YouVersion Logo
Search Icon

யோசுவா 11

11
வடக்கு அரசரை வெற்றிகொள்ளுதல்
1ஆத்சோர் அரசன் யாபீன் இந்த வெற்றிகளைப்பற்றிக் கேள்விப்பட்டதும், அருகிலுள்ள பட்டணங்களின் அரசர்களுக்கு ஒரு அவசரசெய்தி அனுப்பினான். அவர்கள்: மாதோனின் அரசன் யோபாப், சிம்ரோனின் அரசன், அக்சாபின் அரசன், 2மலைகளிலும், கின்னரோத்திற்குத் தெற்கேயுள்ள அரபாவிலும், மேற்கே மலையடிவாரங்களிலும், மேற்கேயுள்ள நாபோத் தோரிலும் ஆட்சி செய்த வடதிசை அரசர்கள் ஆகியோரே; 3அத்துடன் கிழக்கிலும், மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், ஏத்தியர், பெரிசியர், மலைநாட்டிலுள்ள எபூசியர், மிஸ்பா என்னும் பகுதியில் எர்மோன் மலையடிவாரத்தில் வாழ்ந்த ஏவியர் ஆகியோரிடத்திற்கும் செய்தி அனுப்பினான். 4அவர்கள் தங்கள் எல்லாப் படைகளோடும், குதிரைகளோடும், இரதங்களோடும் புறப்பட்டுவந்து ஒன்றுகூடினர். இந்த பெரும்படை கடற்கரை மணலைப்போல எண்ணிக்கையில் அதிகமாயிருந்தது. 5இந்த அரசர்களெல்லோரும் இஸ்ரயேலருக்கு எதிராகப் போர் செய்ய ஒன்றுகூடி, மேரோம் என்னும் நீரூற்றருகே முகாமிட்டார்கள்.
6அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ அவர்களுக்குப் பயப்படாதே. நாளை இந்நேரத்தில் நான் அவர்கள் அனைவரையும் கொல்லப்பட்டவர்களாக இஸ்ரயேலரிடம் ஒப்படைப்பேன். நீ அவர்களுடைய குதிரைகளின் பின்கால் நரம்புகளை வெட்டி, அவர்களுடைய இரதங்களையும் எரித்துவிடவேண்டும்” என்றார்.
7யோசுவாவும் அவனுடைய படையினர் அனைவரும், மேரோம் நீரூற்றருகே எதிரிகளை திடீரெனத் தாக்கினார்கள். 8யெகோவா எதிரிகளை இஸ்ரயேலரிடம் ஒப்படைத்தார். இஸ்ரயேலர் அவர்களை முறியடித்து பெரிய சீதோன், மிஸ்ரபோத்மாயீம், கிழக்கேயுள்ள மிஸ்பே பள்ளத்தாக்கு ஆகிய இடங்கள்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்கள். அவர்களில் ஒருவரையும் தப்பவிடவில்லை. 9யெகோவா கட்டளையிட்டபடியே யோசுவா அவர்களுக்குச் செய்தான்: அவன் குதிரைகளின் பின்கால் தசை நரம்புகளை வெட்டி அவற்றை முடமாக்கி இரதங்களையும் எரித்தான்.
10அவ்வேளை யோசுவா திரும்பிவந்து, ஆத்சோர் நாட்டைக் கைப்பற்றி அதன் அரசனை வாளுக்கு இரையாக்கினான். ஆத்சோர் இந்த அரசுகளுக்கெல்லாம் தலைமைப் பட்டணமாய் இருந்தது. 11அங்குள்ள ஒவ்வொருவரும் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள். இஸ்ரயேலர் சுவாசமுள்ள ஒன்றையும் தப்பவிடாமல், அவர்கள் எல்லோரையும் முழுவதும் அழித்துப்போட்டார்கள். யோசுவா முழு ஆத்சோரையுமே எரித்துப்போட்டான்.
