத்து,
விதவைகளின் கண்களைக் கண்ணீர் விடுவதினால் இளைக்கப் பண்ணியிருக்கிறேனா?
17அல்லது அநாதைகளோடு என் உணவைப் பகிர்ந்துகொள்ளாமல்,
நான் மட்டும் சாப்பிட்டிருக்கிறேனா?
18ஆனால் நானோ இளவயதுமுதல் அவர்களை ஒரு தகப்பனைப்போல் வளர்த்தேனே;
என் பிறப்பிலிருந்தே விதவைகளுக்கு நான் வழிகாட்டினேனே.
19உடுக்க உடையின்றி ஒருவன் அழிவதையோ,
அல்லது ஏழை ஒருவன் உடையின்றி இருப்பதையோ நான் கண்டும்,
20என் செம்மறியாடுகளின் கம்பளி,
அவன் குளிரைப் போக்காததினால் அவன் இருதயம் என்னை ஆசீர்வதிக்காமல் இருக்குமோ?
21நீதிமன்றத்தில்#31:21 நீதிமன்றத்தில் அல்லது மக்கள் தீர்ப்புக்காக கூடும் நகர வாசல். எனக்குச் செல்வாக்கு இருப்பதை நான் அறிந்திருந்தும்,
அநாதைக்கு விரோதமாக நான் எனது கைகளை உயர்த்தியிருந்தால்,
22என் தோள்பட்டை தோளிலிருந்து கழன்று போகட்டும்,
அது மூட்டிலிருந்து முறிந்து போகட்டும்.
23இறைவனுடைய தண்டனைக்கு நான் பயந்ததினாலும்,
அவருடைய மாட்சிமையின் பக்தி எனக்கிருந்ததினாலும்
தீமையை என்னால் செய்ய முடியவில்லை.
24“நான் என் நம்பிக்கையை பொன்னின்மேல் வைத்து,
சுத்த தங்கத்தைப் பார்த்து, ‘நீயே என் பாதுகாப்பு’ எனச் சொல்லியிருந்தால்,
25என் செல்வம் பெரியதென்றும்,
அதை என் கைகளே சேர்த்ததென்றும் நான் மகிழ்ந்திருந்தால்,
26பிரகாசமுள்ள சூரியனையும்,
தன் மகிமையில் நகர்ந்து செல்லும் சந்திரனையும் கண்டு அதைப் பெரிதாக மதித்து,
27என் மனம் இரகசியமாகக் மயங்கி,
நான் அவைகளுக்கு மரியாதை முத்தமிட்டிருந்தால்,
28அப்பொழுது இவைகளும் தண்டனைக்குரிய பாவங்களாய் இருந்திருக்கும்;
நான் என் உன்னதத்திலுள்ள இறைவனுக்கு உண்மையற்றவனாய் இருந்திருப்பேன்.
29“என் பகைவனுக்கு வரும் அழிவைக் கண்டு நான் மகிழ்ந்தேனோ?
தீமை அவனுக்கு வந்தபோது, நான் ஏளனம் செய்ததுண்டோ?
30இல்லையே! நான் அவனுடைய வாழ்வுக்கு எதிராகச் சாபமிட்டுப்
பாவம் செய்யும்படி என் வாயை அனுமதித்ததில்லையே.
31‘யோபுவின் உணவை உண்டு திருப்தியடையாதவன் யார்?’
என என் வீட்டிலுள்ள மனிதர் ஒருபோதும் சொல்லாது இருந்ததுண்டோ?
32வழிப்போக்கருக்கு என் வாசல்களைத் திறந்தேன்
பிறர் வீதியில் தன் இரவைக் கழிக்கவில்லையே!
33மனிதர் செய்வதுபோல, என் குற்றத்தை என் உள்ளத்தில் ஒளித்து,
என் பாவத்தை மறைத்தேனோ?
34நான் மக்கள் கூட்டத்திற்குப் பயந்ததாலும்,
குலத்தவர்களின் இகழ்ச்சிக்கு அஞ்சினதாலும்
வெளியே போகாமல் மவுனமாய் இருந்தேனோ?
35“நான் சொல்வதைக் கேட்க யாரும் இல்லையோ?
இதோ நான் சொன்ன எனது எதிர்வாதத்தில் கையொப்பமிடுகிறேன்.
எல்லாம் வல்லவர் எனக்குப் பதிலளிக்கட்டும்,
என்னைக் குற்றம் சாட்டுகிறவர் தனது குற்றச்சாட்டை எழுதிக்கொடுக்கட்டும்.
36நிச்சயமாக அதை நான் என் தோளின்மேல் வைத்து,
ஒரு மகுடத்தைப்போல் சூட்டிக்கொள்வேன்.
37நான் ஒரு இளவரசனைப்போல் அவரை அணுகி,
என் ஒவ்வொரு காலடிக்கும் கணக்குக் கொடுப்பேன்.
38“என் நிலம் எனக்கெதிராக அழுது புலம்பினாலும்,
அதின் வரப்புகள் கண்ணீரால் நனைந்திருந்தாலும்,
39நான் பணம் கொடுக்காமல் அதின் விளைவை விழுங்கியிருந்தாலும்,
அல்லது அதின் குத்தகைக்காரனை உள்ளமுடையச் செய்திருந்தாலும்,
40அந்த நிலத்தில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும்,
வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கட்டும்.”
யோபுவின் வார்த்தைகள் இத்துடன் முடிவடைகின்றன.

Currently Selected:

யோபு 31: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in