YouVersion Logo
Search Icon

புலம்பல் 3

3
# 3 இந்த அதிகாரம் ஒரு அகரவரிசை கவிதை; இதன் வசனங்கள் எபிரெய எழுத்துக்களின் அடுத்தடுத்த எழுத்துக்களுடன் தொடங்குகின்றன. 1அவருடைய கோபத்தின் பிரம்பினால்
உண்டான வேதனையைக் கண்ட மனிதன் நானே.
2அவர் என்னை வெளியே துரத்தி,
வெளிச்சத்தில் அல்ல, இருளிலேயே நடக்கச் செய்தார்.
3உண்மையாக, திரும்பதிரும்ப நாள்முழுவதும்
அவர் தமது கையை என்மேல் திருப்பினார்.
4எனது தசையையும் தோலையும் முதுமையடையும்படி செய்தார்,
என் எலும்புகளையும் உடைத்துவிட்டார்.
5அவர், கசப்பும் கஷ்டமும்
முற்றுகையிட்டு என்னைச் சூழும்படி செய்தார்.
6வெகுகாலத்திற்குமுன் இறந்தவர்களைப்போல்,
என்னை இருளில் குடியிருக்கப் பண்ணினார்.
7நான் தப்பிவிடாதபடி அவர் என்னைச் சுற்றி வேலியடைத்தார்;
அவர் பாரமான சங்கிலிகளை என்மேல் சுமத்தினார்.
8நான் உதவிக்காகக் கூப்பிடும்போதோ,
கதறி அழுகிறபோதோ அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுக்கிறார்.
9செதுக்கிய கற்களால் அவர் என் வழியைத் தடைசெய்திருக்கிறார்;
அவர் என் பாதைகளைக் கோணலாக்கியிருக்கிறார்.
10பதுங்கியிருக்கும் கரடியைப்போலவும்,
மறைந்திருக்கும் சிங்கத்தைப் போலவும்,
11அவர் என்னைப் பாதையிலிருந்து இழுத்து,
என்னை உருக்குலைத்து உதவியின்றிக் கைவிட்டார்.
12அவர் தம்முடைய வில்லை வளைத்து,
தமது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார்.
13அவர் தன்னுடைய அம்புக் கூட்டிலிருந்த
அம்புகளினால் என் இருதயத்தைக் குத்தினார்.
14நான் என்னுடைய எல்லா மக்களுக்கும் ஒரு சிரிப்புக்குரிய பொருளானேன்;
அவர்கள் நாள்முழுவதும் பாடலினால் என்னை ஏளனம் செய்கிறார்கள்.
15அவர் என்னை கசப்பினால் நிரப்பி,
காடியின் கசப்பினால் என்னை வெறுப்படையச் செய்தார்.
16அவர் என் பற்களைச் சரளைக் கல்லினால் உடைத்தார்;
அவர் என்னைப் புழுதியில் மிதித்துவிட்டார்.
17நான் சமாதானத்தை இழந்திருக்கிறேன்;
சுகவாழ்வு என்ன என்பதையும் மறந்துவிட்டேன்.
18ஆகையால் நான் கூறினதாவது, “என் சீர்சிறப்பும், யெகோவாவிடம் நான் கொண்டிருந்த
எல்லா எதிர்பார்ப்பும் இல்லாமல் போயிற்று.”
19நான் எனது துன்பத்தையும், அலைச்சலையும்,
அதன் மனக் கசப்பையும், காடியையும் நினைவுகூருகிறேன்.
20நான் அவைகளை நன்கு நினைவுகூருகிறேன்,
அப்பொழுது என் ஆத்துமா எனக்குள்ளே சோர்ந்துபோயிற்று.
21ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன்.
அதனால் எனக்கு நம்பிக்கை உண்டு:
22அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம்.
ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை.
23உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன;
உமது உண்மை பெரியது.
24நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு;
ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.”
25யெகோவாவிடம் எதிர்பார்ப்பு வைக்கிறவருக்கும்,
அவரைத் தேடுகிறவர்களுக்கும் அவர் நல்லவர்.
26எனவே யெகோவாவின் இரட்சிப்புக்காக
அமைதியாய் காத்திருப்பது நல்லது.
27இளைஞனாய் இருக்கும்போதே
அவரது கண்டனத்தின் நுகத்தைச் சுமப்பது ஒரு மனிதனுக்கு நல்லது.
28யெகோவா தாமே அதை அவன்மேல் வைத்தபடியால்,
அவன் மவுனமாய் தனிமையாய் அனுபவிக்கட்டும்.
29அவன் புழுதியில் தன் முகத்தைப் புதைக்கட்டும்,
ஒருவேளை இன்னமும் அவனுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம்.
30அவன் தன்னை அடிப்பவனுக்குத் தன் மறு கன்னத்தைக் கொடுக்கட்டும்,
பகைவன் கொடுக்கும் அவமானங்களை ஏற்றுக்கொள்ளட்டும்.
31ஏனென்றால், ஆண்டவரால் ஒருவரும்
என்றென்றும் கைவிடப்படுவதில்லை.
32அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார்.
அவரது நேர்மையான அன்பு அவ்வளவு பெரியது.