12யோசுவா அந்த அரசர்கள் வாழும் எல்லாப் பட்டணங்களையும் கைப்பற்றி, அவற்றின் அரசர்களை வாளுக்கு இரையாக்கினான். யெகோவாவின் அடியானாகிய மோசே கட்டளையிட்டபடி அவற்றையெல்லாம் யோசுவா முழுவதும் அழித்தான். 13ஆனாலும் இஸ்ரயேலர் யோசுவா எரித்துப்போட்ட ஆத்சோர் பட்டணத்தைத்தவிர, மேடுகளின்மேல் கட்டப்பட்ட எந்தப்பட்டணத்தையும் எரிக்கவில்லை. 14இந்த நகரங்களிலிருந்து கொள்ளைப்பொருட்களையும் மிருகங்களையும் இஸ்ரயேலர் தங்களுக்கெனக் கொண்டுசென்றார்கள். ஆனால் சுவாசமுள்ள ஒருவரையும் தப்பவிடாமல் அம்மக்கள் எல்லோரும் முற்றுமாக அழியும்வரை, அவர்களைத் தங்கள் வாள்களுக்கு இரையாக்கினார்கள். 15யெகோவா தமது அடியவனாகிய மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான். யோசுவாவும் அதைச் செய்தான்.
16மோசேக்கு யெகோவா அளித்த கட்டளைகள் ஒன்றையேனும், யோசுவா நிறைவேற்றாமல் விடவில்லை. இப்படியாக யோசுவா முழு நாட்டையும் கைப்பற்றிக்கொண்டான். அவையாவன; மலைநாடு, நெகேப் முழுவதும், கோசேனின் ஆட்சிக்குட்பட்ட பகுதி, மேற்கு மலையடிவாரங்கள், அரபாவும் இஸ்ரயேலின் மலைகளும், அதன் அடிவாரங்களுமாகும், 17இவை சேயீர் நோக்கி உயர்ந்துசெல்லும் ஆலாக் மலையிலிருந்து, எர்மோன் மலைக்குக் கீழே இருக்கும் லெபனோன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பாகால்காத்வரை பரந்திருந்தது. யோசுவா இப்பிரதேசங்களை ஆண்ட அரசர்கள் அனைவரையும் சிறைப்பிடித்து, அவர்களை வெட்டிக்கொன்றான். 18யோசுவா நீண்டகாலமாக அந்த அரசர்களுக்கெதிராகப் போர்தொடுத்திருந்தான். 19கிபியோனில் வாழ்ந்த ஏவியரைத்தவிர, வேறெந்த நாட்டினரும் இஸ்ரயேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை. இஸ்ரயேலர் அப்பட்டணங்களையெல்லாம் போர்புரிந்தே கைப்பற்றினார்கள். 20யெகோவாவே இஸ்ரயேலருடன் போர்புரியும்படி அவர்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தினார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்களை இரக்கமின்றி அழிக்கும்படிக்கே இப்படிச் செய்தார்.
21அக்காலத்தில் யோசுவா போய் மலைநாட்டிலிருந்த ஏனாக்கியரை அழித்தான்: அவர்கள் எப்ரோன், தெபீர், ஆனாப் ஆகிய பகுதிகளிலும், யூதா மலைநாடுகளிலும், இஸ்ரயேல் மலைநாடுகளிலும் வாழ்ந்துவந்தனர். யோசுவா அவர்களையும், அவர்கள் பட்டணங்களையும் முற்றிலும் அழித்தான். 22இஸ்ரயேலர் வாழ்ந்த நாட்டின் எல்லைக்குள் ஒரு ஏனாக்கியருமே தப்பியிருக்கவில்லை. ஆயினும் காசா, காத், அஸ்தோத் ஆகிய பகுதிகளில் மட்டும் சிலர் வசித்தனர்.
23இவ்வாறாக யெகோவா மோசேக்கு அறிவுறுத்தியிருந்தபடியே யோசுவா முழு நாட்டையும் கைப்பற்றி, இஸ்ரயேலருக்கு அவர்கள் கோத்திரப் பிரிவுகளின்படி அவற்றைச் சொத்துரிமை நிலமாகக் கொடுத்தான். அதன்பின் நாட்டில் போர் ஓய்ந்து அமைதி நிலவியது.

Currently Selected:

யோசுவா 11: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in