YouVersion Logo
Search Icon

யோசுவா 14

14
யோர்தானின் மேற்கேயுள்ள நாட்டைப் பங்கிடுதல்
1கானான் நாட்டில் இஸ்ரயேலர் சொத்துரிமையாகப் பெற்றுக்கொண்ட பகுதிகள் இவைகளே, ஆசாரியனான எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், இஸ்ரயேல் வம்சத்தாரின் தலைவர்களும் அந்நிலங்களை மக்களுக்குப் பகிர்ந்துகொடுத்தார்கள். 2மோசேயின் மூலம் யெகோவா கட்டளையிட்டபடியே சொத்துரிமை நிலம் ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சீட்டுப்போட்டு பகிர்ந்துகொடுக்கப்பட்டது. 3மோசே மற்ற இரண்டரை கோத்திரங்களுக்கும் யோர்தானுக்குக் கிழக்கே நிலத்தைச் சொத்துரிமையாகப் பங்கிட்டுக்கொடுத்திருந்தான். ஆனால் லேவியருக்கோ மற்றவர்களுக்கு மத்தியில் சொத்துரிமை வழங்கப்படவில்லை. 4ஏனெனில் யோசேப்பின் மகன்களான மனாசே, எப்பிராயீம் ஆகியோர் இரு கோத்திரங்களாக இருந்தனர். லேவியர்களோ நிலத்தில் பங்கொன்றும் பெறவில்லை. அவர்கள் வசிப்பதற்கு நகரங்களும், அவர்களுடைய மந்தைகளுக்கு மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன. 5இவ்விதம் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் நிலத்தைப் பங்கிட்டுக்கொண்டார்கள்.
எபிரோன் காலேபுக்குக் கொடுக்கப்படுதல்
6யூதா மனிதர் கில்காலில் இருக்கும் யோசுவாவிடம் வந்தார்கள். அப்பொழுது கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் யோசுவாவிடம், “காதேஸ் பர்னேயாவில் யெகோவா என்னையும் உம்மையும் குறித்து இறைவனின் மனிதனாகிய மோசேயிடம் கூறியதை நீர் நன்கு அறிவீர். 7காதேஸ் பர்னேயாவிலிருந்து யெகோவாவின் அடியானாகிய மோசே, கானான் நாட்டைப் பார்த்துவரும்படி என்னை அனுப்பியபோது, எனக்கு நாற்பது வயதாய் இருந்தது. என் மனதில் சரியெனத் தென்பட்டதின்படி மோசேயிடம் ஒரு அறிக்கை கொண்டுவந்தேன். 8ஆனால் என்னுடன் வந்த என் சகோதரர்கள் இஸ்ரயேலரின் உள்ளங்களை பயத்தினால் கலங்கப்பண்ணினார்கள். நானோ என் இறைவனாகிய யெகோவாவை மனப்பூர்வமாய்ப் பின்பற்றினேன். 9அப்படியே, ‘நீ உன் இறைவனாகிய யெகோவாவை மனப்பூர்வமாய்ப் பின்பற்றியபடியால், நீ காலடி வைத்த இடம் முழுவதும் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றென்றுமுள்ள சொத்துரிமை நிலமாக இருக்கும்’#14:9 உபா. 1:36 என்று மோசே அந்நாளில் வாக்குறுதி அளித்தான்.
10“யெகோவா இவற்றை மோசேக்கு வாக்களித்ததிலிருந்து இன்றுவரை நாற்பத்தைந்து ஆண்டுகள் என்னை உயிருடன் வைத்திருக்கிறார். அக்காலத்தில் இஸ்ரயேலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். இப்பொழுது எனக்கு எண்பத்தைந்து வயது. 11அன்று மோசே என்னை அனுப்பியபோது இருந்ததுபோலவே இன்றும் நான் பெலனுடையவனாய் இருக்கிறேன். அன்று இருந்ததுபோலவே இன்றும் போருக்குப் போகத்தக்க வல்லமையுடையவனாயும் இருக்கிறேன். 12எனவே யெகோவா அந்த நாளில் எனக்குக் கொடுப்பதாக வாக்களித்த அந்த மலைநாட்டை இப்பொழுது எனக்குத் தாரும். ஏனாக்கியர் அங்கே வசிக்கிறார்களென்றும், அவர்களுடைய பட்டணங்கள் பெரிய அரண்களுடைய பட்டணங்களென்றும் நீர் கேள்விப்பட்டிருக்கிறீர். யெகோவா சொன்னபடியே அவருடைய உதவியுடன் நான் அவர்களைத் துரத்திவிடுவேன்” என்றான்.
13எனவே யோசுவா எப்புன்னேயின் மகனாகிய காலேபை ஆசீர்வதித்து, அவனுக்கு எப்ரோன் பிரதேசத்தைச் சொத்துரிமையாகக் கொடுத்தான். 14கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவை முழுமனதுடன் பின்பற்றியதால், அன்றிலிருந்து இன்றுவரை எப்ரோன் பிரதேசம் அவனுக்குச் சொந்தமாக இருந்து வருகிறது. 15இதற்கு முன்பு எப்ரோன் நகரம் கீரியாத் அர்பா என அழைக்கப்பட்டது. ஏனாக்கியருக்குள்ளே மதிப்புக்குரியவனான அர்பாவின் பெயரால் அந்நகரம் கீரியாத் அர்பா என அழைக்கப்பட்டது.
போர் ஓய்ந்திருந்ததினால் தேசம் அமைதியாய் இருந்தது.

Currently Selected:

யோசுவா 14: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in