33அவர் துன்பத்தையோ துக்கத்தையோ
மனிதரின் பிள்ளைகள்மேல் விருப்பத்துடன் வருவிப்பதில்லை.
34நாட்டிலுள்ள சிறைக் கைதிகளையெல்லாம்
கால்களின்கீழ் மிதிப்பதையும்,
35ஒருவனின் மனித உரிமைகளை
மகா உன்னதமானவரின் முன்னிலையில் மறுப்பதையும்,
36ஒரு மனிதனுக்கு நீதி வழங்கப்படாதிருப்பதையும்
யெகோவா காணாதிருப்பாரோ?
37யெகோவா உத்தரவிடாவிட்டால்,
எதையாவது பேசி அதை நிகழப்பண்ண யாரால் முடியும்?
38பேரழிவு, நல்ல காரியங்கள் ஆகிய இரண்டும்
மகா உன்னதமான இறைவனுடைய வாயிலிருந்தல்லவோ வருகின்றன.
39வாழ்கிற எந்த மனிதனும்,
தன் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படும்போது, ஏன் முறையிடவேண்டும்?
40ஆகவே நாங்கள் எங்கள் வழிகளை ஆராய்ந்து சோதிப்போம்,
யெகோவாவிடம் திரும்புவோம்.
41எங்கள் இருதயங்களையும், கைகளையும்
பரலோகத்திலிருக்கும், இறைவனுக்கு நேராக உயர்த்தி:
42“நாங்கள் பாவம் செய்து கலகம் பண்ணினோம்,
நீர் எங்களை மன்னிக்கவில்லை.
43“நீர் கோபத்தினால் உம்மை மூடிக்கொண்டு எங்களைப் பின்தொடர்ந்தீர்;
இரக்கமின்றி எங்களைக் கொன்றுபோட்டீர்.
44மேகத்தினால் நீர் உம்மை மூடிக்கொண்டிருப்பதால்,
மன்றாட்டு எதுவும் உம்மிடத்தில் வராது.
45நீர் எங்களை நாடுகளுக்குள்
குப்பையும் கூழமுமாக ஆக்கியிருக்கிறீர்.
46“எங்கள் பகைவர்கள் யாவரும் தங்கள் வாயை விரிவாகத் திறந்து
எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
47எங்கள்மேல் பயங்கரமும் கண்ணியும்,
பாழும் அழிவும் வந்தன.”
48என் மக்கள் அழிக்கப்பட்டதனால்
என் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஓடுகிறது.
49என் கண்கள் ஓய்வின்றி,
கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும்.
50பரலோகத்திலிருந்து யெகோவா
கண்ணோக்கிப் பார்க்கும் வரைக்கும்.
51என் நகரத்திலுள்ள பெண்களின் நிலைமையை நான் காண்கையில்,
என் ஆத்துமா துக்கிக்கிறது.
52காரணமின்றி எனக்குப் பகைவர்களாயிருந்தவர்கள்,
என்னை ஒரு பறவையைப்போல் வேட்டையாடினார்கள்.
53அவர்கள் என் வாழ்வை முடிக்க முயன்று,
குழியில் தள்ளி என்மேல் கற்களை எறிந்து மூடினார்கள்;
54வெள்ளம் என் தலையை மூடிக்கொண்டது.
நான் அழிந்து போகப்போகிறேன் என்று நினைத்தேன்.
55யெகோவாவே, குழியின் ஆழத்திலிருந்து,
உமது பெயரைச்சொல்லிக் கூப்பிட்டேன்.
56“ஆறுதலுக்காகக் கதறும் என் சத்தத்திற்கு உமது செவியை மூடிக்கொள்ளாதேயும்”
என்ற என் விண்ணப்பத்தை நீர் கேட்டீர்.
57நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் என் அருகே வந்து,
“நீ பயப்படாதே” என்றீர்.
58யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்;
என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
59யெகோவாவே! எனக்குச் செய்யப்பட்ட தீமைகளை நீர் கண்டிருக்கிறீர்.
நீர் எனக்காக வாதாடும்!
60அவர்களுடைய பழிவாங்குதலின் ஆழத்தையும்,
அவர்கள் எனக்கெதிராகப் போட்ட சதித்திட்டங்களையும் கண்டிருக்கிறீர்.
61யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும்,
எனக்கெதிரான அவர்களுடைய எல்லா சதிகளையும் கேட்டீர்;
62அதை என் பகைவர்கள் நாள்முழுவதும் இரகசியமாய்ப் பேசி,
எனக்கு எதிராய் முணுமுணுக்கிறார்கள்.
63அவர்களைப் பாரும்! உட்கார்ந்தாலும் நின்றாலும்,
அவர்கள் தங்கள் பாடல்களால் என்னை கேலி செய்கிறார்கள்.
64யெகோவாவே, அவர்களுக்குத் தகுந்த பதில் செய்யும்.
அவர்களின் கைகள் செய்தவற்றுக்காக பதில் செய்யும்.
65அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும்,
உமது சாபம் அவர்கள்மேல் இருக்கட்டும்.
66கோபத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து,
யெகோவாவின் வானங்களின் கீழ் இருந்து அவர்களை அழித்துப்போடும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in