YouVersion Logo
Search Icon

நீதிமொழி 2

2
ஞானத்தினால் வரும் நன்மைகள்
1என் மகனே, ஞானத்திற்கு உன் செவிசாய்த்து,
புரிந்துகொள்ளுதலில் உன் இருதயத்தைச் செலுத்தி,
2நீ என் ஞானத்தை ஏற்றுக்கொண்டு,
என் கட்டளைகளை உன் உள்ளத்தில் சேர்த்துவை.
3உண்மையில், நீ நுண்ணறிவுக்காக வேண்டுதல்செய்து,
புரிந்துகொள்ளுதலுக்காக மன்றாடி,
4சுத்த வெள்ளியைத் தேடுவதுபோல் தேடி,
புதையலை ஆராய்வதுபோல அதை ஆராய்ந்தால்,
5அப்பொழுது நீ யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து விளங்கிக்கொள்வாய்;
இறைவனைப்பற்றிய அறிவைக் கண்டுகொள்வாய்.
6ஏனெனில் யெகோவாவே ஞானத்தைத் தருபவர்;
அறிவும் விவேகமும் அவருடைய வாயிலிருந்தே வருகின்றன.
7அவர் நீதிமான்களுக்கு வெற்றியைக் கொடுத்து,
குற்றமற்றவர்களாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயமாயிருந்து,
8அவர் நியாயத்தின் வழியைக் காத்துக்கொள்கிறார்;
தமக்கு உண்மையாய் இருப்பவர்களின் வழியைப் பாதுகாக்கிறார்.
9அப்பொழுது நீ நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றையும்
ஒவ்வொரு நல்ல வழியையும் விளங்கிக்கொள்வாய்.
10ஞானம் உன் உள்ளத்திற்குள் வரும்,
அறிவு உன் ஆத்துமாவிற்கு இன்பமாயிருக்கும்.
11அறிவுடைமை உன்னைப் பாதுகாக்கும்,
புரிந்துகொள்ளுதல் உன்னைக் காத்துக்கொள்ளும்.
12ஞானம் கொடிய மனிதர்களின் வழிகளிலிருந்தும்,
வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும் மனிதர்களிடமிருந்தும் உன்னைக் காப்பாற்றும்.
13அவர்கள் நேர்மையான வழியைவிட்டு விலகி,
இருளான வழியில் நடக்கிறார்கள்;
14அவர்கள் அநியாயம் செய்வதில் மகிழ்ச்சியடைந்து,
தீமையின் வஞ்சனையில் சந்தோஷப்படுகிறார்கள்;
15அவர்களுடைய செயல்களோ நேர்மையற்றவை,
அவர்களுடைய வழிகளோ தவறானவை.
16ஞானம் உன்னை விபசாரியிடமிருந்தும்
வசப்படுத்தும் வார்த்தைகள் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் காப்பாற்றும்.
17தன் இளவயதின் கணவனைக் கைவிட்டு,
இறைவனுக்கு முன்பாக தான் செய்த திருமண உடன்படிக்கையை புறக்கணித்தவள் அவள்.
18அவளுடைய வீடு மரணத்திற்கு உன்னை வழிநடத்துகிறது,
அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடம் கூட்டிச்செல்கிறது.
19அவளிடம் செல்பவர்கள் யாரும் திரும்புவதில்லை,
வாழ்வின் பாதைகளை அடைவதுமில்லை.
20இப்படியிருக்க, நீ நல்ல மனிதரின் வழியில் நடப்பாயாக,
நீதிமான்களின் பாதைகளையும் கைக்கொள்வாயாக.
21ஏனெனில் நீதிமான்கள் நாட்டில் வாழ்வார்கள்,
குற்றமற்றோர் அதில் நிலைத்திருப்பார்கள்.
22ஆனால் கொடியவர்கள் நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள்,
துரோகிகள் அதிலிருந்து எறியப்படுவார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in